Published : 12 Sep 2013 04:09 PM
Last Updated : 12 Sep 2013 04:09 PM
ரசிகமணி டி.கே.சிதம்பரநாதனின் மகனான தீர்த்தாரப்பன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆற்ற முடியாத துயரத்தில் அமர்ந்திருந்த டி.கே.சி.க்கு ஒரு கடிதத்தை தந்தார்கள். அதை வாங்கி, கண்களை இடுக்கி மெதுவாக படித்தார். திடீரென்று கண்கள் பிரகாசமாகின. மகனின் மரணத்தை மீறியும் அவரின் குரலில் ஓர் உற்சாகம். “ஆஹா! ஆஹா” என்று அவர் பூரித்துப்போக, 'என்ன சங்கதி' என்று அவர் கையில் இருந்த தாளை வாங்கிப்பார்த்தார்கள். கவிமணி அவரின் மகனின் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கற்பா அது. “இப்படி ஓர் இரங்கற்பா கிடைக்க எத்தனை மகனை வேண்டுமானாலும் இழக்கலாம்!” என்று சொன்னாராம் ரசிகமணி. பெயருக்கு ஏற்ற ஆள்தான் அவர்.
சுசுமு ஓனோ எனும் ஜப்பானிய பேராசிரியர் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் பொற்கோவுடன் இணைந்து எண்ணற்ற ஆய்வுகளை தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து செய்தார்கள். அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.
பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து, கடந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தது வரலாறு. அவரை எல்விஸ் துரை எனும் ஆங்கிலேயர் சந்தித்தார். அவர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாற்றிக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார். உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை சற்றும் காட்டிக்கொள்ளாமல், “எத்தனை பிரதிகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐநூறு!” என்று ஆர்வம் கொப்பளிக்க விடை வந்து விழுந்தது. அத்தனை பிரதியையும் அப்படியே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார் பாண்டித்துரை தேவர். வேலையாளை அழைத்தார். “எல்லாத்தையும் குழி தோண்டி சீமெண்ணெய் ஊத்தி கொளுத்திடு!” என்றார். ஒரு தவறான திருக்குறள் பிரதிகூட தமிழனுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அத்தனை கவனம் இருந்தது அவரிடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT