Published : 07 Jan 2015 11:32 AM
Last Updated : 07 Jan 2015 11:32 AM
நீங்க சின்னக் குழந்தையா இருந்தப்ப உங்களை நர்சரியிலயோ, பால்வாடியிலோ போய் விடுவார்கள் இல்லையா? அந்த மாதிரி பழக்கம் சில விலங்குகளிடமும் இருக்கிறது தெரியுமா?
முயலைப் போலவே அர்ஜெண்டினாவில் ஒரு விலங்கு உள்ளது. ஆனால், முயலைவிட கொஞ்சம் பெரியதாக இருக்கும். அதன் பெயர் மாரா (mara). இவை இரைதேட போகும்போது தன் குட்டிகளைப் பொதுவான ஒரு வளைக்குள் விட்டுவிட்டு போகும்.
இப்படி அம்மா மாராக்களால் ஒரே வளைக்குள் இருபதுக்கும் அதிகமான குட்டிகள் இருப்பதைப் பார்க்கும்போது, அது ஒரு பால்வாடி பள்ளி போலக் காட்சி தரும். சாயங்காலம் அம்மா வந்தவுடன் குட்டிகள் குதித்து ஓடி வரும் காட்சி நம்மூர் நர்சரி பள்ளிகளை நினைவூட்டும்.
வெளவால் குவியல்
ஒரே குகைக்குள் 50 லட்சம் குட்டி வௌவால்கள் இருக்கும் ஒரு குகை உள்ளது தெரியுமா? அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ப்ராக்கன் (bracken cave) குகைக்குப் போனால் வௌவால் குட்டிகளின் குவியல்களைப் பார்க்கலாம். உலகின் மிகப்பெரிய வௌவால் குகை இது. இங்கே 2 கோடி வௌவால்கள் இருக்கின்றன. வௌவால் குட்டிகளோ குவியல் குவியலாகக் கிடக்கும்.
குட்டியூண்டு இடத்தில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான குட்டிகள் கிடக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 2 கோடி வௌவால்கள் கூச்சலிடும் இந்த இடத்தில், தன்னுடைய குட்டியின் குரலைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, குட்டிக்குத் தாய் பாலூட்டும் காட்சி இயற்கையின் அதிசயங்களில் ஒன்று இல்லையா?
ஊட்டி வளர்க்கும் அம்மா
உண்மையில் தாய்ப் பாசத்தில் மிகச் சிறந்த விலங்கு என்றால் அது கொரில்லா தான். தன் குட்டியை 3 வயது வரையில் அது ஊட்டி வளர்க்கும். திருமண வயதை எட்டும் வரையில் குட்டியைப் பரிவோடு பார்த்துக்கொள்ளும். பாண்டாவும் அப்படித்தான்.
அப்பாவே அம்மா
தந்தை பாசத்திற்கு உதாரணமாகக் கடல் குதிரையைச் சொல்லலாம். ஆண் கடல்குதிரைதான் பிரசவிக்கும் தெரியுமா? அதன் வயிற்றில் இதற்கென ஒரு பை உள்ளது. பெண் அதில் முட்டையிட்டுப் போய்விடும். ஆண்தான் முட்டையைப் பொரிக்கச் செய்து குஞ்சுகளை வெளியேற்றும். ஒரே பிரசவத்தில் 100 குட்டிகள் வெளியே வரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பாதுகாப்புப் பை
கங்காருக்கு வயிற்றில் பை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பிறக்கும்போது (உடைக்காத) வேர்க்கடலை அளவே உள்ள குட்டி கங்காரு, பிறந்ததும் ஊர்ந்து ஊர்ந்து தாயின் வயிற்றுப் பைக்குள் போய் உட்கார்ந்து கொள்ளும். அதில் இருந்தபடியே பால் குடிச்சி வளரும். சுயமாக ஓடி இரைதேடும் வரையில் தாயின் பையை விட்டு இறங்காது. இரைத் தேடச் செல்லும்போது நரி போன்ற விலங்குகள் விரட்டினால், ஓடி வந்து அம்மாவின் வயிற்றுப் பையில் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளும்.
உப்புமூட்டை சுமக்கும் தேள்
புதிதாகப் பிறந்த குட்டிகளை முதலை தன்னுடைய வாய்க்குள் வைத்தபடி நீந்தும். கொடிய விஷமுள்ள தேளும்கூடத் தன் குட்டிகளை முதுகில் உப்புமூட்டை சுமந்தபடி நடைபோடும்.
தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனதுகளா இருக்குதுல்ல இதுங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT