Published : 20 Jul 2016 11:55 AM
Last Updated : 20 Jul 2016 11:55 AM
அதென்ன சங்கி மங்கி என்றுதானே யோசிக்கிறீர்கள்? இது ஒரு ஜாலி மேஜிக். படித்துப் பார்த்து செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
10 ரூபாய், ஜெம் கிளிப்புகள் இரண்டு
மேஜிக் கதை
ஒரு ஊரில் சங்கி, மங்கி என இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் வெளியே போனபோது 10 ரூபாய் நோட்டு கீழே கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த ரூபாய் யாருக்குச் சொந்தம் என்று இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. இந்தச் சண்டையைப் பார்த்த ரூபாய் நோட்டு, அவர்களைப் பார்த்துச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தது.
“நண்பர்களே, என்னால் நீங்கள் சண்டை போட வேண்டாம், நானே உங்களைச் சேர்த்து வைக்கிறேன்” என்று கூறியது. உடனே ‘பட்’ என்று இருவரையும் சேர்த்து வைத்தது. இந்தக் கதையைச் சொல்லியபடி இந்த மேஜிக்கைச் செய்யுங்கள்.
மேஜிக் எப்படி?
# புதிய 10 ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
# இரண்டு ஜெம் கிளிப்புகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இவைதான் சங்கி, மங்கி.
# படத்தில் காட்டியபடி 10 ரூபாய் நோட்டை முன்னும் பின்னுமாக வளையுங்கள். ஒவ்வொரு பக்கமும் சரியாக வளைந்து சேரும் இடத்தில் ஒவ்வொரு ஜெம் கிளிப்பையும் செருகுங்கள்.
# ‘சங்கி, மங்கி’ என்று மந்திரம் சொல்லி 10 ரூபாய் நோட்டின் இரு பக்கங்களையும் படத்தில் காட்டியபடி அம்புக்குறியிடப்பட்ட திசையில் சட்டென இழுங்கள். அப்போது சங்கி, மங்கிக் கிளிப்புகள் ‘பட்’என்ற சத்தத்துடன் பறந்து கீழே விழும்.
என்னே ஆச்சரியம்? தனித்தனியே செருகப்பட்ட ஜெம் கிளிப்புகள் ஒன்றோடொன்று சங்கிலி போலப் பிணைந்திருக்கும். இதைப் பார்த்து உங்கள் நண்பர்கள் வியந்துபோவார்கள். இந்த மேஜிக்கை சரியாகச் செய்து பழக வேண்டும். இல்லாவிட்டால் ரூபாய் நோட்டு கிழிந்துவிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT