Published : 19 Nov 2014 12:41 PM
Last Updated : 19 Nov 2014 12:41 PM
பெரிய பெரிய பலசாலிகளை வீழ்த்தியவன் மகாபாரதப் பீமன், அவனைப் போன்ற பலவான் ஒருவன் இந்தக் காலத்திலும் இருந்தால், எப்படி இருக்கும்? கெட்டவர்களை அடிச்சு துவைச்சிடலாமே? இந்தக் கற்பனையின் விளைவுதான் சோட்டா பீம்.
இந்திய டிவி தொடர்களில் குழந்தைகளிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருப்பது சோட்டா பீம். டோலக்பூர் என்ற சிறிய நகரத்தில் வாழும் பீம் என்ற 11 வயது சிறுவனின் சாகசங்களைப் பற்றியதுதான் இத்தொடர்.
சோட்டா பீமன் கார்ட்டூன், காமிக்ஸ் புத்தகம் மட்டுமல்ல, சோட்டா பீம் பொம்மை, பென்சில் பாக்ஸ், சோட்டா பீம் டி ஷர்ட், தலையணை உறை, பெட் ஷீட் போன்றவற்றுக்கு அமோக வரவேற்பு. இப்படி 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. சோட்டா பீம் கேரக்டர் மீது குழந்தைகளுக்கு அவ்வளவு ஆர்வம்.
சோட்டா பீம் பிறக்கும்போதே அசாத்திய வலிமை கொண்ட சிறுவனாக இருக்கிறான். வாழைப்பழமும் லட்டும் அவனுக்கு ரொம்ப பிடித்தவை. லட்டைச் சாப்பிட்டால் சோட்டா பீமின் வலிமை, சர்ரென்று ஏறிவிடும். குட்டிப் பையனாக இருந்தபோதும் டோலக்பூரின் காவலனாக, ஏழைகளுக்கு உதவும் நல்லவனாக, கொள்ளைக்காரர்கள், தீயவர் களுக்கு எதிராகப் போராடும் வீரனாக இருக்கிறான் சோட்டா பீம்.
பீமின் ஃபிரெண்ட்ஸ்
சுட்கி: டோலக்பூரில் வசிக்கும் 8 வயது சிறுமியான சுட்கி, பீமின் குளோஸ் ஃபிரெண்ட். தன் அம்மாவின் கடையிலிருந்து லட்டுகளை எடுத்துவந்து பீமுக்குக் கொடுப்பாள் சுட்கி. பல சாகசங்களில் பீமுக்கு உதவியும் செய்வாள்.
ராஜூ: டோலக்பூர் ராணுவத் தளபதியின் மகன், ஐந்து வயது குட்டிப் பையன் ராஜு, வயதுக்கு மீறிய பலசாலி, சிறந்த வில்லாளி. ஊரே பயப்படும் காலியா என்ற பயில்வானைப் பார்த்து இவன் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டான்,
ஜக்கு: டோலக்பூரின் எல்லையில் இருக்கும் காட்டில் வசிக்கும் ஜக்கு, பேசும் சக்தி கொண்ட குரங்கு. பீமுக்கு மரத்தில் இருந்து மரம் தாவுவது போன்ற பல வித்தைகளைக் கற்றுக்கொடுத்தது இதுதான். பீமுக்கு லட்டு தேவைப்படும் போதெல்லாம் சாமர்த்தியமாக உதவும், ஜக்குவுக்கு காமெடி உணர்வு அதிகம். காட்டு விலங்குகளுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் ஜக்குவும் பீமும்தான் உதவுவார்கள்.
காலியா பயில்வான்: சோட்டா பீமின் முக்கியமான எதிரி காலியா, பலமுறை தோற்ற பிறகும், பீமை வெல்லப் பல முயற்சிகளை மேற்கொள்வான். ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பி ஓடிவிடும் காலியா, பீமும் அவனுடைய நணபர்களும் பேசுவதை ஒட்டுக்கேட்டு, திட்டங்களைத் தீட்டுவான்.
கீசகன்: 16 வயது மல்யுத்த வீரனான கீசகன், ரீசண்டாதான் அறிமுகப்படுத்தப்பட்டான். டோலக்பூரில் பீமைவிட அதிகப் புகழ்பெற விரும்பும் கீசகன், அடிக்கடி பீமனுடன் மோதுவான். கிரிக்கெட், ஹாக்கி, காளை மாட்டு பந்தயம் என்று அனைத்துப் போட்டிகளிலும் பீமிடம் தோற்றுவிடும் கீசகன், பீமை வெல்வ தையே லட்சியமாகக் கொண்டவன்.
மன்னர் இந்திரவர்மர்: இவர்தான் டோலக்பூரின் மன்னர். இவர் சிறந்த வீரராக இருந்தாலும், அயல்நாட்டு மன்னன் சந்திரவர்மன் மூலம் நாட்டுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம் பீமின் உதவியையே நாடுவார்.
தூனி பாபா: காட்டில் வசிக்கும் இந்த முனிவர் அசாத்திய மனவலிமை பெற்றவர். பீமுக்கும் நண்பர்களுக்கும் ஆலோசனை சொல்வார். ஒருமுறை பீமை சூப்பர்ஹீரோவாக மாற்றியவர் இவரே.
ஏன் பிடிக்கிறது?
சோட்டா பீம் தொடரைக் குழந்தைகளைப் பார்க்கவிடுவது மட்டுமில்லாமல், பெற்றோர்களும் விரும்பி பார்ப்பதற்கு அப்படி என்ன காரணம்?
# எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
# வெற்றி, தோல்வியைவிட போட்டியில் பங்கேற்பதே முக்கியம் என்கிறது.
# விழிப்புடன் இருக்கச் சொல்வதுடன், குறை கூறுவதை நிறுத்த வலியுறுத்துகிறது.
# நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
# நேர்மையையும் தைரியத்தையும் வளர்த்து, விவேகத்துடன் செயல்படச் சொல்கிறது.
பீம் தொடருக்கு வயது 7
இந்தியாவின் மிகப்பெரிய கார்ட்டூன் தயாரிப்பு தனியார் நிறுவனமாக உருவெடுத்துள்ள கிரீன் கோல்ட் அனிமேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்தான் சோட்டா பீமை தயாரிக்கிறது. 2008-ஆம் ஆண்டு ராஜீவ் சிலாக்கா என்பவரால் போகோ டிவி அலைவரிசைக்காக இத்தொடர் உருவாக்கினார்.
சோட்டா பீம் தொடரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாகத் தொலைக்காட்சி கார்ட்டூன் தொடராகவும், சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகத் தொடராகவும் இந்தியா முழுவதுமுள்ள சிறுவர்களைச் சோட்டா பீம் நண்பர்களாக்கிக் கொண்டுள்ளான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT