Last Updated : 13 Jul, 2016 12:08 PM

 

Published : 13 Jul 2016 12:08 PM
Last Updated : 13 Jul 2016 12:08 PM

வாண்டு பாண்டு: உலகின் குட்டி யோகா குரு!

வாண்டு: ஹாய் பாண்டு, என்னப்பா நம்ம ராமுவை ரெண்டு நாளா ஸ்கூல் பக்கமே பார்க்க முடியலை. என்ன ஆச்சு?

பாண்டு: அவன்தான் ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலையே..?

வாண்டு: அதான் ஏன்னு கேட்டேன்?

பாண்டு: ரெண்டு நாளைக்கு முன்னாடி ஸ்கூலுக்கு வர வழியில ஒரு பள்ளத்துல சைக்கிளோட விழுந்து கால்ல அடிபட்டிடுச்சாம். அதான் வரலை.

வாண்டு: பள்ளம் இருக்குறதுகூட தெரியாமலா சைக்கிள் ஓட்டிட்டு வந்தான்?

பாண்டு: அது வழக்கமா வர்ற ரோடு. திடீர்னு பள்ளம் வெட்டி வைச்சருக்காங்க. அதைக் கவனிக்காம வேகமா வந்து விழுந்துட்டான். யாராவது பள்ளம் இருக்குன்னு சொல்லியிருந்தா, அறிவிப்பு வச்சிருந்தா விழாம இருந்திருப்பான்.

வாண்டு: இதையெல்லாம் யாராவது சொல்லிக்கிட்டா இருப்பாங்க. நமக்குதான் ரோட்டு மேலே கவனம் இருக்கணும். ஆனா, அமெரிக்காவுல இப்படி பள்ளத்துல விழாம இருக்க ஸ்கூல் பையன் ஒருத்தன் வழி கண்டுபிடிச்சுருக்கான்.

பாண்டு: ஓ... இதுக்கும் வழிகண்டுபிடிச்சாச்சா? என்ன வழி?

வாண்டு: இப்போல்லாம் ஆப்ஸ் (செயலி) மூலமா நிறைய உபயோகமான விஷயங்கள் வந்துடுச்சல்ல. இந்த பையனும் ஆப்ஸ் மூலமாதான் வழி கண்டுபிடிச்சுருக்கான்.

பாண்டு: வழி கண்டுபிடிச்சுருக் கான்னு சொல்ற. அது என்னன்னு சொல்லலையே. அவன் யாரு? அதை எப்படிக் கண்டுபிடிச்சான்னு சொல்லு.

வாண்டு: அந்தப் பையனோட பேரு சோக்வி செலஸ்ஸி. 13 வயசு ஆகுது. அமெரிக்காவுல மிஸிஸிப்பியில இருக்கான். ஒரு நாள் அந்தப் பையன் அவுங்க அம்மாவோட கார்ல ஸ்கூலுக்குப் போய்ட்டு இருந்தானாம். ஒரு தெருவுல ஒரு பெரிய பள்ளம் இருந்திருக்கு. அது தெரியாமல் பள்ளத்துல காரை விட்டு, அது ரிப்பேர் ஆயிடுச்சாம். அதனால அன்னைக்கு அவனால கூலுக்குப் போக முடியலை. மிஸிஸிப்பி நகரில் தெருக்கள்ல நிறைய பள்ளங்கள் இருக்கும் போல.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, பள்ளம் கண்டுபிடிக்கும் ஆப்ஸை உருவாக்க அந்தப் பையன் முயற்சி செஞ்சிருக்கான். அவனோட நண்பர்களும் உதவ, இப்போ அந்த ஆப்ஸை கண்டுபிடிச்சுட்டான். வண்டியில போறப்ப பள்ளம் வந்துச்சுன்னா, பள்ளம் வரதுக்கு முன்னாடி சிவப்பு வண்ணத்துல ஒலி எழுப்பி எச்சரிக்கும் வகையில இந்த ஆப்ஸை அவன் உருவாக்கியிருக்கான். இந்த ஆப்ஸை வெற்றிகரமா சோதிச்சும் பார்த்தாச்சாம். இப்போ 311 வண்டிகள்ல இந்த ஆப்ஸைப் பயன்படுத்தி வராங்க. ஸ்கூல் பஸ்களையும் இதைப் பயன்படுத்தப் போறாங்களாம்.

பாண்டு: ரொம்ப நல்ல கண்டுபிடிப்புதான். எப்போ, எங்கே பள்ளம் வெட்டுவாங்கன்னு நம்ம ஊர்ல தெரியாது. அதனால, இந்த ஆப்ஸ் நம்ம ஊருக்கு ரொம்ப தேவை.

வாண்டு: சீக்கிரம் நம்ம ஊருக்கும் இந்த ஆப்ஸ் வராமலா போகும். அப்புறம், நீ தினமும் உன் தம்பிக்கு யோகா கத்துக்கொடுக்குறன்னு கேள்விப்பட்டேனே. உண்மையாவா?

பாண்டு: எங்கம்மா சொன்னாங்களாக்கும்? எங்க மாமா ஒரு யோகா மாஸ்டர். அவர்தான் சின்ன சின்ன யோகாவெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுத்தாரு. அதை நான் செய்யுறப்ப என் தம்பிக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

வாண்டு: எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுக்கலாம்ல. அப்புறம் இன்னும் நல்லா கத்துக்கிட்டு ஸ்ருதி மாதிரி பெரியவங்களுக்கும் சொல்லிக்கொடுக்கலாம்ல. பாண்டு: அது யாருப்பா ஸ்ருதி?

வாண்டு: ஓ... உனக்கு ஸ்ருதியைத் தெரியாதா? உலகிலேயே ரொம்ப சின்ன வயசுல யோகா டீச்சர் ஆன பொண்ணுப்பா.

பாண்டு: சின்ன வயசுலேயே யோகா டீச்சரா?

வாண்டு: ஆமா பாண்டு. இந்தப் பொண்ணோட பேரு ஸ்ருதி பாண்டே. வட இந்தியாவுல உத்தரப் பிரதேசத்துல அலகாபாத்துல இருக்கா. இப்போ அவளுக்கு 11 வயசு ஆகுது. ஆனா, 5 வருஷத்துக்கு முன்னாடியே அவ யோகா டீச்சராயிட்டா.

பாண்டு: இவ்ளோ சின்ன வயசுல யோகா டீச்சரானது ஆச்சரியமாத்தான் இருக்கு.

வாண்டு: 4 வயசு இருக்குறப்பவே ஸ்ருதி யோகா கத்துக்க ஆரம்பிச்சிருக்கா. 6 மாசத்துக்குள்ளாகவே யோகா அத்துபடியாயிடுச்சு. பெரியவங்க செய்யுறதைவிட ரொம்ப கரெக்டா செய்ய ஆரம்பிச்சுட்டா. அதனால அவளை யோகா டீச்சராக்கிட்டாங்க. அப்போதிருந்தே பெரியவங்களுக்கு யோகா கத்துக்கொடுத்துட்டு வராப்பா. இப்பவும் தினமும் 30 பேருக்கு யோகா சொல்லிக்கொடுக்கிறாளாம்.

பாண்டு: அப்போ நானும் நல்லா யோகா கத்துக்கிட்டா ஸ்ருதி மாதிரி யோகா டீச்சராயிடாலம்னு சொல்லு.

வாண்டு: நிச்சயமா பாண்டு, அதுல என்ன சந்தேகம்? சரிப்பா, இப்போ வீட்டுக்குக் கிளம்புவோமா?

பாண்டு: ம்... கிளம்பலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x