Published : 26 Nov 2014 11:53 AM
Last Updated : 26 Nov 2014 11:53 AM
ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு சோம்பேறி இருந்தான். அவன் பேரு தனாகா.
எல்லோரும் அறுவடைக்கு ஊர் ஊரா ஆள் தேடிக்கிட்டு இருக்கும்போது, இவன் மட்டும் வேலைக்கே போகாமல், மரத்தடில நல்லா தூங்கிக்கிட்டு இருப்பான்.
வழக்கம்போல ஒரு நாள் தனாகா சும்மா திரிஞ்சுக்கிட்டு இருந்தான். அப்போது தெருவோரமா ஒரு மண் குடுவை கிடந்துச்சு. ‘என்னது இது, இந்த மண் குடுவை ஏன் இப்படித் தனியா கிடக்குதுன்னு' மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு தனாகா அதை எடுத்துப் பார்த்தான்.
அதுக்குள்ள எட்டிப் பார்த்தப்ப கட்டைவிரல் அளவேயுள்ள ஒரு மனுஷன் உள்ளே இருந்து எட்டிப் பார்த்தான்.
"ஏய், என்ன இது இவ்வளவு சின்னதா கட்டைவிரல் சைஸுக்கு ஒரு மனுஷனா. ம். உன்னை வச்சு விளையாட ரொம்ப ஜாலியாத்தான் இருக்கும். சரி, வா"ன்னு மண் குடுவையோட அந்தக் குட்டி மனுஷன கையில எடுத்துக்கிட்டான்.
வீட்டுக்குப் போன பின்னாடி, "இப்போ வெளில வான்னு உன்னை திரும்பப் பார்க்குறேன்னு” வெளியே எடுத்தான்.
ஆனா, தனாகாவோட ஆச்சரியம் ரொம்ப சீக்கிரமே வடிஞ்சிடுச்சு. என்ன இருந்தாலும் அவன் ஒரு சோம்பேறிதானே. "இப்போ எனக்குத் தூக்கம் வருது, நீ குடுவைக்குள்ளே கிட"ன்னு வழக்கமா தூங்குற மரத்தடிக்குப் போய்ட்டான்.
சாயங்காலம் வீட்டுக்கு வந்து பார்த்தா, வீட்டுக்குள்ள அவன் அளவுக்கு வளர்ந்த இன்னொரு மனுஷன் நின்னான்.
"ஏய் யார் நீ, எப்படி வீட்டுக்குள்ள வந்த? ஓ! நீ அந்தக் குடுவைக்குள்ள கிடந்த குட்டி மனுஷன்தானே. எப்படி இவ்ளோ பெரிசா ஆன?"
"நான், இதைவிட வேகமாக வளருவேன். நீ உன் வேலையப் பார்த்துக்கிட்டுப் போ"ன்னு அவன் வெரட்டுனான்.
சாப்பாட்டு நேரத்துல, தனாகாவோட சாப்பாட்ட அவன் பிடுங்கிக்கிட்டான்.
அதனால தனாகா பசியோட இருந்தான். அது மட்டுமில்ல தனாகாவோட படுக்கையையும் பிடிச்சுக்கிட்டான். தனாகா தரைலதான் படுத்தான்.
கொஞ்ச நாள்லயே, அந்தக் குடுவை மனுஷன் தனாகாவைவிடப் பெருசா வளர்ந்து, "யேய், சாப்பிட வீட்டுல ஒண்ணுமே இல்ல. முதல்ல வெளிய போய் சாப்பாடு கொண்டுவா"ன்னு வெரட்டுனான்.
இதனால பகல் முழுக்க வெளிலயே சுத்துன தனாகா, இரவு தூங்குறதுக்கு வீட்டுக்குப் போனான். "இப்போ போனா அவன் தூங்கிக்கிட்டு இருப்பான்னு நெனைக்கிறேன்"னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே.
போனா, அந்தக் குடுவை மனுஷன் பிரம்மாண்டமா வளர்ந்து வீட்டையே அடைச்சுக்கிட்டு இருந்தான்.
"யாராவது வாங்க. இவன் என் வீட்டை பிடிச்சுக்கிட்டான்"னு தனாகா கத்தினான். ஆனா, அந்தக் குடுவை மனுஷன வெளியேத்த யாரும் வரல. அதனால, நடுங்குற குளிர்ல ராத்திரி முழுக்க தனாகா வெளிலயே இருந்தான். அய்யோ, எனக்குப் பசியெடுக்குது. தூக்கமும் வர மாட்டேங்குது. ஏதாவது வேலை செஞ்சாவது சாப்பிடணும்"னு தனாகா யோசிச்சான்.
அடுத்த நாள், தான் வழக்கமாக உட்காரும் மரத்தடில எப்படிச் சாப்பாடு தேடுறதுன்னு தனாகா யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப, ஒரு ஆள் வந்தார்.
"இந்த மாட்டு வண்டிலேர்ந்து பொருட்களை இறக்க உதவி செய்றியா தம்பி, உனக்குக் காசு தர்றேன்"னு சொன்னார்.
"எனக்குச் சாப்பாடு தருவீங்களா"ன்னு தனாகா கேட்டான்.
அதுக்கு அந்த ஆள் ஒத்துக்கிட்டார். வேலை முடிஞ்ச பின்னாடி சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். "அப்பா, இது அமிர்தமா இருக்கு"ன்னு எச்சில் வழிய சாப்பிட்டான் தனாகா. சாயங்காலம் வீட்டுக்குப் போனப்ப, அந்தக் குடுவை மனுஷன் பாதி அளவா மாறி இருந்தான்.
அன்னைக்கு தனாகா வீட்டுல தூங்கினான். அடுத்த நாள், வேலை கொடுத்த அந்த ஆள் தனாகாவைப் பார்த்தான். "கடைக்குக் கொஞ்சம் பொருள் எடுத்துப் போகணும், வர்றியான்னு கேட்டான்.
"நேத்து மாதிரி சாப்பாடு வாங்கித் தந்தா வர்றேன்"னு தனாகா சொன்னான்.
அன்னைக்குச் சாயங்காலம் வீட்டுக்குப் போனப்ப, முந்தின நாளைவிடக் குடுவை மனுஷன் பாதியா சுருங்கிப் போயிருந்தான்.
தனாகாவைப் பார்த்து "நீ பகல் முழுக்க வேலை செஞ்சேன்னு நினைக்கிறேன்" என்றான் குடுவை மனுஷன். "ஆமா, அதுக்கும் நீ சுருங்குறதுக்கும் என்ன சம்பந்தம்"னு தனாகா கேட்டான். "அதெல்லாம் ஒண்ணுமில்லையே"ன்னு குடுவை மனுஷன் சொன்னான்.
ஆனா, குடுவை மனுஷன் சொன்னது தனாகா மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. அடுத்த நாளும் வேலைக்குப் போனான். அன்னைக்குச் சாயங்காலம் வீடு திரும்பினப்ப, குடுவை மனுஷன் கட்டைவிரல் தண்டிதான் இருந்தான்.
‘இவன் சுருங்குறதுக்கும், நாம வேலை செய்றதுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு'ன்னு தனாகா மனசுல தோணுச்சு. "அப்படியா"ன்னு குடுவை மனுஷங்கிட்ட கேட்டான்.
"ஆமா, அதுல சந்தேகமே இல்ல. நீ சோம்பேறியா இருந்தா நான் வளருவேன். நீ வேலை செஞ்சா நான் சுருங்குவேன். சரி, இப்போ எனக்கு ஒரு உதவி செய், நீ கண்டெடுத்த குடுவைல வச்சு, எங்க என்னைப் பார்த்தியோ, அங்கேயோ போட்டுடு. இனிமே இந்த வீட்டுல எனக்கு வேலையில்ல"ன்னு குடுவை மனுஷன் சொன்னான்.
ரொம்ப சந்தோஷம்னு தனாகா அதே மாதிரி செஞ்சான். ‘இவனை எல்லாம் இனிமே சமாளிக்க முடியாது. இவன் இனிமே நம்ம வீட்டுக்கே வரக் கூடாது'ன்னு மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டே, குடுவைல குட்டி மனுஷனை வச்சு சாலையோரமா வச்சான் தனாகா.
கடைசியா தனாகாவோட சோம்பேறித்தனம் காணாமப் போச்சு. அந்தக் கட்டைவிரல் தண்டி மனுஷனோட பேர சொல்லவேயில்லை பார்த்தீங்களா, அவன் பேரு ‘சோம்பேறித்தனமா’ இருக்குமோ?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT