Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM
தாவரங்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது, தெரியுமா?
வளர்வது, இயற்கைத் தூண்டுதல் பெறுவது ஆகியவற்றைத் தாண்டி தாவரங்கள் வேறு சில வகைகளிலும் இயங்குகின்றன. அதாவது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. இதற்கு ஆங்கிலத்தில் Turgor movement என்று பெயர். தமிழில் வீக்க அசைவு என்று சொல்லலாம்.
இந்த இயக்கத்தை மார்னிங் குளோரி (காக்கட்டான்), மூன்வைன் (நாகனமுக் கோரை) போன்ற மலரும் தாவரங்களில் பார்க்கலாம். அவரைக் குடும்பத் தாவரங்களின் இலைகள், குளோவர் (தீவனப்புல்) போன்றவற்றிலும் இதுபோன்ற இயக்கத்தைக் காணலாம்.
மலர் இதழ்கள், இலைகளில் ஏற்படும் இந்த வீக்கத்தின் அசைவு, தூங்கும் செயல்பாடாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால், வெளிச்சத்தைப் பொறுத்து இவை மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, தாமரை மலரின் இதழ்கள், சூரிய உதயத்தின் போது விரியும். ஆனால் இரவில் அந்த இதழ்கள் மெதுவாக மூடி, மொட்டுப் போலாகி விடும். அவரை இலைகள் இரவில் கீழ் நோக்கி நீண்டிருக்கும். பகல் நேரத்தில் கிடைமட்டமாக இருக்கும். இலைகளிலும், மலர் இதழ்களிலும் இதுபோன்ற மாற்றம் ஏற்படுவதற்கு, இலை அல்லது மலர்க் காம்பின் உள்ளே இருக்கும் தண்ணீர் செலுத்தும் அழுத்தமே காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
வீனஸ் ஃபிளைடிராப் எனப்படும் பூச்சியுண்ணும் தாவரமும் இதே வீக்க அசைவு மூலமாகவே தன் இலைகளில் உட்காரும் பூச்சிகளைப் பிடிக்கிறது. ஒவ்வொரு இலையின் ஓரத்திலும் கீல் போன்று வளைந்த நுனிகளும், அதில் தொட்டால் உணரும் உணர்ச்சி கொண்ட தூவிகளும் இருக்கும். ஏதாவது ஒரு பூச்சி அந்தத் தூவியைத் தொட்டவுடன், இலைகள் மூடிக்கொண்டு, பூச்சியை உள்ளே பிடித்துக் கொள்ளும். வீனஸ் தாவரம் அந்தப் பூச்சியைச் செரிமானம் செய்துவிடும்.
தொட்டாற்சிணுங்கியும் இது போன்ற வீக்க அசைவு காரணமாகவே மூடிக்கொள்கிறது. இவற்றின் இலையை ஏதாவது தொட்டு விட்டால் உடனே சட்டென்று மூடிக்கொள்ளும், இதற்கு அதிவேக வீக்க அசைவே காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT