Published : 31 Dec 2014 01:03 PM
Last Updated : 31 Dec 2014 01:03 PM

நான்தான் வெண்டைக்காய் பேசறேன்!

ஹாய் குட்டிப் பசங்களா...

நான்தான் வெண்டைக்காய். என்னோட தலையை வெட்டி உங்க முகத்துல ஒட்ட வைச்சு எத்தனை நாளு விளையாடி இருக்கீங்க? என்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு என்னைக்காவது நீங்க நினைச்சிருக்கீங்களா? உங்க கிட்ட என்னை பத்தி பேசணும்னு தோணுச்சு. அதனாலதான் உங்கள பார்க்க வந்திருக்கேன்.

நான் பொறந்த நாடு எத்தியோப்பியா. அங்க இருந்து அரேபியா, நைல் நதிக்கரையோரமா பயணிச்சி, இந்தியாக்குள்ள வந்துட்டேன். அடிமையாக இருந்த மக்களை வியாபாரம் செய்யத் தொடங்கிய காலம் அது. அப்போ, ஆப்பிரிக்க அடிமைகள அமெரிக்கா, ஐரோப்பாவுக்கெல்லாம் கொண்டு போனாங்க. இந்த அடிமைகள் மூலமா அந்த நாடுகளுக்கெல்லாம் நானும் போனேன்.

அப்புறம், என்னை சாப்பிட்டா, நினைவாற்றல் வரும், மூளை வளரும்னு உங்க அம்மா சொல்லியிருப்பாங்களே? அவங்க சொல்றது உண்மைதான். என்னைச் சாப்பிட்டால் உங்க புத்திக்கூர்மை அதிகமாகும். அதோட எந்தச் செயலையும் தெளிவாகச் செய்ய முடியும். என் உடம்புல நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் நிறைய இருக்கு. மாவுச் சத்தும்கூட இருக்கு. அதுதான் எல்லாத்துக்கும் காரணம்.

என்னை தினமும் சாப்பிடணும்னு உங்க அம்மா சொன்னா ரொம்ப அலுத்துக்குவீங்களா? எனக்குத் தெரியும், நீங்க அலுத்துக்குவீங்கன்னு. இதேமாதிரிதான், ஆரம்பத்துல மக்களுக்கு என்னை பிடிக்கவே இல்ல, தெரியுமா? செடியில இருந்து என்னை பறிக்கவே மாட்டாங்களாம். அப்படியே பறிச்சாலும் ரொம்ப கசப்பா இருப்பேனாம். அப்புறம் தான் என்னை எப்படி சாப்பிடணும்னு கத்துக்கிட்டாங்களாம். எங்கள வளக்குற பூமி அம்மா இப்பவும் அடிக்கடி சொல்வாங்க.

என்னை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவாங்க. ஆப்பிரிக்கா நாடுகளில் ‘கம்போ’ன்னு சூப்பு வைச்சு சாப்பிடுவாங்க. அந்த சூப்பு கெட்டியாவதற்காக வெண்டைக்காயை பொடியா சேர்ப்பார்களாம். சொல்ல மறந்துட்டேனே... ஆப்பிரிக்க மொழியில் ‘கம்போ’ன்னா வெண்டைக்காய்ன்னு அர்த்தமாம். அதேபோல நான் பார்ப்பதற்கு மென்மையாவும், நுனி கூர்மையாவும் இருப்பதால், ஆங்கிலத்தில் ‘லேடீஸ் ஃபிங்கர்’னு கூப்பிடறாங்க.

வெளிநாடுகளில் என்னை பொடியாக நறுக்கி தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து சாலடாகச் சாப்பிடுவாங்க. அமெரிக்காவுல முட்டையில தோய்த்து ரொட்டி அல்லது சோளமாவில் சேர்த்து சாப்பிடுவாங்க. என்னை காப்பித்தூள் போல பொடியாக நறுக்கி, பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

அது ரொம்ப நல்லதாம். என் உடம்பில் இருக்கும் பெடிகன் என்ற நார்ச்சத்து, உங்க உடம்பில் சேர்ந்தால் கெட்ட கொழுப்பு எல்லாம் போயிடும். மெக்னீசியம் என்ற வேதிப்பொருளால் இதயத்துடிப்பு சீராகும்.

என் உடம்க்குள்ள வளவளன்னு பிசுபிசுப்பு இருக்குமே. அது நெறய பேருக்கு பிடிக்காது. சமைக்குறப்ப அத சட்டியில போட்டு வறுத்து நீக்கிடுவாங்க. ஆனா, அது என் உடம்புல இருந்தாதான் சாப்பிடற உங்களுக்கு நல்லதாம். அதை அப்படியே சமைத்து சாப்பிட்டா, மூளைக்குப் புத்துணர்ச்சியும், இதயத்துக்கு இதமும் கிடைக்குமாம்.

அப்புறம், நான் தினமும் வளருவேன். அதனால தினசரி என்னை செடியில இருந்து பறிச்சி, சமைச்சி சாப்பிடலாம். பறிச்சி ரொம்ப நாள் வெளியே வச்சா நான் கெட்டு போய்டுவேன். அதனால உடனே சாப்பிடணும்.

எத்தனை விஷயம் சொல்லியிருக்கேன், என்னை பத்தி? அதனால அடிக்கடி என்னை உங்க சாப்பாட்டில சேர்த்து சாப்பிடுங்க. முடிஞ்சா தினமும் சாப்பிடுங்க. சுறுசுறுப்பா இருப்பீங்க. குட்டிப் பசங்களா எங்கே கிளம்பிட்டீங்க? உங்க அம்மாகிட்ட போயி வெண்டைக்காய் சமைச்சு கொடுக்கச் சொல்லப்போறீங்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x