Published : 04 Jan 2017 10:42 AM
Last Updated : 04 Jan 2017 10:42 AM

குழந்தைகளுக்கான குறும்படம்: எதிரியை நண்பனாக்கும் லொள்...லொள்...!

சில வீடுகளில் வெவ்வேறு செல்லப் பிராணிகள் வளர்ப்பதுண்டு. அப்படி ஒன்றாக இருக்கும் வெவ்வேறு செல்லப் பிராணிகளின் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்? நிச்சயமாக அவற்றின் முதல் சந்திப்பு நன்றாக இருக்காது. சில நாட்கள் ஒன்றையொன்று முறைத்துக்கொள்ளும். சண்டை போட்டுக்கொள்ளும் தோரணையில் திரியும். ஆனால், போகப்போக நண்பர்களாக மாறிவிடும். அப்படித் தன் வீட்டுக்கு வந்து, கோபம் மூட்டும் ஒரு விருந்தாளியை, தன் நண்பனாக்க முயற்சிக்கும் ஒரு நாய்க் குட்டியின் கதைதான் ‘டஸ்டின்’ (Dustin). இதில் வரும் விருந்தாளி பிராணி அல்ல; சுத்தம் செய்யும் இயந்திரம் என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு.

ஒரு வீட்டில் நாய்க் குட்டி ஒன்றைச் செல்லமாக வளர்க்கிறார்கள். அந்த நாய்க் குட்டிக்கு என்னதான் பாத்திரம் நிறையச் சாப்பாடு வைத்தாலும், வீட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் உணவுகளைத் தேடிச் சாப்பிடும். ஒரு நாள் அந்த வீட்டின் முதலாளி அம்மாவுக்குச் சுத்தம் செய்யும் இயந்திரம் பரிசாகக் கிடைக்கிறது. கீழே சிதறிக் கிடக்கும் உணவுகளைத் தானாக உரியும் இயந்திரம் அது. அதை வேடிக்கையாகப் பார்க்கிறது நாய்க் குட்டி.

ஒரு நாள் யாருமில்லாத நேரத்தில், அந்த இயந்திரத்தின் மீது இடி விழுகிறது. அதை நாய்க் குட்டி மட்டும் பார்க்கிறது. இடி விழுந்ததால் அந்த இயந்திரத்துக்குத் திடீரென உயிரும் வந்துவிடுகிறது. இதன் பிறகு இரண்டுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. சிதறிய உணவுகளை யார் முதலில் எடுப்பது என்று இரண்டுக்கும் எப்போதும் ஒரே போட்டிதான்.

ஆனால், அனைத்துப் போட்டிகளிலும் இயந்திரம்தான் ஜெயிக்கும். இதனால் நாய்க் குட்டிக்கு இயந்திரத்தின் மீது கோபம். ஆனாலும், இயந்திரத்திடம் போட்டி போடுவதை நாய்க் குட்டி விடவில்லை. கொஞ்சம் நாளில் நாய்க் குட்டிக்கு இயந்திரத்தைப் பிடித்துப்போகிறது. அதுவரை சிதறிய உணவுகளைத் தேடிச் சாப்பிடுவதைப் பொழுதுபோக்காக வைத்திருந்த அந்த நாய்க் குட்டி, இப்போது அந்த இயந்திரத்திடம் போட்டி போடுவதைப் பொழுதுபோக்காக மாற்றிகொண்டது.

ஒரு கட்டத்தில் திடீரென அந்த இயந்திரத்தில் மின் சக்தி (Charge) குறைந்துவிடுகிறது. அசையாமல் கிடக்கும் இயந்திரத்தைப் பார்த்த நாய்க் குட்டி, அதை எழுப்ப முயற்சிக்கிறது. அது அசையாமலேயே இருப்பதால், அது செத்துவிட்டதோ என வருந்துகிறது. இருந்தாலும் இயந்திரத்தைக் காப்பாற்ற நாய்க் குட்டி என்ன செய்தது என்று போகிறது ‘டஸ்டின்’ குறும்படத்தின் கதை.

வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டால்தான் நல்ல நட்பு கிடைக்கும். இந்தக் கருத்தைத்தான் இந்தக் குறும்படத்தில் அனிமேஷன் காட்சிகளைக் கொண்டு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.