Published : 01 Mar 2017 11:54 AM
Last Updated : 01 Mar 2017 11:54 AM
வெயில் காலம் தொடங்கிவிட்டது. பிப்ரவரி வரை ஜில்லென்று வீசிய காற்று, இனி அனல் காற்றாக மாறிவிடும். குழாயிலிருந்து வரும் தண்ணீர் பகல் நேரங்களில் சூடாகவே இருக்கும். கோடைக் காலம் முழுவதும் இப்படிச் சூடு பறந்தாலும், மண் பானைத் தண்ணீர் மட்டும் எப்போதுமே ஜில்லென்று இருப்பது எப்படி?
மண்பானைக்கென ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கோடையில் வெயில் அதிகமாக இருக்கும்போது மண் பானைக்குள் உள்ள, தண்ணீர் அதிக அளவில் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் குறைவாக இருக்கும்போது மண்பானையில் உள்ள தண்ணீரும் குறைந்த அளவே குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
மண்பானையில் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். மண்பானைகளில் ஏராளமான நுண்துளைகள் இருக்கும். தண்ணீர் உள்ள மண்பானையிலிருந்து இந்த நுண் துளைகள் வழியாக நீர்த்திவலைகள் வியர்த்ததுபோலக் கசிவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
பானையிலிருந்து இப்படி வெளியே வரும் தண்ணீர் தொடர்ந்து ஆவியாகிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாகப் பானையின் வெப்பமும், பானைத் தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாகும். ஆவியாதல் மூலம் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் உள்ள தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக மாறிவிடுகிறது.
அப்படியானால் பனிக் காலத்தில் பானைத் தண்ணீர் எப்படி இருக்கும்? பனிக்காலத்தில் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் இருக்கும். காற்று எப்போதும் ஜில்லென்று வீசும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பனிக் காலத்தில் நீர் ஆவியாவது குறைந்துவிடும். அதனால் வெயில் காலத்தில் இருப்பது போல அல்லாமல் பனிக்காலத்தில் பானைத் தண்ணீர் குறைந்த அளவே குளிர்ச்சி அடையும்.
பானைத் தண்ணீர் அறிவியல் இதுதான்!
- மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT