Published : 24 Dec 2014 03:07 PM
Last Updated : 24 Dec 2014 03:07 PM
அழகுத் தமிழில் கதை சொல்லும் போட்டியில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் கதைகளை கடந்த மூன்று வாரங்களாகப் பார்த்துவருகிறோம். இந்த வாரம் இறுதியாக இரண்டு கதைகளைப் பார்ப்போமா?
பரிசாக மாறிய வானவில்
அன்று பூமாதேவிக்குப் பிறந்தநாள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்கள் எல்லாம் ஒன்று கூடி, பிறந்தநாள் பரிசாக பூமாதேவிக்கு என்ன கொடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தன.
அப்போது அங்கே வெள்ளை நிறம் வந்தது. “நீங்கள் எல்லோரும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டது.
“நாங்கள் எல்லாம் பூமாதேவிக்கு அழகான வண்ணமயமான ஒரு பரிசு கொடுப்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். உனக்கு இங்கே வேலை இல்லை” என்று ஏளனத்தோடு கூறியது சிவப்பு.
வெள்ளைக்கு ஒரே வருத்தம். வேறு வழியில்லாமல் ஓரமாகச் சென்று உட்கார்ந்துகொண்டது.
மற்ற நிறங்கள் எல்லாம் பூக்கள் வடிவில், பல வண்ணங்களாகப் பிரிந்து அற்புதமான காட்சி அளித்தன. அப்போது திடீரென்று மேகம் கறுத்தது. மழை கொட்டியது. வண்ணப் பூக்கள் அனைத்தும் கரைந்துவிட்டன. இப்படி ஆகிவிட்டதே என எல்லா வண்ணங்களுக்கும் கவலையாகிவிட்டது.
அப்பொழுது பூமாதேவி அங்கே வந்தார். வண்ணங்கள் தங்கள் பரிசு கரைந்து போன விஷயத்தைக் கூறின. திரும்பிப் பார்த்தார் பூமாதேவி. அங்கு கவலையோடு வெள்ளை நின்றுகொண்டிருந்தது.
“வெள்ளையே இங்கே வா. இந்த வண்ணக் கலவையில் கால் வைத்து குதி” என்றார் பூமா தேவி.
மகிழ்ச்சியோடு வெள்ளை குதித்தது. உடனே வெள்ளை உட்பட, வானவில் நிறங்கள் தோன்றின. அழகாகக் காட்சியளித்தன.
யாரையும் எதற்காகவும் மட்டமாகப் பேசக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டன மற்ற வண்ணங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT