Published : 24 Dec 2014 12:34 PM
Last Updated : 24 Dec 2014 12:34 PM

நடனமாடும் மெழுகுவர்த்தி சீசா

நீங்கள் அம்மாகூட மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கும்போது கடைக்காரர்கள் காய்கறிகளைத் தராசில் எடை போடுவதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். தராசுத் தட்டுகளில் எடையைக் கூட்டிக் குறைக்கும்போது தட்டுகள் நிலையாக நிற்காமல் ஆடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? தராசுத் தட்டுகள் ஏன் இப்படி ஆடுகின்றன? வாங்க, ஒரு சிறிய சோதனை செய்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மெழுகுவர்த்தி இரண்டு, ஒரே உயரம் கொண்ட கண்ணாடி டம்ளர்கள், தையல் ஊசி, தீப்பெட்டி, சிறிய கத்தி அல்லது பிளேடு (அம்மா, அப்பா உதவியுடன் இப்பொருட்களைப் பயன்படுத்தவும்).

சோதனை:

1. கத்தியைக் கொண்டு ஒரு மெழுகுவர்த்தியின் இரு முனைகளையும் சீவி, திரி வெளியே தெரியுமாறு வைத்துக்கொள்ளவும்.

2. தையல் ஊசியை மற்றொரு எரியும் மெழுகுவர்த்தியில் சூடேற்றி, இரு முனைகளையும் சீவிய மெழுகுவர்த்தியின் நடுவில் செங்குத்தாகச் செருகவும்.

3. இரண்டு கண்ணாடி டம்ளர்களை அருகருகே வைத்து அவற்றில் தண்ணீரை ஊற்றுங்கள்.

4. மெழுகுவர்த்தியில் உள்ள ஊசியின் இரு முனைகள் டம்பளர்களின் விளிம்பில் படுமாறு வையுங்கள்.

5. மெழுகுவர்த்தி கிடைமட்டமாக இருக்குமாறு வைக்க வேண்டும்.

6. மெழுகுவர்த்தியின் ஒரு முனையை தீக்குச்சியில் பற்ற வைக்கவும். சிறிது நேரம் கழித்து மறு முனையைப் பற்ற வையுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

நடப்பது என்ன?

இருபுறமும் எரியும் மெழுகுவர்த்தி, சீசா பலகை போல மேழும் கீழும் ஆடுவதைப் பார்க்கலாம். இதெப்படி மேலும் கீழும் ஆடுகிறது? அதற்கான அறிவியல் காரணம் என்ன?

மெழுகுவர்த்தி எரியும்போது முனைகளில் உள்ள மெழுகு உருகுகிறது. ஒரு முனையில் மெழுகு உருகிக் கீழே விழுவதால் அந்த முனையில் மெழுகுவர்த்தியின் எடை குறைகிறது. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு இல்லையா? இதுதானே நியூட்டனின் மூன்றாம் விதி.

இந்த விதியின்படி மெழுகு ஒரு துளி கீழே விழுவதால் அதற்குச் சமமான எதிர்விசையினால் அந்த முனை சற்று மேலே எழுகிறது.

இரு முனைகளிலும் மெழுகு உருகி விழுவதால் முனைகளில் ஏற்படும் எடை இழப்பினாலும் மெழுகுவர்த்தியின் ஈர்ப்பு மையம் (Center of Gravity) மாறுவதாலும் மெழுகுவர்த்தித் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கும். சீசாவின் ஈர்ப்பு மையம் எப்போதும் மெழுகுவர்த்தியின் மையத்தில், அதாவது ஊசியிலேயே அமைந்திருக்கும்.

மெழுகுவர்த்தியின் நீளம் குறையும்போது சீசாவின் ஆட்டம் வேகமாக இருக்கும். மெழுகுவர்த்தி அணையும்வரை ஆட்டத்தைக் கண்டு களிக்கலாம்.

பயன்பாடு

சிறுவர் பூங்காவில் உள்ள சீசா பலகை மீது இரண்டு பேர் உட்கார்ந்து ஆடும்போது ஒருவர் காலால் கீழ் நோக்கி தரையை உதைத்தால் அந்த முனை மேல் நோக்கி நகரும் அல்லவா? மெழுகுவர்த்திக்கு கால் இல்லாத காரணத்தால் மெழுகு உருகி உருகி அந்த முனை மேலே செல்கிறது. தராசுத் தட்டுகள் ஏன் ஆடுகின்றன என்று இப்போது புரிகிறதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x