Published : 27 Jul 2016 11:31 AM
Last Updated : 27 Jul 2016 11:31 AM
வெப்பநிலை ஒரு செல்சியஸ் கூடினாலும்; குறைந்தாலும் அதை உடனே கண்டுபிடித்துவிடும் ஒரு பறவை இருக்கிறது. அந்தப் பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பறவையின் பெயர் ஃபிரஸ் டர்க்கி. நம்மூரில் வான்கோழி என்று சொல்வோமில்லையா? அந்தப் பறவையின் வகைதான் அது!
‘ஃபிரஷ் டர்க்கி’ பறவைகள் ஆஸ்திரேலியாவில் நிறைய உள்ளன. இந்தப் பறவை முட்டைகளை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸில் வைத்துப் பாதுகாக்கும். இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கும். அதைச் சுற்றித்தான் முட்டை போடும். முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வர ஆறு மாதங்கள் வரை ஆகிவிடும். இந்த ஆறு மாதங்களும் மண் மேட்டின் வெப்பநிலையை இரவும், பகலும் சீராக வைத்துக்கொள்ளும்.
கோடை காலமாக இருந்தாலும் சரி; குளிர்காலமாக இருந்தாலும் சரி வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வது ஆண் பறவையின் கடமை. வெப்பம் கூடும்போது மண்மேட்டில் காற்றுத் துளைகளை ஆண் பறவை இடும். இன்னும் வெப்பம் கூடினால் முட்டையைக் குளிர்ந்த மணலால் மூடிவைக்கும்.
இந்தப் பறவை வெப்பநிலையை எப்படி உணர்ந்துகொள்கிறது? தன் தலை, பாதங்கள், அலகினால் தட்ப வெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்கிறார்கள். இதுபற்றி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
நம் நாட்டில் இந்தப் பறவை முட்டை போட்டால், அதைப் பாதுகாக்க, குளிர்சாதனப் பெட்டிதான் வேண்டும் போல!
தகவல் திரட்டியவர்: ஆர்.பிரசன்னா, 11-ம் வகுப்பு, ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT