Published : 28 Oct 2015 12:02 PM
Last Updated : 28 Oct 2015 12:02 PM
நாம் காசு சேர்க்க உண்டியலைப் பயன்படுத்துகிறோம் இல்லையா? வெளிநாடுகளில் குழந்தைகள் காசு சேர்க்க 'பிக்கி பேங்க்' என்றழைக்கப்படும் பன்றி வடிவ உண்டியலையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்களே, அது ஏன்? அதற்குக் காரணம் இருக்கிறது. அத்துடன் உலக சேமிப்பு நாள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் காசு சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட உண்டியல்கள் கிடைத்துள்ளன. இந்த உண்டியல்கள் களிமண்ணிலோ, மரத்திலோ செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலும் பானை வடிவம், ஜாடி வடிவத்தில் காசு போடுவதற்கான துளையுடன் அவை இருந்தன.
உண்டியல் துளையைத் தலைகீழாகக் கவிழ்த்து ஓரிரு காசுகளை எடுக்கலாம் என்றாலும், மொத்தக் காசையும் எடுக்க வேண்டுமென்றால், உண்டியலை உடைக்கவே வேண்டும். அதற்குப் பிறகு அந்த உண்டியலை தூக்கிபோட்டுவிட வேண்டியதுதான்.
மத்திய காலத்தில்தான் உண்டியல்களின் வடிவமும் களிமண்ணும் மாறின. அந்தக் காலத்தில் உண்டியல் செய்ய ஆரஞ்சு வண்ணக் களிமண் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் அதன் பெயர் 'Pygg' (பிக்). இந்தக் களிமண்ணில் செய்யப்பட்ட உண்டியல்கள் 17-ம் நூற்றாண்டில் மிகப் பிரபலம். அது 'Pygg Bank' எனப்பட்டது. காலப்போக்கில் அது மருவி 'Piggy Bank' என்றாகிவிட்டது. பெயர் மருவிய பிறகுதான் பன்றி வடிவ உண்டியல்கள் பிரபலமடைந்தன.
உலகின் பல பகுதிகளில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன. ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்டப் பரிசாகவும், புத்தாண்டுப் பரிசாகவும் கொடுக்கப்படுகின்றன.
இன்றைக்கு களிமண்ணைத் தவிர மற்ற பொருட்களிலும், பன்றியைத் தவிர்த்த மற்ற வடிவங்களிலும் உண்டியல்கள் செய்யப்படுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் உண்டியல் பெரும்பாலும் 'பிக்கி பேங்க்' என்றே அழைக்கப்படுகிறது.
ஜப்பானில் மனேகி நெகோ எனப்படும் காசுப் பூனை அதிர்ஷ்டத்துக்காகவும், நல்ல எதிர்காலத்துக்காகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகை உண்டியலே.
ஐரோப்பாவில் பீங்கானிலும், அழகான பொம்மைகளைப் போலவும் செய்யப்படும் உண்டியல்கள் காசு சேர்ப்பதற்காக மட்டுமல்லாமல் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
19-ம் நூற்றாண்டின் மத்தியில் உலோக உண்டியல்கள் அறிமுகமாகின. 1920 - 30-களில் தகரத்தில் செய்யப்பட்ட உண்டியல்கள் வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தன. 1945-க்குப் பிறகு பிளாஸ்டிக் உண்டியல்கள் அறிமுகமாகின.
உலகப் போருக்கு முன்னதாக வாடிக்கையாளர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வங்கிகள் உண்டியல்களை வழங்கி வந்தன. தனியார் நிறுவனங்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இலவச உண்டியல்களை வழங்குவது பிறகு வழக்கமானது.
இன்றைக்கு பன்றி உண்டியல்கள் பிளாஸ்டிக்கில் கிடைத்தாலும், பீங்கானில் செய்யப்படுவதே வழக்கம். இந்த உண்டியல்கள் பழைய காலத்தைப் போல் இல்லாமல், அடியில் மூடியுடன் வருகின்றன. அதனால், உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை.
இன்றைக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கும் பல்வேறு உயிரினங்கள், பழங்கள், பொருட்கள் வடிவில் உண்டியல்கள் கிடைக்கின்றன. நம் ஊரில் பானை செய்பவர்களும் பொம்மை செய்பவர்களும் பல்வேறு வடிவங்களில் மண் உண்டியல்களை விற்பதைப் பார்த்திருக்கலாம்.
இந்தியாவில் ஏன் மாறியது?
இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் 1924 அக்டோபர் 31-ம் தேதி உலகின் 'முதல் சர்வதேச வங்கி சேமிப்பு மாநாடு' நடந்தது. அப்போது முதல் ‘உலக சேமிப்பு நாள்’ அனுசரிப்பது தொடங்கியது. அந்த மாநாட்டின் கடைசி நாளில் இத்தாலிய பேராசிரியர் ஃபிலிப்போ ராவிஸா 'சர்வதேச சேமிப்பு நாளை' அறிவித்தார். அதற்கு முன்னர் 'உலக சிக்கன நாள்' என்று அது அழைக்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் 1984-ம் ஆண்டு வரை அக்டோபர் 31-ம் தேதியே உலக சேமிப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1984-க்குப் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளும் அக்டோபர் 31-ம் தேதி வந்ததால், அக்டோபர் 30-ம் தேதி சேமிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT