Last Updated : 22 Jan, 2014 12:00 AM

 

Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

யார் துரதிருஷ்டசாலி?

ரொம்ப நாளைக்கு முன்னாடி மேற்கு வங்கத்தில் கோபால் பந்த் என்ற விகடகவி இருந்தார். அவர் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி. ஆனால், அவரை எல்லோரும் கோபால் பந்த் என்றுதான் கூப்பிட்டனர். பந்த் என்றால் வங்க மொழியில் கோமாளி என்று அர்த்தம். கோபால்பந்தின் நகைச்சுவை, செயல்பாடுகள், எதிர்பாராத பதிலடி கருத்துகள் எல்லோரையும் சிரிக்க வைத்துவிடும், மேற்கு வங்க மகாராஜா கிருஷ்ணசந்திரா உட்பட. அதேநேரம் கோபால் பந்தை யாரும் ஏமாற்றிவிட முடியாது.

அந்தக் காலத்தில் பல்வேறு மூடநம்பிக் கைகள் பரவலாக இருந்தன. மகாராஜாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பலான குடிமக்களைப் போலவே, அவரும் யார் முகத்தில் விழிக்கிறோமோ, அந்த நபரே அன்று நடக்கும் நல்லது கெட்டதுகளுக்குக் காரணம் என்று உறுதியாக நம்பினார். ஒரு நாள் நல்லபடியாக அமைந்துவிட்டால், முகத்தில் விழித்த நபர் அதிர்ஷ்டமானவராகக் கருதப்பட்டு, அடுத்த நாள் காலை அவருக்கு பொற்கிழி வழங்கப்படும்.

அதேநேரம், ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அதற்குக் காரணமாக இருந்த நபர் துரதிருஷ்டமானவராகக் கருதப்பட்டு, அரசுக்கு எதிரானவராகவும் நம்பப்படுவார். அந்த நபருக்கு அடுத்த நாள் தண்டனை நிச்சயம். அசம்பாவிதத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை மாறுபடும்.

மகாராஜாவின் குணத்தை நன்கு அறிந்த குடிமக்கள், காலையில் அவர் முகத்தில் விழிக்க எப்படி விரும்புவார்கள்? காலையில் ராஜாவுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்து பரிசு வாங்கலாம்தான். ஆனால், அதேநேரம் ஏதாவது துரதிருஷ்டம் நடந்துவிட்டால்... கசையடி கிடைக்குமே. எதுக்குத் தேவையில்லாமல் ராஜாவின் முன் போவானேன் என்று ஓடி ஒளிந்துவிடுவார்கள்.

ஆனால், கோபால் பந்தோ மகா ராஜாவைப் பார்த்து பயப்படும் ஆள் இல்லை. தண்டனையைப் பற்றியும் அவருக்குக் கவலையில்லை. அப்படி ஏதாவது நடந்தால், அதைச் சமாளிக்க அவர் தயாராகவே இருந்தார்.

ஒரு சில நாள்களில் அரண்மனையில் யாரையும் எழுப்பாமல், ராஜா வெளியே சென்று நடக்கத் தொடங்கிவிடுவார். அப்போது அவர் செல்லும் பகுதியில் யாராவது எதிர்பட்டால் தொலைந்தார்கள்.

ஒரு நாள் காலை மகாராஜா நதிக்கரை யோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அதிகாலை நேரம் என்பதால், கரையில் யாரும் இல்லை.

வழக்கமாகப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கும் கோபாலுக்கு, அன்றைக்கு பசி சுண்டி இழுத்ததால் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார். அன்றைக்கு மீன் சாப்பிட ஆசையாக இருந்ததால், நதிக்கரைக்குச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அன்றைக்குப் பார்த்து, ஒரு மீனவனைக்கூட கரையில் காணவில்லை. துரதிருஷ்டவசமாக நடந்து வந்துகொண்டிருந்த கோபாலை அரசர் பார்த்துவிட்டார்.

"வணக்கம் கோபால். வழக்கமாக நீ சீக்கிரம் எழுந்திருந்து நான் பார்த்தது இல்லையே" என்றார் ராஜா.

"உண்மைதான் மகாராஜா. ஆனால் இன்றைக்கு என் விதியை பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற தீவிர ஆசை உருவானது. அதற்காகத்தான் நதிக்கரைக்கு வந்தேன்."

"எனக்குப் புரியவில்லை கோபால். எப்படி உன் விதியை இங்கே பரிசோதிக்க முடியும்?"

"வேறு யாரும் உங்களைப் பார்ப்பதற்கு முன்னாடியே, நான் உங்களைப் பார்த்துவிடு வேன் என்று எனக்குத் தெரியும்" என்று ரொம்பச் சாதாரணமாகச் சொன்னார் கோபால்.

"அது எப்படி உனக்கு நிச்சயமாகத் தெரியும்" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மகாராஜா.

"அப்படித் தோன்றியது, திடீரென மின்னல் வெட்டுவதைப் போல. இந்த நாள் எனக்கு நிச்சயம் இனிய நாளாகவே இருக்கும். உங்களுடைய அதிர்ஷ்டகரமான முகத்தை இன்றைக்கு முதலில் பார்த்திருக்கிறேனே"

"நிச்சயமாக கோபால்" என்று மகாராஜா உற்சாகமாகக் கூறினார்.

கொஞ்ச நேரம் கோபாலுடன் நடந்த பிறகு ராஜா கூறினார், "அதேநேரம் கோபால், இன்றைக்கு காலையில் நான் பார்த்த முதல் ஆள் நீதான் என்பதை மறக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். பார்ப்போம் இன்றைய நாள் எப்படிப் போகிறது என்று. அப்போதுதானே தெரியும், உன் முகம் அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்று. அதற் கேற்ப உனக்கு பரிசோ, தண்டனையோ கிடைக்கும்" என்றார் ராஜா.

"நிச்சயமாக மகாராஜா. அதேநேரம் நம் இருவரில் யார் ரொம்ப மங்களகரமானவர் என்பதும் தெரிந்துவிடும்" என்றார் கோபால் பவ்யமாக.

"இதற்கு என்ன அர்த்தம் கோபால்? இது ரொம்பத் திமிர்த்தனமாக இருக்கிறதே" என்றார் ராஜா சிடுசிடுப்பாக.

"ராஜா, நான் வெறும் விகடகவி மட்டுமே. விகடகவியின் வார்த்தைகளை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது" என சிரம் தாழ்ந்து கூறினார் கோபால்.

அந்த நேரத்தில் அவர்கள் அரண் மனையை அடைந்துவிட்டிருந்தனர். தனது அறைக்கு வருமாறு ராஜா கோபாலை அழைத்தார். கோபாலின் பேச்சு எல்லோரிடமும் சிரிப்பை வரவழைக்கும். அவர் எப்போதுமே எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். ராஜா உள்ளே சென்று உட்கார்ந்ததும், அரசவை முடிதிருத்துநர் வந்தார்.

"உங்கள் முகத்துக்குச் சவரம் செய்ய வேண்டும், மகாராஜா" என்று கூறிய முடிதிருத்துநர் முகத்தில் நிம்மதி, முதல் ஆளாக அன்றைக்கு அவர் ராஜாவை பார்க்க வில்லையே.

"சரி, செய்" என்று கூறிவிட்டு, "கோபால் நேற்றிரவு நீ சென்ற கல்யாணத்தில் என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லலாமே"

கோபால் தனது வழக்கமான மிகைப்படுத்தப்பட்ட பாணியில், எல்லாவற்றையும் நகைச்சுவை ததும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். இதைக் கேட்க ஆரம்பித்த மகாராஜா சிரிப்பில் ஆழ்ந்து போனார். முடிதிருத்துபவரும் சிரிக்க ஆரம்பித்தார். எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க, மகாராஜா தலையை ஆட்டிச் சிரித்தார். அப்போது சவரம் செய்பவரின் கை ஆடியது. மகாராஜாவின் கன்னத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. சவரம் செய்பவருக்கு கிலி பிடித்தது. நிச்சயமாக அவருக்கு ராஜா மரணதண்டனையோ, ஆயுள்தண்டனையோ விதிக்கலாம்.

எல்லோரும் பரபரப்பானார்கள். கோபால் மட்டுமே ஆசுவாசமாக இருந்தார். தொடர்ந்து புன்னகை சிந்திக்கொண்டிருந்தார். "சிரிக்காதே கோபால்" முகம் கோபத்தில் கொப்பளிக்க ராஜா கூறினார். "இன்றைக்குக் காலையில் உன்னைத்தான் முதலில் பார்த் தேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கும்."

"ஆமாம். அதேநேரம் நான் காலையில் சந்தித்த முதல் மனிதரும் நீங்கள்தான் மகாராஜா" என்றார் கோபால்.

"அதற்கு என்ன இப்போ" என்றார் ராஜா எரிச்சலுடன். "நான் என்னுடைய நாளைப் பற்றிச் சொல்கிறேன். நான் சந்தித்த நபர் களிலேயே மிகவும் துரதிருஷ்டம் பிடித்த ஆள் நீதான். உன் முகத்தை இன்று காலை முதன்முதலில் பார்த்தேன். இப்போ எனக்கு ரத்த காயம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்"

"தண்டனையா மகாராஜா" என்று புதிதாகத் திகைப்படைந்தது போல அலறினார் கோபால்.

"நிச்சயமாக. உனக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும். ஒரு ராஜா ரத்த காயம் ஏற்படக் காரணமாக இருந்த துரதிருஷ்டமான நபர் இறந்துபோகத்தான் வேண்டும்"

"அது நியாயமில்லை, மகாராஜா" என்று கையை ஆட்டிக் கூறினார் கோபால்.

"ஏன்" என்றார் ராஜா சிடுசிடுப்புடன்.

"ஏனென்றால், நீங்கள்தான் என்னைவிட மிகவும் துரதிருஷ்டம் பிடித்த நபர்"

"உனக்கு எவ்வளவு தைரியம் இப்படிச் சொல்ல? ராஜாவிடமே இப்படிப் பேசுவதற்கு உனக்கு இரண்டு மரண தண்டனை விதிக்கலாம்" என்றார் மகாராஜா.

"இவ்வளவு தைரியமாக நான் இதைச் சொல்வதற்குக் காரணம், அதுதானே உண்மை" என்றார் கோபால் விடாப்பிடியாய்.

"எப்படி?" என்று தன் கோபத்தை மீறி, தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கூச்சலிட்டார் ராஜா.

"நான் அதிர்ஷ்டமில்லாதவன்தான். என்னைக் காலையில் முதலில் பார்த்ததால், உங்களுக்கு சிறிய ரத்த காயம்தான் ஏற் பட்டது. ஆனால், நான் உங்களை காலை யில் பார்த்ததால், எனக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது. இதில் யார் மோசமான துரதிருஷ்டம் பிடித்தவர்?"

மகாராஜா ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார். பிறகு அவர் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தார். "நீ சொல்வது ரொம்பச் சரி கோபால். மரணதண்டனைக்கு முன்னால் ரத்த காயம் என்பது ரொம்பச் சாதாரண மானதுதான். நான்தான் மிகவும் துரதிருஷ்டம் பிடித்தவனாக இருக்க வேண்டும். இப்போது எனக்குப் புரிகிறது, இது போன்ற மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை என்று. அதை சரியாகச் சுட்டிக்காட்டியதற்கு ரொம்ப நன்றி" என்றார் ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x