Published : 25 Sep 2013 01:33 PM
Last Updated : 25 Sep 2013 01:33 PM
ஒரு நாள் காலையில் "ஆம்ஸ்டிராங் நிலாவுக்குப் போயிருக்கார்னு நான் படிச்சேன். நான் நிலாவுக்குப் போக முடியுமா?" என்று சுட்டிப் பையன் சிக்கு என்னிடம் கேட்டான். "உடனே போக முடியாது. ஆனா, உன்னை வேறொரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்," என்று சொன்னேன்.
அது சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் எதிரே உள்ள பிர்லா கோளரங்கம். தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் எனப்படும் இந்த மையத்தை, பிர்லா கோளரங்கம் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும்.
உள்ளே நுழைந்தவுடன் பயன்பாட்டில் இல்லாத போர்விமானம், கூகூவென்ற சப்தத்துடன் புகையைக் கக்கிக்கொண்டு போகும் பழைய கறுப்பு ரயில் எஞ்சின், சிறீஹரிகோட்டாவில் விடுவாங்களே ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாடல் போன்ற நிஜமான மாடல்களை வைத்திருந்தார்கள். சிக்குவுக்கு ஏரோபிளேன், டிரெய்ன், ராக்கெட் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அந்த வாகனங்களைத் தொட்டுப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டான்.
அந்த இடம் சிக்குவுக்குப் பிடித்துவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து கோளரங்கத்தில் காட்சி தொடங்கிவிடும் என்று அங்கிருந்த செக்யூரிட்டி மாமா சொன்னார். இப்போது அங்கே ஓடிக் கொண்டிருக்கும் படம் "கோள்கள் - ஓய்வின்றிச் சுற்றும் உலகங்கள்". ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறையும், இங்கு திரையிடப்படும் படம் மாற்றப்படும் என்றும் அவர் சொன்னார்.
கொஞ்ச நேரம் கழித்து கோளரங்கத்துக்குள் எங்களை அனுமதித்தார்கள். உள்ளே சினிமா தியேட்டர் போல செவ்வகமான திரை யில்லை. பிறகு எப்படி படம் காட்டு வார்கள் என்ற சந்தேகம் சிக்குவுக்கு வந்தது. "இல்லை, மேலே தெரியுது இல்லையா அரைவட்டமான திரை, அதிலேதான் சினிமா ஓடும்."
"அதெப் படி ஓடும்," என்று சிக்கு கேட்டான். "அதோ தெரிகிறதே ஜி.எம். 2ங்கிற சிறப்பு புரொஜெக்டர், அது அதிநவீன வசதிகளையும் சிறப்பம்சங்களையும் கொண்டது, அது மூலமாதான் படம் காட்டப்படும். இந்த புரொஜெக்டர் மேலும் கீழும் மட்டுமில்லாம, எல்லா திசைகளிலும் நகரக் கூடியது. இரவு, பகல், நட்சத்திரங்கள் அனைத்தையும், அவை இருக்கும் அமைப்பிலேயே காட்டுமாம்.
அது மட்டுமில்லாம ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுக்கிறதுக்காக தனி புரொஜெக்ட்ரும் இருக்குண்ணு பேப்பர்ல படிச்சிருக்கேன். கொஞ்ச நேரம் பொறுத்திரு," என்றேன்.
படம் தொடங்கியவுடன் விண்வெளி உலகமே தரை இறங்கி வந்தது போலிருந்தது... கண்ணைச் சிமிட்டும் நட்சத்திரங்கள், அதிவேகமாகச் சுற்றி வரும் வால்நட்சத்திரங்கள், சூரியனைச் சுற்றிச் சுழலும் கோள்கள், வளிமண்டலத்தில் எரிந்து விழும் சிறு நட்சத்திரங்கள், நிலாக்கள்...
அற்புதமான அந்த வான்காட்சி நிறைவு பெற்றது. நிச்சயமாக, நம் எல்லோராலும் விண்வெளிக்குச் சென்று பார்க்க முடியாது. ஆனால், பிரபஞ்சத்துக்குச் சென்று விண்வெ ளியைச் சுற்றிப் பார்த்த ஆச்சரியமான அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது.
வெளியே வந்தால், சூரியக் குடும்பத்தின் பல்வேறு அம்சங்கள், வானியல் நிகழ்வுகள், விண்வெளிப் பய ணங்களின் படங்கள், விஞ்ஞானிகளின் சிலைகள், விளக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கே சிக்குவுக்கு ரொம்பப் பிடித்தது வெவ்வேறு கோள்களில் நமது எடை என்ன, உலகின் வெவ்வேறு நாடுகளில் தற்போதைய நேரம் என்ன, அரிய கோள்கள், பால்வெளி மண்டலங்க ளின் அழகான படங்கள் போன்றவை.
அரங்கத்துக்கு வெளியே எங்களுக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. எதிரே இருந்த மற்றொரு பகுதியில் "3டி படம்" போடுவதாகச் சொன்னார்கள். சிக்கு சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டான்.
3டி படத்தைப் பார்ப்பதற்கான ஸ்பெஷல் கண்ணாடியை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். உலகப் புகழ் பெற்ற கதையான ஆலிஸின் அற்புத உலகம் என்ற மாயாஜாலக் கதை படிப்பதற்கே ஜாலியாக இருக்கும். அதுவே 3டி படமாக ஓடினால், சந்தேகமில்லாமல் சூப்பராக இருந்தது.
அது முடிந்த பின்னாடி மற்ற அரங்கங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். மாடியில் இருந்த விநோதக் கண்ணாடிகள் அரங்கத்துக்குப் போனோம். ஒவ்வொரு கண்ணாடிக்கு முன்னாடி நிற்கும்போதும் நாமே பறக்கிற மாதிரி, நமக்கு எதிரா நாமளே சாப்பிட உட்கார்ந்த மாதிரி, எதிரே இருக்கும் பாதை தெரியாத அளவுக்கு மாயக் கண்ணாடிப்பாதை என்று தோற்றமயக்கங்களை உருவாக்கும் பல்வேறு கண்ணாடிகள் அங்கே உரு வாக்கப்பட்டிருந்தன. அது விநோத மாகவும், ஜாலியாவும் இருந்தது.
இந்த விநோதக் கண்ணாடி அரங்கம் மாதிரி பாடப்புத்தகத்தில் படிக்கும் பல்வேறு அறிவியல் கொள்கைகளையும், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட முக்கிய திருப்புமுனைகளையும் மாடலாகவும், படங்களுடன் விளக்கமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த மாடல்களும் கருவிகளும் அறிவியல் கொள்கைகளை எளிதாக செய்முறையில் விளக்குகின்றன. தீவிர அறிவியல் ஆர்வம் இல்லாதவர்களையும் ஆச்சரி யப்படுத்தும் வகையில் சில காட்சிப் பொருள்களாவது இருக்கின்றன.
வெளியே நாங்கள் பார்த்த டிரெய்ன், ஏரோபிளேன், பஸ் போன்றவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பகுதிபகுதியாகப் பிரித்து விளக்கும் போக்குவரத்து அரங்கம், தொலைக்காட்சி நிலையம் எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கும் அரங்கம், சர்வதேச பொம்மைகள், பல்வேறு விலங்குகளின் பதனம் செய்யப்பட்ட இதயங்களைக் கொண்ட இதய அரங்கு, கண்ணைப் பற்றித் விரிவாக விளக்கும் தனிஅரங்கம் எனப் பல்வேறு கருப்பொருள்களில் காட்சி அரங்குகள் அமைந்திருக்கின்றன. நாங்கள் போயிருந்தபோது, பாதி அரங்குகளில் பராமரிப்பு வேலை நடந்துகொண்டிருந்ததால், முழுதாகப் பார்க்க முடியவில்லை.
பராமரிப்பு வேலை நடக்கும் அரங்குகளை விட்டுவிட்டுப் பார்த்தால்கூட, சுவாரசியமான நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. சில கருவிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றாலும், கோளரங்கத்தில் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
சாயங்காலம் ஆகிவிட்டதால், அதற்கு மேல் எங்களால் மற்ற அரங்குகளைப் பார்க்க முடியலை. டெலஸ்கோப்பில் நிலாவைப் பார்க்க சிக்கு ரொம்பவே ஆசைப்பட்டான். ஆனால், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் டெலஸ்கோப் மூலம் இரவில் வானத்தைப் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கும் என்று டிக்கெட் கவுன்ட்டரில் சொன்னார்கள்.
"நிச்சயம் அன்னைக்கு என்னய கூட்டிட்டு வரணும்," என்றான் சிக்கு. அடுத்த மாதம் அழைத்துப் போவதாக வாக்களித்திருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT