Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM
முன்பு ஒரு காலத்தில், ஒரு இடத்தில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்திற்கு ஒரு குட்டிப்பையன் மேல் கொள்ளைப் பிரியம். அவனும் மரத்தின் அருகிலேயே இருப்பான். அவன் மரத்தின் இலைகளைச் சேகரிப்பான். அதை வைத்து மாலையும், தொப்பியும் செய்து அணிந்துகொள்வான். அப்படியே அவன் ஒரு காட்டுராஜாவாக மாறிவிடுவான்.
அவன் மரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுவான். அதன் கிளைகளைப் பிடித்துத் தொங்கி விளையாடுவான். அதன் சுவையான பழங்களை அவன் விருப்பப்படி பறித்துத் தின்பான்.
பின்பு அவனும் மரமும் கண்ணாமூச்சி விளையாடுவார்கள். விளையாடிக் களைத்தபோது, அவன் மரத்தின் நிழலில் படுத்து உறங்குவான். அவனுக்கு அந்த மரத்தை ஏன் பிடித்திருந்தது?
காலம் ஓடியது. குட்டிப்பையன் வளர்ந்து பெரியவன் ஆனான். அவனுக்கு வேறு வேலைகள் இருந்தன. இப்போது மரத்தின் அருகில் வருவதில்லை. மரம் தனிமையில் நின்றது. ஒருநாள் அவன் மரத்தின் அருகே வந்தான். மரம் நேசத்தோடு, “வா மகனே! உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது. நீ என் கிளைகளின் மீது ஏறி விளையாடு. என் பழங்களைப் பறித்துச் சாப்பிடு. என் நிழலில் மகிழ்ச்சியாக ஓய்வெடு” என்று சொன்னது. அதற்கு அவன், “எனக்கு அந்த வயசெல்லாம் முடிந்துவிட்டது. நான் விளையாடி மகிழ வேறு பொருட்கள் வாங்க வேண்டும். எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டும்” என்று சொன்னான்.
“அய்யோ.. என்னிடத்தில் பணம் இல்லையே. இலைகளும் பழங்களும் மட்டும்தானே இருக்கின்றன. மகனே! என் பழங்களைப் பறித்துக்கொள். அவற்றை நகரத்தில் விற்றால் பணம் கிடைக்குமே” என்று மரம் சொல்லியது.
அதைக் கேட்டதுதான் தாமதம். அவன் மரத்தில் ஏறி பழங்களை எல்லாம் பறித்துவிட்டான். பழங்களோடு அவன் நகரத்துக்குச் சென்றான். மரம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது.
பின்பு வெகுகாலம் வரை அவன் அந்த வழியே வரவே இல்லை. மரத்துக்கு வருத்தமாக இருந்தது. வெகுநாள் கழித்து ஒரு நாள் அவன் மறுபடியும் வந்தான். சந்தோஷமாக அசைந்தாடியது மரம். “வந்துவிட்டாயா மகனே! நீ என் கிளைகளில் ஏறி ஊஞ்சலாடி விளையாடு” என்று சொன்னது. அதற்கு அவன், “எனக்கு ரொம்ப அவசரம். மரத்தில் ஏறுவதற்கு நேரமில்லை. நான் வசிப்பதற்கு வெப்பமும் குளிரும் தாக்காத வீடு ஒன்று வேண்டும். அப்போதுதான் திருமணம் செய்துகொண்டு மனைவி, மக்களோடு சுகமாக வாழ முடியும். எனக்கு நீ ஒரு வீட்டைத் தர முடியுமா?” என்று கேட்டான்.
“அதற்கென்ன மகனே. நீ என் கிளைகளை எல்லாம் வெட்டியெடுத்துக்கொள். அவற்றை வைத்து வீடு கட்டிக்கொள். நீ மகிழ்ச்சியுடன் வசிக்கலாம்” என்று பதில் சொன்னது. அவனும் மரத்தின் கிளைகளை வெட்டியெடுத்து வீடு கட்டினான். அப்போதும் மரம் ஆனந்தம் அடைந்தது. பின்பு வெகுகாலத்துக்கு அவனைப் பார்க்க முடியவில்லை.
காலம் வேகமாக ஓடியது. மறுபடியும் ஒரு நாள் திரும்பி வந்தான். மகிழ்ச்சியினால் மரத்தினால் எதுவும் பேச முடியவில்லை. மரம், “மகனே வா! வந்து விளையாடு!” என்று திரும்பத் திரும்ப அழைத்தது. அதற்கு அவன், “நான் வெகுதூரம் பயணம் செல்ல வேண்டும். எனக்கு ஒரு படகு தருவியா?” என்று கேட்டான். மரம், “அதற்கு என்ன? நீ என் தாய்மரத் தண்டை வைத்து படகு செய்துகொள்” என்று சொன்னது. அவனும் மரத்தண்டை வெட்டியெடுத்துப் படகு செய்தான். அங்கிருந்து படகு மூலம் வேறு நாட்டிற்குச் சென்றான். மரம் மகிழ்ச்சியடைந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு அவன் மறுபடியும் வந்தான். “மகனே, என்னை மன்னிக்க வேண்டும். உனக்குக் கொடுப்பதற்கு இனி என்னிடம் எதுவுமே இல்லை. என்னுடைய பழங்கள் எல்லாம் போய்விட்டன” என்று சொன்னது மரம். அதற்கு அவன், “என் பற்கள் எல்லாம் சொத்தையாகிவிட்டன. பழங்களைச் சாப்பிட முடியாது” என்று சொன்னான்.
மரம் பின்பு, “என் கிளைகள் எல்லாம் போய்விட்டன. இனிமேல் மரத்தில் தொங்கி விளையாட முடியாது. தாய்மரத் தண்டும் போய்விட்டது. மரத்தில் ஏறவும் முடியாது” என்று சொன்னது.
“இந்த வயதான காலத்தில் நான் எப்படி மரம் ஏறமுடியும்?” என்றான் அவன்.
“உனக்கு ஏதாவது தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் என்னிடம் ஒன்றும் இல்லை. நான் ஒரு பட்டமரத்தூர்தானே?” என்று மரம் வேதனையுடன் கூறியது.
“எனக்கு இப்போது எதுவும் தேவையில்லை. உடம்பு முடியவில்லை. அமைதியாக ஒரு இடத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அதுதான் இப்போது என் தேவை” என்று சொன்னான்.
சிதைந்துகொண்டிருந்த தன் சரீரத்தை நேராக நிமிர்த்தி வைக்கச் சிரமப்பட்டுக்கொண்டே மரம், “அப்படியா.. சரி மகனே! அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்ள இந்த பட்டமரத்தூர் ஏற்ற இடம்தான். மகனே வா! என் மீது ஏறி உட்கார்ந்து நன்றாக ஓய்வெடுத்துக்கொள்” என்று சொன்னது. அவன் அதைத்தான் செய்தான். மரம் அப்போதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது.
நன்றி: நன்மையே தரும் மரம்,
கதை: ஜெல் சில்வர்ஸ்டைன்
தமிழில்: உதயசங்கர்
சித்திரம்: கே.பி. முரளீதரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT