Published : 10 Dec 2014 12:39 PM
Last Updated : 10 Dec 2014 12:39 PM
பாரதி பிறந்தநாள் டிசம்பர்: 11
சுப்ரமணிய பாரதியின் அப்பா சின்னசாமி, அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைச்சிருந்தாரு. எதிர்காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கும் கனவோட இருந்தாரு. மகன் வளர்ந்தவுடன் அந்தத் தொழிற்பேட்டையை கவனித்துக் கொள்வான்னு நினைச்சாரு.
சுப்ரமணியனோட அம்மா ஐந்து வயசுலேயே இறந்து போயிட்டாங்க. அதோட சுப்ரமணியனுக்குப் படிப்புல பெரிசா ஆர்வம் இல்ல. பள்ளிக்கூடம் முடிஞ்ச ஒடனே தோப்பு, தோட்டம்னு சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவாரு. அப்புறம் அடிக்கடி தாத்தாவோட வீட்டுக்கும் போவாரு. அவரோட தாத்தா இலக்கியம், பாட்டெல்லாம் வாசிச்சுக் காட்டுவாரு. சுப்ரமணியனுக்குத் தமிழ் இலக்கணமும், தமிழ்க் காப்பியங்களும் ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு.
மற்றொரு பக்கம் பாடத்தைப் படிக்காமல், வீட்டுப் பாடம் செய்யாம பள்ளிக்கூடம் போன சுப்ரமணியனுக்குத் தண்டனை வழங்கினாங்க. “எனக்கு என்ன பிடிக்கிதோ, அதை யாரும் சொல்லித் தர மாட்டாங்களா”ன்னு சுப்ரமணியன் ஏங்கினான்.
சீக்கிரத்திலேயே பார்வையற்ற ஒரு படிப்பாளியைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்ட கம்ப ராமாயணத்தைக் கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் சொந்தமாகவே சுப்ரமணியன் தமிழ் இலக்கணம் கத்துக்க ஆரம்பிச்சான்.
ஒரு நாள் சுப்ரமணியனோட நண்பன் ஒருவன் எட்டயபுரம் ராஜாவோட அரண்மனைக்கு அழைச்சுட்டுப் போனான். ஏதாவது ஒரு குறளின் முதல் வார்த்தையையோ அல்லது ஒரு வெண்பாவின் ஒரு பகுதியையோ சொன்னால், சுப்ரமணியன் உடனடியா எஞ்சிய அடிகளைச் சொன்னான். சுப்ரமணியன் நகைச்சுவையா பேசுறதையும் கவிதை சொல்றதையும் எட்டயபுரம் ராஜா ரசிச்சார்.
“இவன் ஒரு குழந்தை மேதை. பெரிய கவிஞன் ஆவதற்கான அறிவு, உங்க மகன்ட்ட இருக்கு”ன்னு சுப்ரமணியனோட அப்பாகிட்ட சொன்னார் எட்டயபுரம் ராஜா.
ஏற்கெனவே சுப்ரமணியன் செஞ்ச விஷயங்கள் பிடிக்காம இருந்த அவனோட அப்பா, தன் மகன் இப்படிக் கவிதையே கதின்னு இருந்துறக்கூடாதுன்னு நினைச்சாரு. அதனால திருநெல்வேலில ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சுப்ரமணியனை படிக்க அனுப்பினார். அப்படிச் செஞ்சா எல்லாம் மாறிடும்னு அவர் நினைச்சாரு.
அங்கேயும் சுப்ரமணியனோட நகைச்சுவை உணர்வும், கவிதை எழுதுற திறனும் சக மாணவர்கள்கிட்ட பிரபலமாச்சு.
ஒரு நாள் வகுப்பறையில சுப்ரமணியன் கொஞ்சம் கண் அசந்துட்டான். சுப்ரமணியனை எழுப்பி, நடத்துன பாடத்தில இருந்து ஆசிரியர் கேள்வி கேட்டார். சுப்ரமணியனுக்கோ பதில் தெரியல. கோபமடைஞ்ச ஆசிரியர், “மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டாரு.
“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சைல ஃபெயிலான அவன் ஊருக்குத் திரும்பினான்.
இதனால் வருத்தப்பட்ட அவனுடைய அப்பா, எட்டயபுரம் ராஜாவைப் பார்த்து அரசவை பணியில சுப்ரமணியனைச் சேர்த்துவிட்டார். ராஜாவோட நண்பர்கள் சிலருக்கு சுப்ரமணியனைப் பிடிக்கல. அவர்கள்ல ஒருத்தர், “நீங்க பெரிய புத்திசாலி போலத் தெரியுது. ஆனா, பரீட்சைல தோத்துப் போயிருக்கீங்களே” என்று மறைமுகமாகக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சாரு.
இதனால ரெண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. கல்வியைப் பற்றி ஒரு விவாதம் நடத்தலாம்னு முடிவாச்சு. முதல்ல எதிர்த் தரப்பு ஆள் பேசினார். அடுத்ததாகப் பேச ஆரம்பிச்ச சுப்ரமணியன், எல்லோரும் ஆச்சரியப்படுற மாதிரி அற்புதமாகப் பேசினார். அவருடைய வாதம் எதிராளியையும் வசப்படுத்துச்சு.
அந்த விவாதம் முடிஞ்சதும், ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து சுப்ரமணியன்கிட்ட போனாரு. “நீ உன் வயசை மீறுன புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)”ன்னு பட்டம் சூட்டினார்.
அதுக்கப்புறம் சுப்ரமணியனை, எல்லோரும் பாரதின்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. உலகம் போற்றும் கவிஞரா மாறின அவர், சுப்ரமணிய பாரதியாராக ஜொலித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT