Published : 26 Mar 2014 12:45 PM
Last Updated : 26 Mar 2014 12:45 PM
ஆதித்யா நன்றாக ஓவியம் வரைவான். ஒரு நாள் சூரிய உதயத்தைக் கண்டான். உடனே அதை வரைந்தான். அதில் அடர்ந்த மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் பச்சை வண்ணம் பூசினான். பூத்துக் குலுங்கும் மலர்களுக்கும் கனிகளுக்கும் மஞ்சள் நிறத்தைத் தந்தான். ஆகாயத்தையும் பரந்த நீர்ப்பரப்பையும் நீல வண்ணத்தில் அமைத்தான். இருளான பகுதிகளுக்கும் பறவைகளுக்கும் கறுப்பு நிறம் கொடுத்தான். மலை முகடுகளிடையே காட்சி தரும் சூரியனுக்குச் சிவப்பு வண்ணமிட்டான்.
ஆதித்யா அந்த ஓவியத்தை வாட்டர் கலர்களைப் பயன்படுத்தி வரைந்திருந்தான். வாட்டர் கலர் பாக்ஸில் இருந்த வண்ணங்கள் அனைத்தும் திடீரென்று உயிர் பெற்று எழுந்து வந்தன. அவை ஆதித்யா வரைந்த ஓவியத்தைத் தங்கள் பக்கம் இழுத்துப்பார்த்தன. அவன் வரைந்திருந்த அந்த சூரியோதக் காட்சி தத்ரூபமாய் இருந்தது. வண்ணங்கள் ஒவ்வொன்றும் தங்களால் தான் ஓவியம் அழகாய் இருக்கிறது என்று விவாதம் செய்ய ஆரம்பித்தன. விவாதம் வளரவே, தங்களில் யார் சிறந்தவர் எனச் சொல்லும்படி ஆதித்யாவை அவை கேட்டன.
ஆதித்யா மூன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுவன். ஒவ்வொரு முறையும் ஓவியம் வரைய அமரும்போதும் வண்ணங்களில் எது சிறந்தது என அவன் தனக்குள் எண்ணிப் பார்ப்பான். அதை வைத்து, “வெள்ளையே சிறந்த வண்ணம்!” என்றான்.
வெள்ளையா...? எப்படி...? வண்ணங்கள் ஆச்சரியத்துடன் கேட்டன.
“சிவப்பு, பச்சை, நீலம் மூன்றும் முதன்மை வண்ணங்கள். அதாவது அடிப்படை வண்ணங்கள். இவை வெவ்வேறு விகிதத்தில் சேரும்போது பிற வண்ணங்கள் உருவாகுகின்றன. இந்த மூன்றும் சரிவிகிதத்தில் சேரும்போது வெள்ளை நிறம் தோன்றும். அதனால் அனைத்து வண்ணங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட வெள்ளையை வண்ணங்களில் சிறந்தது எனச் சொல்லலாம் அல்லவா?” என ஆதித்யா கேட்டான்.
“வெள்ளை ஒரு நிறமில்லையே, அதை எப்படி வண்ணங்களில் சிறந்ததாக ஏற்றுக்கொள்ள முடியும்?” ஆதித்யாவின் தீர்ப்பை ஏற்க மறுத்து முரண்டுபிடித்தன பிற நிறங்கள்.
ஆதித்யா வேறு வழியின்றி அம்மாவை துணைக்கு அழைத்தான். அவரும் ஆதித்யாவின் தீர்ப்பை ஆமோதித்தார். ஆனால் அதை வேறு விதமாகச் சொன்னார்.
“மனுஷங்க ஒவ்வொரு நிறத்தையும் ஒவ்வொரு விஷயத்தோடு தொடர்பு படுத்திப் பாக்குறாங்க. பச்சை நிறத்தை வளத்தின் அடை யாளமாப் பாக்குறாங்க. மஞ்சள் மாட்சிமையின் அடையாளம். கறுப்புன்னா துக்கம். சிவப்பு போராட்டத்தின் அடையாளம். மனுஷங்களுக்குள்ள இருக்குறவன் இல்லாதவன்கிற ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லாம வாழணும்.
அதுக்கு சமாதானம் (அமைதி) அவசியம். வெள்ளை நிறம் சமாதானத்தின் அடையாளமாப் பார்க்கப்படுது. அதனால் சமாதானம் (வெள்ளை நிறம்) எங்கிருக்கிறதோ அங்கேதான் மாட்சிமை (மஞ்சள் நிறம்) தங்க முடியும். சமாதானம் (வெள்ளை நிறம்) எங்கிருக்கிறதோ அங்கேதான் மனத்திற்கு இதமான (நீல நிறம்) விஷயங்களும் நடக்க முடியும். அநீதிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் (சிவப்பு நிறம்) நோக்கமும் அமைதியை நிலைநாட்டுவது தானே.
அதனால் சமாதானம், அமைதி, தூய்மை இவற்றின் அடையாளமாக விளங்கும் வெள்ளை நிறமே வண்ணங் களில் சிறந்ததாக இருக்க முடியும்” என்றார் அவர். இப்போது பிற வண்ணங்களும் ஆதித்யாவின் தீர்ப்பை மௌனமாக ஏற்றுக்கொண்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT