Published : 21 Jan 2015 01:35 PM
Last Updated : 21 Jan 2015 01:35 PM
ஷாக் அடிக்கும் மீன்
மின்சாரத் திருக்கை (ரே) மின் அதிர்ச்சி கொடுத்து தாக்கவும், தனது இரையை கொல்லவும் கூடியது. ஒரு முறையில் இது செலுத்தும் மின்சாரத்தின் அளவு 350 வோல்ட்.
இது நம் வீட்டு மின் கம்பிகளில் பாய்ந்து கொண்டிருக்கும் 230 வோல்ட் மின்சாரத்தைவிட மிகவும் வலுவானதுதான். ஷாக் அடித்துவிட்டால் போச்சு, அப்புறம் பிழைக்க முடியாது.
பறக்கும் மான்
கிளிப்ஸ்பிரிங்கர் என்ற சிறிய வகை ஆப்பிரிக்க இரலை மான் 7 அடி உயரத்துக்குத் தாவக் கூடியது. நாம் நிற்கிறோம் என்றால், நம் தலையைத் தாண்டி தாவிவிடும். உயிரினங்களிலேயே அதிக உயரத்துக்குத் தாவக் கூடியது இதுதான். இதன் உயரம் வெறும் 45 செ.மீ., எடை 9 கிலோதான்.
குதித்த பிறகு நிலத்தில் தரையிறங்க, அது பயன்படுத்திக் கொள்ளும் பகுதி மிகமிகக் குறுகியது. ஒரு பிஸ்கட் அளவுள்ள பரப்பிலேயே அது தரையிறங்கி விடும்.
பாய்ச்சல் பூச்சி
படத்தில் உள்ள தெள்ளுப் பூச்சி, 25 செ.மீ. உயரத்துக்குத் தாவக்கூடியது. இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இந்த உயரத்துக்குத் தாவுவது வெறும் அரை செ.மீ. அளவே உள்ள சின்னஞ் சிறு பூச்சி.
ஒரு மனிதன் இந்தப் பூச்சிக்கு இணையாகத் தாவ வேண்டுமென்றால், 100 மீட்டர் உயரத்துக்குத் தாவ வேண்டும். இப்போது புரிகிறதா இந்தப் பூச்சியின் திறமை?
பலசாலி யார்?
உடலின் அளவை வைத்துப் பார்த்தால், உலகிலேயே எறும்புகள்தான் மிகவும் வலுவானவை. ஓர் எறும்பு தனது எடையைப் போல 50 மடங்கு எடையைச் சுமந்து செல்லக்கூடியது.
இதற்கு இணையாக ஒரு மனிதன் சுமக்க வேண்டுமென நினைத்தால் 70 கிலோ எடையுள்ள மனிதன் 3,500 கிலோ எடையைத் தூக்க வேண்டும். இப்போது யார் மிகப் பெரிய பளுதூக்கும் வீரன்-வீராங்கனை சொல்லுங்கள் பார்ப்போம்.
அதிவேக மீன்
படத்தில் உள்ளது மிகப் பெரிய செய்ல்பிஷ், நீர்மூழ்கிக் கப்பல் அல்ல. இதற்குக் காரணம் அதன் முதுகில் பாய்மரம் போலிருக்கும் அமைந்திருக்கும் துடுப்பு.
3 மீட்டர் நீளமுள்ள இந்த மீன், உலகிலேயே மிக வேகமாக நீந்தும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பாயுமாம். சிவிங்கிப் புலிக்கு நல்ல போட்டிதான்.
குண்டுத் திமிங்கிலம்
திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது என்ன அளவு இருக்கும் தெரியுமா? கருவில் ஒரு மில்லி கிராமுக்கும் குறைவான எடையில் இருக்கும்.
அடுத்த 22 மாதங்களில் 22,000 கிலோவுக்கும் அதிகமான எடையைப் பெறும். இது 3,000 மடங்கு அதிகரிப்பு.
சத்தமே பலம்
கத்தியைப் போன்ற முதுகுத் துடுப்பைக் கொண்டுள்ள ஜாக் நைப் மீன், உலகிலுள்ள மீன்களிலேயே அதிக சப்தம் மிகுந்தது. மீன்களுக்கு குரல்நாண் கிடையாது. ஆனால், இந்த மீன் தசைகளை அதிரச் செய்வதன் மூலம் சத்தத்தை உருவாக்குகிறது.
தசைகளுடன் இணைந்துள்ள நீந்தும் ஜவ்வுகள் ஒலிபெருக்கியைப் போலச் செயல்பட்டு சத்தத்தை பெரிதாக்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT