Published : 26 Sep 2013 04:51 PM
Last Updated : 26 Sep 2013 04:51 PM

மலைக் கிராம குழந்தைகளை குதூகலப்படுத்தும் ஒரிகாமி பயிற்சி

'உங்களுக்கு ஒரிகாமி (ORIGAMI) தெரியுங்களா...' என்று பேச ஆரம்பித்தார் எஸ்.சி. நடராஜ். ஏதோ புது டான்ஸ் போல் இருக்கே என்று யோசித்தபடி, 'தெரியாது சார் ' என்றேன். நடராஜ், 'சுடர் ' என்ற பெயரில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்.

”ஜப்பான், சீனா மாதிரியான நாடுகள்ள ஸ்கூல் தொடங்கற காலத்தில, பசங்களுக்கு படிக்கற ஆர்வம் வர்றதுக்காக, காகிதங்களை வைச்சு, பொம்மை செய்யற பயிற்சியை கொடுப்பாங்க. இந்த காகிதக்கலை பயிற்சியைத்தான் ஜப்பானிய மொழியில், 'ஒரிகாமி'ன்னு சொல்லுவாங்க” என்று சொல்லி நிறுத்தினார்.

'ஒரிகாமி' க்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வாயெடுக்கும் முன், மீண்டும் பேசத் தொடங்கினார்.

"சாதாரணமாகவே நம்ம குழந்தைக ஸ்கூலுக்குப் போறதுன்னா அடம் பிடிக்கும். நாமாதான் அது வாங்கித்தாறேன், இது வாங்கித்தாறேன்னு சொல்லி, தாஜா செஞ்சு அனுப்பி வைக்கணும். தாளவாடி, பர்கூர் மாதிரியான மலைப்பகுதி கிராமத்துப் பசங்களை படிக்க வைக்க, 'ஒரிகாமி' போல புது, புது டெக்னிக்குகளை செய்ய வேண்டியிருக்கு” என்றார் நடராஜ்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் பள்ளிக்கு செல்லாத மற்றும் இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைத்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், ஆசனூர், தாமரைக்கரை ஆகிய இரு இடங்களில், உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது சுடர் தொண்டு நிறுவனம். இந்த இரு மையங்களிலும் தலா 50 பேர் வீதம், மொத்தம் 100 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர்.

"இவங்களை ஸ்கூலுக்கு கூட்டீட்டு வார்றது ரொம்ப கஸ்டமா இருந்திச்சு. புத்தகம், நோட்டு, பேனா, பரிச்சைன்னு சொன்னாலே, 'ஆளை விடுங்க சாமி'ன்னு ஓட்டம் பிடிப்பார்கள்.

இவங்க பள்ளிக்கூடம் போகணும்னு அவங்க அப்பா, அம்மாக்கு இஷ்டம் இருந்தாலும், அதை எப்படி செய்யறதுன்னு அவங்களுக்கு தெரியலை. இந்த சூழல்லதான், எங்க அமைப்பு உள்ளே நுழஞ்சது. மொதல்ல அவங்க பாஷையில் பேசி, பள்ளிக்கூடத்துக்கு வர வைச்சோம். அப்பறமா கதை சொல்லறது, விளையாட வைக்கிறதுன்னு அவங்க போக்கில விட்டு பிடிச்சோம். அடுத்ததா, படம் வரையறது, பாட்டுன்னு பயிற்சி திட்டத்தை படிப்படியா மாத்தி, பள்ளிக்கூட சூழ்நிலைக்கு அவங்களைத் தயார் படுத்தினோம்” என உண்டு உறைவிடப் பள்ளிக்கு ஆள் பிடிக்கும் விதத்தை விளக்கினார்.

பொதுவா, பொம்மைன்னா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, கப்பல், கூடை, முறம், பறவை, இரட்டைப்படகு, காகம், வாத்து, பென்குயின் பறவை, கொக்குன்னு பல பொம்மை உருவங்களைச் செய்யும் பயிற்சியை பசங்களுக்கு கொடுக்கிறோம்.

இதனால பசங்க ரொம்ப ஆர்வமாயிட றாங்க. காந்தி குல்லாய், நர்ஸ் தொப்பின்னு பசங்களை செய்ய வச்சு, அவங்களே அதை போட்டு பார்க்க வைக்கிறோம். இதனால பசங்க குக்ஷியாகிடறாங்க. பல தலைமுறையா பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத சமுதாயத்திலே வந்த இந்த தலைமுறையாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். அதுக்காகத்தான் இந்த முயற்சி” என்றார் ஒரிகாமி பயிற்சியாளர் சோ.தாமரைச்செல்வன்.

மலைக் கிராம மாணவர்கள் பள்ளிகளில் இருந்து இடை நிற்றலை தடுக்கவே இத்தகைய உண்டு உறைவிடப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஒரிகாமி பயிற்சி மட்டுமல்லாது களிமண் பொம்மை செய்வது, 'பார்வை பயணம்' என்ற தலைப்பில் நகரங்களில் உள்ள பல இடங்களுக்கு அழைத்துச் செல்வது, 'களத்து மேட்டில் பாடம்' என்ற தலைப்பில் இயற்கை வேளாண்மை செய்வது குறித்து பயிற்சிகளை அளிப்பது என மாணவர்களை உற்சாகத்துடன் வைத்திருக்கும்; உபயோகமான பயிற்சிகளின் பட்டியலைப் பார்த்தால், பள்ளிகளுக்கு 'பொதி' சுமந்து செல்லும் நம் குழந்தைகளை நினைத்து ஏக்கம்தான் ஏற்படுகிறது. இத்தகைய பயிற்சிகளோடு, எந்த வகுப்பு படிக்கிறார்களோ, அதற்கான அரசின் பாடத்திட்டத்தையும் படிக்கின்றனர் இந்த மாணவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம், இப்போது இருப்பதுபோல, விதவிதமான எலெக்ட்ரானிக் பொம்மை களை வைத்து எந்த குழந்தையும் விளையாடியதில்லை. குழந்தைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாத மரப்பாச்சி பொம்மைகளூம், கையில் கிடைக்கும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதா கப்பல், கத்திக் கப்பல், ஜெட் விமானம் போன்றவையே பெரும்பாலான குழந்தை களின் விளையாட்டு சாதனங்கள். தற்போது, 'ஒரிகாமி' என்ற பெயரில், அதே பயிற்சி ஜப்பானில் இருந்து இறக்குமதியாகி, நம்ம ஊரு மலைப்பகுதி குழந்தைகளை குஷிப்படுத்தி வருகிறது. காலங்கள் மாறினாலும், குழந்தைகளின் மனசு மாறவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

ஆசனூர் பள்ளி ஆசிரியர் ராஜாவிடம் பேசியபோது, "எங்க ஸ்கூல்ல 2-ம் வகுப்பில் இருந்து, 8-ம் வகுப்பு வரைக்கும் மொத்தம் 50 பசங்க படிக்கிறாங்க. ரெண்டு வருஷம் தொடர்ச்சியா படிக்கிற மாணவர்களை, 'ரெகுலர்' ஸ்கூல்ல சேர்த்திடுவோம். போன வருஷம் 15 மாணவர்களை சேர்த்தோம்; இந்த வருஷம் 20 பேரை சேர்க்க இருக்கோம். பசங்க ஆர்வமா படிக்கிறத பார்த்தா மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு” என்றார்.

அவருக்கு மட்டுமல்ல, இதை எழுதி முடித்தபின், நிறைவாய் இருப்பதாய் உணர்ந்தேன் நானும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x