Published : 04 Feb 2015 12:25 PM
Last Updated : 04 Feb 2015 12:25 PM
துப்பறிவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த தீம் மியூசிக்கைக் கேட்டால் அந்த ஹீரோவும், அவரது பெயரும்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். ஒரு நிஜ உளவாளியைத் தவிர, வேறு யாராவது உலகின் மிகச் சிறந்த உளவாளி கதாபாத்திரத்தை உருவாக்க முடியுமா? முடியாது. உலகின் சிறந்த கற்பனை உளவாளி ஜேம்ஸ் பாண்ட். அவரை உருவாக்கியவர் இயன் ஃபிளெமிங். ஒரு நிஜ உளவாளி.
உலகம் முழுவதும் பிரபலமான ஒரே கதாநாயகர் ஜேம்ஸ் பாண்ட். நாவல்கள், காமிக்ஸ், சினிமா என்று அனைத்துத் தளங்களிலும் வெற்றிபெற்ற ஒரே கதாபாத்திரம் அவர் மட்டுமே. “என் பெயர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்” என்று தன் பெயரை அவர் உச்சரிக்கும் விதம், அவருடைய 007 எண் ஆகிய இரண்டுமே அவரைவிட ரொம்பவும் பிரபலம்.
உருவான கதை:
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இயன் ஃபிளெமிங், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இரண்டாம் உலகப் போரில் கடற்படை உளவுத் துறையில் பணியாற்றினார். இவருடைய தலைமையில் ‘ஆபரேஷன் கோல்டன் ஐ’ என்ற திட்டம் செயல்பட்டது.
இவருடைய மேற்பார்வையில் மேலும் இரண்டு உளவுப் பிரிவுக் குழுக்கள் இயங்கின. இந்த விவரங்களை மையமாக வைத்துத்தான் பிற்காலத்தில் தன்னுடைய கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் ஃபிளெமிங் வடிவமைத்தார்.
போருக்குப் பிறகு ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக் குழுமத்தின் வெளிநாட்டு மேலாளராகச் செயல்பட்டார். அதில் ஒவ்வோர் ஆண்டும் அவருக்கு மூன்று மாதங்கள் விடுப்பு கிடைத்தன.
இவருடைய காதலியுடன் இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, கவனத்தை மாற்றிக்கொள்வதற்கு அவர் எழுதியதுதான் ‘கேசினோ ராயல்’ என்ற முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல். முதல் புத்தகம் உடனடியாக விற்றுத் தீர, அடுத்தடுத்து மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது ‘கேசினோ ராயல்’.
தன் கதாநாயகனுக்கான பெயரை யோசித்துக்கொண்டு இருந்தபோது புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளரான ஜேம்ஸ் பாண்ட் நினைவுக்கு வர, அவரது பெயரையே சூட்டினார். அவருடைய புத்தகத்தை டைப் செய்துகொடுத்தவர் டைம்ஸ் பத்திரிகையில் அவருக்குச் செயலாளராக இருந்த ஜான் ஹோவே என்ற சிவப்பு கூந்தலுடைய பெண்மணி.
இவரை மனதில் வைத்துதான் ஜேம்ஸ் பாண்டின் உளவுத்துறை செயலர் மணிப்பென்னி வடிவமைக்கப்பட்டார். போரில் தன்னுடைய மேலதிகாரியை மனதில் வைத்து உளவுத்துறைத் தலைவரான எம் கதாபாத்திரத்தை அமைத்தார்.
கதை:
11 வயதில் பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த ஜேம்ஸ், அத்தையின் பராமரிப்பில் வளர்கிறார். ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்ற அவர், நடத்தை காரணமாகப் பள்ளியில் இருந்து மாற்றப்படுகிறார். குத்துச்சண்டை, ஜூடோவில் சிறந்து விளங்கிய தன்னுடைய தந்தையின் நண்பர் உதவியுடன் கடற்படையில் சேர்கிறார். அதன் பிறகு அவரது திறமைகளை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.
கதாபாத்திரம்:
பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான ஹோகி கார்மைக்கேலின் உருவத்தை மனதில் கொண்டு, தன்னுடைய குணநலன்களுடன் ஜேம்ஸை, ஃபிளெமிங் உருவாக்கினார். ஜேம்ஸின் சூதாடும் வழக்கம், புகை பிடிப்பது, ஹோட்டல்கள், மதுபானத் தேர்வு போன்ற அனைத்துமே ஃபிளெமிங்கின் சொந்த விஷயங்களைப் பிரதிபலிப்பவைதான்.
ராணுவ உளவுத் துறை:
MI-6 என்று அழைக்கப்படும் பிரிவில்தான் ஜேம்ஸ் பாண்ட் உளவாளியாக இருக்கிறார். இப்பிரிவின் தலைவர் அட்மிரல் மைல்ஸ் என்ற மிஸ்டர் எம். அவருக்கு அடுத்த நிலையில் பில் டான்னரும், செயலாளராக மணிப்பென்னியும் இருக்க, ஜேம்ஸுக்குத் தேவையான நூதன ஆயுதங்களை க்யூ தயாரிக்கிறார்.
ஜேம்ஸ்பாண்டின் நண்பர்கள்
ஃபெலிக்ஸ் லைட்டர்:
ஒரு எதிரியுடன் மோதும்போது தன்னுடைய ஒரு கையை இழந்த அமெரிக்க உளவுத் துறையைச் சேர்ந்த ஃபெலிக்ஸ், ஜேம்ஸுடன் இணைந்து பல சாகசங்களில் ஈடுபட்டுள்ளார்.
தெரசா:
ஐரோப்பாவின் மிகப்பெரிய குற்ற சிண்டிகேட்டின் தலைவரின் மகளான இவர்தான் ஜேம்ஸ் பாண்டின் மனைவி. ஆனால், திருமணமான உடனே புளோஃபீல்ட் என்ற எதிரி இவரைக் கொன்றுவிட்டார்.
தோழிகள்:
ஒவ்வொரு கதையிலும் எதிரிகளின் முகாமைச் சேர்ந்த அல்லது நடுநிலையான பெண்கள் ஜேம்ஸுக்கு உதவ வருவார்கள். கதையின் இறுதியில் இவர்கள் தோழியாக மாறுவதாகக் கதை முடியும்.
ஜேம்ஸ் பாண்டின் எதிரிகள்
ஸ்பெக்டர் (Special Executive for Counter-intelligence, Terrorism, Revenge and Extortion):
எதிர் உளவு, பயங்கரவாதம், பழிவாங்குதல், மிரட்டிப் பணம் வாங்குவதற்கான ஒரு சிறப்புக் குழுவே ஸ்பெக்டர். இதன் உறுப்பினர்கள் அவர்களுக்கான எண்கள் மூலமே அறியப்படுவார்கள். உலகமெங்கும் வியாபித்து இருக்கும் இக்குழுவே ஜேம்ஸின் முக்கிய எதிரணி.
எர்னஸ்ட் ஸ்டாவ்ரோ புளோஃபீல்ட்:
ஸ்பெக்டரின் தலைவரான புளோஃபீல்ட், நம்பர் ஒன்றாக அறியப்படுபவர். இவருடைய மறைவுக்குப் பிறகு இவரது மனைவி மேடம் ஸ்பெக்டர் குழுவுக்குத் தலைமையேற்பதாகத் தொடர் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
டாக்டர் நோ:
ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்பட வில்லனான டாக்டர் நோ, செயற்கைக் கரங்களைக் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகளில் தன்னுடைய மனித உடலின் தாங்கும் திறனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட இவர், திரைப்படத்தில் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டாலும், உயிர் பிழைத்து மறுபடியும் ‘கதிர்வெடி’ என்ற காமிக்ஸ் கதையில் தோன்றுவார்.
ஸ்மெர்ஷ்:
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் உளவுத் துறை அமைப்பாகச் செயல்பட்ட நிறுவனமான இதன் உறுப்பினர்கள், பனிப்போர் காரணமாக ஜேம்ஸ் பாண்டுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவார்கள்.
தமிழில் ஜேம்ஸ்பாண்ட்:
காமிக்ஸ் வடிவில் ஜேம்ஸ் பாண்டின் சாகசங்கள் பெரும்பாலும் ராணி காமிக்ஸ் இதழிலும், சில கதைகள் முத்து காமிக்ஸ், டால்ஃபின் காமிக்ஸ், கண்மணி காமிக்ஸ் மூலமாகவும் வெளியாகியுள்ளன.
உருவாக்கியவர் : இயன் ஃபிளெமிங்
முதலில் தோன்றிய தேதி : ஏப்ரல் 13, 1953 (கேசினோ ராயல் நாவல்)
பெயர் : ஜேம்ஸ் பாண்ட்
வேறு பெயர்கள் : 007, மார்க் ஹசார்ட்
வேலை : பிரிட்டிஷ் உளவுத்துறையான MI 6-ன் சிறப்பு அந்தஸ்து (00) பெற்ற உளவாளி (வெளி உலகுக்குக் கடற்படைத் துணைத் தளபதி)
சிறப்பு அம்சம் :
இங்கிலாந்து உளவுத் துறையில் ஒரு 0 அந்தஸ்து பெற்றால் யாரையும் சுடுவதற்கு அனுமதி தரப்படும். இரண்டு 00 அந்தஸ்து பெற்றால் நாட்டின் பாதுகாப்புக்காக யாரையும் கொல்ல அனுமதி பெற்றவர்.
குறி தவறாமல் சுடுவதில் பாண்ட் வல்லவர். உலகின் மிகச்சிறந்த உளவாளியான அவர் பல அறிவியல் கருவிகளையும், நூதனமான ஆயுதங்களையும் கையாள்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT