Published : 03 Aug 2016 11:53 AM
Last Updated : 03 Aug 2016 11:53 AM
இஸ்ரேல் ஓர் அழகான நாடு. செங்கடலின் வட கரையில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடு இது. இந்த நாட்டைச் சுற்றி லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் உள்ளன.
டெல் அவீவ் இந்த நாட்டின் முக்கிய வணிக நகரம். தலைநகராகிய ஜெருசலத்தை இஸ்ரேல் முழு உரிமை கோரினாலும், சர்ச்சைக்குரிய பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. 1948 மே 14 அன்று விடுதலை பெற்றுத் தனி நாடாக அறிவிக்கப்பட்டது இஸ்ரேல். தனி நாடாக 1949-ம் ஆண்டு மே 11 அன்று அங்கீகரிக்கப் பட்டது. உலகில் யூதர்களுக்கான தனி நாடாக இது விளங்குகிறது.
‘சியான்' என்றால்..?
கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிவருகிறது இந்த ‘சியான்' (Zion) தேசம். அதென்ன சியான்? ஜெருசலேம் குன்றின் மீது ‘டேவிட்' அரண்மனையை நிர்மாணித்த இடமாகும். இது கடவுளின் நகரம் என்று போற்றப்படுகிறது. தற்போது, இந்த ‘சியான்' குன்று, சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கிறது.
உக்ரைன் நாட்டில், சொலோசிவ் என்ற ஓர் இடம் உள்ளது. இதைக் கவிஞர்களின் நகரம் என்று சொல்வார்கள். அங்கு பிறந்த யூதக் கவிஞர் நஃப்தலி ஹெர்ஸ் இம்பர் இயற்றிய ‘ஹிப்ரூ' மொழிப் பாடல்தான் இன்றைய இஸ்ரேல் நாட்டின் தேசிய கீதம்.
இஸ்ரேல் நாட்டின் தேசிய கொடி
பத்து வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.
உமர் கயாம் கவிதைகளை ‘ஹிப்ரூ'வில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இவர் ‘நம்பிக்கை' என்ற பாடலை 1878-ம் ஆண்டு எழுதினார். 1886-ம் ஆண்டு ‘பர்க்காய்' (காலை நட்சத்திரம்) என்ற தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றது.
பிறகு சில ஆண்டுகளில் இது ‘சியான்' இயக்கப் பாடலாகப் பிரபலமானது. சியான் காங்கிரஸ், இப்பாடலைத் தங்களுடையதாக்கிக்கொண்டது. 1948-ல் அறிவிக்கப்படாமலேயே இந்தப் பாடல் தேசிய கீதமாகப் பாடப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளைக் கடந்த பிறகு 2004-ம் ஆண்டில்தான் நம்பிக்கைப் பாடல் இஸ்ரேலின் தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்பாடல் 9 பத்திகளைக் கொண்டது. ஆனால், 2 பத்திகள் மட்டுமே கீதத்தில் இடம் பெற்றுள்ளன. இப்பாடலுக்கு இசையமைத்தவர் சாமுவேல் கோஹன். ஆனால், ருமேனியா நாட்டில் கேட்ட பாடலையொட்டி இதற்கு இசை அமைத்ததாக கோஹன் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தேசியகீதம் இப்படி ஒலிக்கும்:
கோல் ஓட் பாலவேவ் பெனீமா
நஃபே..ஷ் யஹா...தி ஹாம்லியா
உல்ஃபா..ட்டல் மீஸ்ரா... காடிமா
ஆயின் லெட்..ஸீயான் ட்ஸோஃபியா
ஓட் லா.. அவ் தா டிக்வ தே...னு
ஹா..த்திக்வா பாட் ஷெ..னோட் அல்ப்பயிம்
லிஹ்யோட் ஏம்.. சோஃப்ஸி பார்ட்ஸனு...
ஏ..ரேட் ஸீயான் வே.. ரூ...ஷ்லி..யேம்.
இப்பாடலின் உத்தேசத் தமிழாக்கம்:
எதுவரை இதயத்துக்கு உள்ளே
ஒரு யூத ஆத்மா ஏங்குகிறதோ (அதுவரை)
கிழக்கின் முடிவுகளை நோக்கி
‘சியான்' மீது விழி குத்திட்டு நோக்கும்.
நாம் இன்னமும், நம்பிக்கை இழக்கவில்லை;
(இது) ஈராயிரம் ஆண்டு நம்பிக்கை.
சுதந்திரமான தேசமாகும் நமது பூமி -
‘சியான்' மற்றும் ஜெருசலத்தின் பூமி!
(தேசிய கீதம் ஒலிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT