Published : 19 Nov 2014 10:38 AM
Last Updated : 19 Nov 2014 10:38 AM
உங்களுக்குக் கத பிடிக்குமா? இல்ல, கத சொல்லப் பிடிக்குமா? கத கேட்கத்தானே பிடிக்கும்? உங்க தாத்தா - பாட்டிகிட்ட கத சொல்லச் சொல்லிக் கேட்பீர்கள் இல்லையா? அவுங்களும் உங்களுக்கு ஆர்வமா கதை சொல்வாங்க. நீங்களும், ‘உம்’ கொட்டிக்கிட்டே கதையக் கேட்பீங்க.
ஆனால், நான் ஒரு புத்தகம் படிச்சேன். அந்தப் புத்தகத்துல ஒரு குட்டிச் சிறுமி வற்ரா. அவ பேரு ஆதிரை. அந்தக் குட்டிப் பொண்ணு ஒரு தாத்தாவுக்குக் கதை கதையாகச் சொல்றா. தாத்தாதவே கேள்விப்படாத கதையெல்லாம் சொல்றா. கதையக் கேட்குற தாத்தா, இத்தனை வித்தியாசமான கதைகளான்னு வாயைப் பிளக்குறாரு.
குட்டிச் சிறுமி சொல்ற கதையில கத சாமின்னு ஒரு கதாபாத்திரம் வருது. இந்தக் கத சாமி உலகத்தை எப்படிப் படைக்கிறதுன்னு கடவுளுக்கே ஐடியா கொடுக்குது. நான் படிச்ச அந்தக் கதைய உங்களுக்கும் சொல்றேன்.
உலகத்த படைக்கணும்னு கடவுளுக்கு ஆசை வருது. அவருக்குத் தெரிஞ்ச விஷயத்தை வைச்சு ஒரு உலகத்தைப் படைக்கிறாரு கடவுளு. தான் படைச்ச உலகம் எப்படி இருக்குன்னு பார்க்க ஒரு நாள் கடவுள் வர்றாரு. அப்போ கடவுள் ஆட்டுக்குட்டியா இருக்குற கத சாமியை உலகத்தில் பாக்குறாரு.
“நான் உன்னைப் படைக்கலயே. நீ எப்படி இங்க வந்தே”ன்னு கடவுள் கேட்கிறாரு. “நான் இங்கேயேதான் இருக்கேன். நீங்க யாரு. அத மொதல்ல சொல்லுங்க”ன்னு ஆட்டுக்குட்டி கேட்குது.
இரண்டும் பேரும் இப்படி பேசிபேசி ஃப்ரெண்ட்ஸ் ஆகிடுறாங்க. அப்போ ஆட்டுக் குட்டி, “எனக்குப் பசிக்குது”ன்னு கேட்குது. கடவுள் உடனே ஒரு புல்லுக் கட்டை வர வைக்கிறாரு. ஆட்டுக்குட்டி நல்லா தின்னு முடிச்ச உடனேயே, “எனக்குத் தாகமா இருக்கு. தண்ணி வேணும்”னு கேட்குது. “தாகம்ன்னா என்ன, தண்ணினா என்ன?”ன்னு கடவுள் திருப்பி கேட்குறாரு. ஓ... கடவுளுக்கு இதுகூட தெரியலன்னு நினைச்சுகிட்ட ஆட்டுக்குட்டி, “உன்னோட சக்தியை எனக்குக் கொஞ்சம் கொடு. தண்ணின்னா என்னான்னு காட்டுறேன், நீ நினைச்ச உலகத்தை இன்னும் செழிப்பா மாத்துறேன்னு” கேட்குது.
“அப்படியா”ன்னு கேட்டுக்கிட்ட கடவுள் இதுக்கு ஒத்துக்கிட்டாரா, இல்ல, “அது என்னோட வேலை; அத நானே பாத்துக்குறேன்”னு சொன்னாரான்னு தெரிஞ்சுக்க ஆதிரையின் கதசாமி புத்தகம் படிங்க. இதுமாதிரி நிறையக் கதைகள அந்தக் குட்டிப் பொண்ணு சொல்லியிருக்கா.
இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேன். இன்னைக்குக் கதை சொல்ற பழக்கமே அம்மா-அப்பா கிட்ட குறைஞ்சுபோச்சு. நிறையப் பேருக்கு எப்படிக் கதை சொல்றதுன்னே தெரியல. உண்மையில நிஜ வாழ்க்கையில நடக்காதது எல்லாம் கதைகள்ள நடக்கும். பெரிய பெரிய காடுகள் வரும், விலங்குள் பேசும், காய்கறிகள் பேசும், சூரியன், நிலா பூமிக்கு இறங்கி வரும். டி.வி. பார்த்தா மட்டும் கற்பனைத் திறன் வளராது. கற்பனையான கதைகள சொல்லணும்னா இதுமாதிரியான நல்ல நல்ல புத்தகங்களத் தேடிப் படிக்கணும், இது மாதிரியான புத்தகங்களப் படிச்சிட்டு நீங்களும் ஆதிரை மாதிரி கதை சொல்றீங்களா?
நூல்: ஆதிரையின் கதசாமி
ஆசிரியர்: க.வை. பழனிசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.225
முகவரி : 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629 001.
தொலைபேசி: 04652-278525.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT