Published : 06 Nov 2013 10:34 PM
Last Updated : 06 Nov 2013 10:34 PM
வருடம்தோறும் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்துவது வழக்கம். கிராமப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி என்பது தீபாவளி, பொங்கல்தான். அவ்வளவு ஆர்வமாகச் செயல்படுவார்கள் மாணவர்கள். தனியாகவோ, குழுவாகவோ இருந்து தமிழ், ஆங்கிலம் என்று எல்லாப் பாடத்திற்கும் மாதிரிகளை, செய்முறைகளைத் தயாரித்துக் காட்டி அசத்துபவர்கள் அவர்கள். பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என்று அசத்தல் பயணம் தொடரும்.
பரிசுகளைக் கடந்து நாம் பார்க்கவேண்டியது ஒன்று இருக்கிறது. அசத்தும் கிராமத்து மாணவர்கள், பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் செவ்வனே செய்து முடிப்பவர்கள்தான் இவர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அரசுப் பள்ளியில், இந்த வருடம் கணிப்பொறி 1/0-யில் இயங்குவது, கணிப்பொறி பாகங்களைக் கழட்டித் திரும்பவும் ஒன்று சேர்த்து இயக்கியது, உண்மையான நுரையீரல் சுருங்கி விரிவது, மின்விசிறியை ஓடவிட்டு காற்றாலையில் மின்சாரம் எடுப்பது, 100 அடி தூரத்திற்குக் கயிற்றில் ராக்கெட் விடுவது, கணித விளையாட்டு, பிஎம்ஐ கண்டுபிடிப்பது என்று விதவிதமாக அமர்க்களப்படுத்திவிட்டனர் மாணவர்கள். இவை எல்லாவற்றையும் விட சுவராஸ்யமான விஷயம் இந்தப் பள்ளியில் நடந்தது.
வழக்கமாக எல்லா அறைகளிலும் கண்காட்சி நடக்கும். இந்தப் பள்ளியில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதில் தான் அசத்தல் நடந்தது. ஆம். 'மூலிகைக் கண்காட்சி மற்றும் மூலிகைத் தயாரித்தல்' என்ற பெயரில் ஓர் அறை.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் மூலிகைகள் உட்பட, அதிகம் தெரியாத மூலிகைகள் வரை கண்காட்சியில் வைக்கப்பட்டது. ஏலக்காய் முதல் யானை நெருஞ்சில் வரை என்று சொல்லலாம். 32 மூலிகைகள் கண்காட்சியில் இடம் பெற்றன. ஒவ்வொரு மூலிகைகளின் பெயர், உண்மையான தாவரம், அவற்றின் மருத்துக் குணம் என்று மாணவர்கள் எழுதியிருந்தார்கள்.
மாணவர்கள் மூலிகைகள் தயாரிக்க அந்த அறையில் தனியாக இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
சிறுநீர்க்கற்களைக் கரைக்கும் யானைநெருஞ்சில் ஊறல் மற்றும் யானை நெருஞ்சில் கஷாயம், ரத்தம் சுத்திகரிக்கும் வில்வம் நீர் ஊறல், சிறுநீர் உபாதையைத் தீர்க்கும் சிறுகண்பீளைக் கஷாயம், சளிபோக்கும் தூதுவளை கஷாயம், குளிர்ச்சியைத் தரும் சோற்றுக்கற்றாழை பால் ஊறல், புண் ஆற்றும் சோற்றுக் கற்றாழை மஞ்சள் பற்று, மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி ஊறல், சொறியையும் சிரங்கையும் போக்கும் குப்பைமேனிப் பற்று, தேமல், படை தீர்க்கும் சரக்கொன்றைப் பற்று மற்றும் துளசிப் பற்று, டெங்கு காய்ச்சல் தீர்க்கும் பப்பாளி இலைச் சாறு மற்றும் மலைவேம்பு கஷாயம், முடி வளர உதவும் சோற்றுக் கற்றாழை ஜெல் மற்றும் கற்றாழை எண்ணெய், வீக்கம் குறைக்கும் வெற்றிலை ஒத்து என்று பலவற்றை பார்வையாளர்களுக்குக் காட்டி அசத்தினார்கள் மெலட்டூர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
இதில் அனைவரையும் கவர்ந்தது யானை நெருஞ்சில் கஷாயம்தான். யானை நெருஞ்சில் செடியை வேரொடு பிடுங்கி, அதன் வேரை நல்ல நீரில் அலசி, வேருடன் 4 டம்ளர் நீரில் கொதிக்கவைத்தார்கள். கொதியில் நீரின் நிறம் பச்சையாகியாது. 4 தம்ளர் நீரை 1 டம்ளர் நீராகச் சுண்டக் காய்ச்ச, பச்சை நீர் பழுப்பு நீரானது. இந்த நீரினைக் காலைவேளையில், வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாள் சாப்பிட்டால் போதுமாம். சிறுநீர்ப்பையில் உள்ள கற்கள் எல்லாம் கரைந்து வெளியேறிவிடுமாம். தேவையில்லாமல் ஆப்ரேஷன் செய்து சிறுநீர்ப்பாதையைச் சிக்கலாக்கிக்கொள்ளவோ, 40, 50 ஆயிரம் செலவு செய்யவேண்டியதில்லை என்று ஆச்சரியம்படும்படி விளக்கினார்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான சிவாமணியும் ரத்னாஸ்ரீயும்.
அடுத்த முறை நடக்கும் கண்காட்சியில், யாருக்கும் தெரியவராத மூலிகைக்களைக் கண்காட்சியில் வைப்பதுடன், புதிய செய்முறைகளைச் செய்துகாட்ட விருப்பம் தெரிவித்தார்கள் மூலிகை மாணவர்கள்.
அறிவியல் கண்காட்சியில் மூலிகைக் கண்காட்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க யோசனை சொன்ன அறிவியல் ஆசிரியர்கள் ஆர்.விஜயலெட்சுமி, எஸ்.சோனி, ஆர்.கே.கீதாவை, மூலிகைகளைத் திரட்டி, செய்முறைகளைச் செய்ய உதவிய தமிழாசிரியர் ரா.தாமோதரன், பங்கேற்ற மாணவர்கள், தலைமையாசிரியை என்.சசிகலா ராணி உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT