Published : 08 Oct 2014 02:40 PM
Last Updated : 08 Oct 2014 02:40 PM
கீழே விழுந்து முட்டி உடைந்து ரத்தம் வந்தாலும்கூட, நமக்கெல்லாம் சின்ன வயசிலிருந்து பிடித்த ஒரே வாகனம் சைக்கிளாகவே இருக்கும். சைக்கிள் ஓட்டுவது ஒரு சுகம், அதை ஓட்டும்போது சுதந்திரம் கிடைத்தது போலிருக்கும்.
சைக்கிள் என்பது 'மனிதர்கள் ஓட்டும் வாகனம்' என்ற தொழில்நுட்பத்தின் முதல் அடி. அது மோட்டார் சைக்கிள், கார்கள் என்று வளர்ந்து, இன்றைக்குக் காற்றைக் கிழித்துச் செல்லும் அதிவேக வாகனங்களில் வந்து நிற்கிறது. மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்தது எவ்வளவு பெரிய திருப்புமுனையோ, அதுபோலத்தான் சைக்கிளைக் கண்டுபிடித்ததும். சில சைக்கிள் சுவாரசியங்கள்:
இன்றைக்கு நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ‘பைசைக்கிள்' என்ற வார்த்தை 1860-களில் ஃபிரான்சில் முதன்முதலில் பிரபலமாக ஆரம்பித்தது. சைக்கிள் என்ற பெயருக்கு 1869-ல் காப்புரிமை பெறப்பட்டது.
முதன்முதலில் ஓடக்கூடிய இருசக்கர வாகனம் (சைக்கிள்) ஒன்றை 1817-ல் கண்டறிந்தவர் ஃபிரான்ஸை சேர்ந்த பாரன் கார்ல் தி டிராய்ஸ் தி சாயர்பர்ன். அது முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டிருந்தது. குதிரையைப் பயன்படுத்தாமல், வேகமாகப் பயணிக்க அந்த வாகனம் உதவியது. பெடல் இல்லாத அந்த வாகனம், தரையில் காலை உந்தி தள்ளுவதன் மூலமே நகர்ந்தது.
விமானத்தைக் கண்டறிந்த ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் சிறிய சைக்கிள் ரிப்பேர் கடையை வைத்திருந்தனர். 1903-ல் அவர்கள் முதன்முதலில் பறக்கவிட்ட விமானத்தை, அந்த சைக்கிள் கடையில்தான் உருவாக்கினார்கள்.
சைக்கிளை மிகவும் சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் அதில் 300க்கும் மேற்பட்ட பாகங்கள் இருக்கின்றன. பலவும் நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஒரு சைக்கிளில் உள்ள மொத்தப் பாகங்களில் பாதி சைக்கிள் சங்கிலியில் இருப்பவைதான்.
சீனாவின் தேசிய வாகனம் சைக்கிள். சீனாவில் 50 கோடி சைக்கிள்கள் உள்ளன. 1800-களின் பிற்பகுதியில் சீனாவில் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மலையேறுவதை எளிதாக்கக்கூடிய சைக்கிள்கள் 1970-களில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இருசக்கர வாகனங்களைப் போல 21 கியர்கள் இருக்கும்.
1935-ல் ஃபிரெட் ஏ. பிர்க்மோர், தனது சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றி வந்தார். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா வழியாக 65 ஆயிரம் கிலோமீட்டரை அவர் கடந்தார். 40,000 கிலோமீட்டர் தொலைவுக்கு சைக்கிள் மூலமாகவும், எஞ்சிய தொலைவைப் படகிலும் கடந்தார். இந்தப் பயணத்தில் ஏழு ஜோடி டயர்களை மாற்றினார்.
1890களில் இருந்து 100 ஆண்டுகளைத் தாண்டியும் சைக்கிளின் அடிப்படை வடிவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம் இல்லை. அதில் சிற்சில மேம்படுத்துதல்களே நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் சைக்கிள் ஒரு வியப்பூட்டும் இயந்திரம்தான்.
மெதுவாகச் சைக்கிள் ஓட்டுவதில் ஜப்பானைச் சேர்ந்த சுகுனாபு மிட்சுஷி 1965-ல் மிகப் பெரிய சாதனை படைத்தார். 5 மணி 25 நிமிடங்களுக்கு அவர் ஒரே இடத்தில் இருந்தார் (ஸ்டாண்ட் போடாமல்தான்).
அதிவேகமாக சைக்கிளில் சென்ற சாதனையை அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியனும், டிரையாத்லான் வீரருமான ஜான் ஹோவர்ட் 1985-ல் புரிந்தார். இரும்புமனிதர் என்று அழைக்கப்பட்ட அவர், மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் சைக்கிள் ஓட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் உள்ள நியூபெரி செயின்ட் ஹெலன்ஸ் பள்ளியில் ஒற்றைச் சக்கரச் சைக்கிளை ஓட்டிப் பழகுவது கட்டாயமான விஷயம்.
ஒவ்வொரு வருடமும் 100 கோடி புதிய சைக்கிள்கள் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் உள்ள மோட்டார் வாகனங்களைப் போல, இரண்டு மடங்கு சைக்கிள்கள் உள்ளன.
ஒரு கார் நிறுத்தும் இடத்தில் குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சம் 20 சைக்கிள்களை நிறுத்தலாம்.
சைக்கிள் ஓட்ட பெட்ரோல் தேவையில்லை, காற்றை மாசுபடுத்துவது இல்லை, உடற்பயிற்சிக்கும் துணைபுரிகிறது...இத்தனையும் தரும் சைக்கிளைவிடச் சிறந்த வாகனம் வேறு என்னவாக இருக்க முடியும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT