Last Updated : 16 Apr, 2014 02:47 PM

 

Published : 16 Apr 2014 02:47 PM
Last Updated : 16 Apr 2014 02:47 PM

நிலா டீச்சர் வீட்டில்: காற்றுக்கும் காதுக்கும் என்ன தொடர்பு?

நிலா டீச்சர் குடும்பத்தினர் செல்லும் கார் மேட்டுப்பாளையத்தைத் தாண்டி மலைப் பாதையில் ஏறத் தொடங்கியது. ஊட்டிக்குச் செல்லும் அந்த மலைப் பாதையில் கார் ஏறத் தொடங்கியதுமே கவின் மற்றும் ரஞ்சனியின் முகத்தில் பரவசம். மலையில் கார் உயரே செல்லச் செல்லச் சமவெளிப் பகுதியிலிருந்த சூழல்களும் மாறி வருவதை அவர்கள் உணர்ந்தனர். மலைப் பாதையின் இருபுறமும் நன்கு பருத்து உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் அவர்கள் கவனத்தை ஈர்த்தன. தரைப் பகுதியில் பார்த்திராத விதவிதமான செடி, கொடிகள் எங்கும் பரவியிருந்தன. பார்க்கும் திசையெல்லாம் காட்சியளித்த பசுமை அவர்களைக் குதூகலம் அடையச் செய்தது.

இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் குன்னூரை அடையப் போகிறார்கள். அப்போது கவின் தனது காதுகள் வலிப்பதைப் போல உணர்ந்தான். காதில் கை வைத்துத் தடவிப் பார்த்தான். அப்போதுதான் அருகிலிருந்த ரஞ்சனியும் அவளது காதில் கை வைத்திருப்பதைப் பார்த்தான் கவின்.

“உனக்குக் காது வலிக்கிறதா?” என்று கவின் கேட்டான்.

“ஆமாம்” என்று கூறிய ரஞ்சனி, “எனக்குக் காது வலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று திரும்பிக் கேட்டாள்.

“எனக்கும்தான் காது வலிக்கிறது” என்றான் கவின்.

கார் ஓட்டிக் கொண்டிருந்த நிலா டீச்சர், அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுச் சிரித்தார்.

“அம்மா ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று சப்தமாகக் கேட்டான் கவின்.

“சமவெளிப் பகுதியையே பார்த்த நீங்கள் இப்போதுதான் முதல் முறையாக மலைப் பகுதிக்கு வருகிறீர்கள். இந்தக் காது வலி போலவே ஏராளமான புதிய அனுபவங்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள்” என்றார் நிலா டீச்சர்.

“அம்மா மலைப் பகுதிக்குச் சென்றால் காது வலிக்குமா?” ரஞ்சனி கேட்டாள்.

“தொடர்ந்து வலிக்காது. ஆனால் கொஞ்ச நேரம் வலிக்கும்” என்று நிலா டீச்சர் சொன்னார்.

“நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை அம்மா” என்றான் கவின்.

அதற்குள் அவர்கள் சென்ற கார் குன்னூருக்குள் நுழைந்து விட்டது. ஊட்டி மலையின் தனித்துவமான அந்தக் குளிரை நன்றாகவே அவர்கள் உணர்ந்தனர். காரை ஓரமாக நிறுத்தி விட்டுச் சூடாக ஒரு டீ அருந்தினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் இருந்தது.

அதை நன்கு உணர்ந்திருந்த நிலா டீச்சர், காரை ஓரமாக நிறுத்தினார். காரி லிருந்து கீழே இறங்கிய கவின், ரஞ்சனியின் கண்கள் அங்குச் சற்றுத் தூரத்தில் ஆவி பறக்க விற்பனையாகிக் கொண்டிருந்த மிளகாய் பஜ்ஜி கடையின் பக்கம் திரும்பின. வேகமாக அங்கு நடையைக் கட்டினான் கவின். அவனைப் பின் தொடர்ந்தனர் மற்றவர்கள்.

அந்தக் குளிரில் சூடான மிளகாய் பஜ்ஜியின் ருசியே தனிதான். மிளகாய் பஜ்ஜியை முடித்துக்கொண்டு அருகிலிருந்த டீ கடைக்குச் சென்று ஆளுக்கொரு கிளாஸ் டீயை வாங்கி உறிஞ்சினார்கள்.

“அம்மா ஏன் காது வலிக்கிறதுன்னு சொல்லுங்க?” என்று காது வலி கதையை மீண்டும் கிளப்பினாள் ரஞ்சனி. நிலா டீச்சர் சொல்லத் தொடங்கவும், டீயை உறிஞ்சிய படியே மற்றவர்கள் ஆர்வமுடன் கேட்கத் தொடங்கினர்.

“சமவெளிப் பகுதியில் நாம் இருக்கும்போது வெளிக் காற்றின் அழுத்தமும், நம் காதின் செவிப்பறையைத் தாண்டி உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தமும் ஒரே அளவில் இருக்கும். மலையில் உயரச் செல்லச் செல்லக் காற்றின் அழுத்தம் குறையும். ஆனால் நம் காதின் செவிப்பறைக்கு உள்ளே உள்ள காற்றின் அழுத்தம் மட்டும் சமவெளிப் பகுதியில் இருந்த காற்றின் அழுத்தத்துக்கு இணையாக இருந்து கொண்டிருக்கும். அதாவது செவிப்பறைக்கு உள்ளே உள்ள காற்றின் அழுத்தம் அதிகமாகவும், வெளியே நம்மைச் சுற்றியுள்ள காற்றின் அழுத்தம் குறைவாகவும் இருக்கும்.

பொதுவாக அதிக அழுத்தம் நிறைந்த காற்று ஓரிடத்தில் இருந்தால், அழுத்தம் குறைந்த காற்று உள்ள இடத்தை நோக்கி வேகமாகச் செல்லும். அழுத்தத்தைச் சமன் செய்யும் இயல்பு காற்றுக்கு உள்ளது.

ஆகவே, நம் காதினுள் செவிப்பறைக்கு உள்ளே இருக்கும் அழுத்தம் நிறைந்த காற்று, வெளியே அழுத்தம் குறைந்த காற்று இருக்கும் இடத்தை நோக்கி நகர்வதால் நம் செவி உறுப்புகளை அழுத்திக் கொண்டு வெளியே வருகின்றன. அதனால் நம் காதுகளுக்கு வலி ஏற்படுகிறது.

மலையில் ஏறிய சற்று நேரத்துக் கெல்லாம் காதினுள் இருக்கும் காற்றின் அழுத்தமும், வெளியில் இருக்கும் காற்றின் அழுத்தமும் ஒரே நிலையை அடைந்த பிறகு காது வலியும் குறைந்து விடும்.

விமானத்தில் பயணம் செய்வோர் கூட விமானம் ஏறும் போதும், இறங்கும் நேரத்திலும் இதேபோல் காது வலி எடுக்கும்” என்றார் நிலா டீச்சர்.

நிலா டீச்சரின் பதில் கவினுக்கும், ரஞ்சனிக்கும் வியப்பாக இருந்தது. இன்னும் பல புதுமைகளை அறியப் போகிறோம் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், காரினுள் ஏறிக்கொண்டனர். குன்னூரைத் தாண்டி ஊட்டியை நோக்கி அவர்களது கார் மலைப் பயணத்தைத் தொடர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x