Published : 16 Aug 2017 11:11 AM
Last Updated : 16 Aug 2017 11:11 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கை ரேகையால் என்ன பயன்?

சந்திர கிரகணம் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால், என் வீட்டில் அனுமதிக்கவில்லை. நீ பார்த்தாயா டிங்கு?

-வி. சந்தான மேரி, எட்டாம் வகுப்பு, அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

மழை, மேகம் போன்றவற்றால் என்னால் இந்த முறை சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், பல தடவை சூரிய, சந்திர கிரகணங்களைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் கிரகணங்களைப் பார்ப்பதை ஒரு நிகழ்ச்சியாகவே கொண்டாடுவோம். சூரியனையோ சூரிய கிரகணத்தையோ வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. அதனால் சூரியக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு அந்த அற்புதமான நிகழ்வுகளைக் கண்டுகளிப்போம். சூரியன் முழுவதுமாக மறைக்கப்படுவதும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தகுந்த பாதுகாப்போடு சூரியக் கண்ணாடி அணிந்து கிரகணங்களைப் பார்ப்பதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. அடுத்த முறை பார்த்துவிட்டு, உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் சந்தான மேரி.

கை ரேகையால் என்ன பயன் டிங்கு?

– என். மூர்த்தி, காரைக்குடி.

ரேகைகள்தான் உள்ளங்கைகளுக்கு மேடு, பள்ளங்களை அளிக்கின்றன. ஒரு பொருளை எடுக்கும்போது, அது விழுந்துவிடாமல் இருப்பதற்கான உறுதியை இந்த ரேகைகள்தான் கொடுக்கின்றன. ரேகைகள் இல்லாமல், வழவழப்பாக உள்ளங்கைகள் இருந்தால் நம்மால் எதையும் எளிதில் தூக்க முடியுமா மூர்த்தி? ஒருவர் கைரேகைபோல் இன்னொருவர் கைரேகை இருக்காது. அதனால்தான் கைரேகையை வைத்துக் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.

உசேன் போல்ட் தன்னுடைய இறுதிப் போட்டியில் இப்படி ஏமாற்றிவிட்டாரே டிங்கு?

– பி. கார்த்திகா, ஒன்பதாம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை.

சுவிட்சை அழுத்தியவுடன் ஒரே மாதிரி சீராக இயந்திரங்கள்தான் ஓடும். மனிதர்களால் அப்படி இருக்க முடியாதே. ரசிகர்களைப் பொறுத்தவரை வெண்கலம் வென்றதில் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், உசேன் போல்ட்டுக்கு இது எந்தவிதத்திலும் குறை இல்லை. சாதனைகளில் அவர் எவ்வளவோ உயரத்தில் இருக்கிறார். அந்தச் சாதனைகளைப் பிறர் எட்டிப் பிடிக்கவே இன்னும் பல காலம் ஆகும். மின்னல் வேக மனிதருக்கு மகிழ்ச்சியாக விடை கொடுப்போம் கார்த்திகா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x