Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM
மலர் என்றால் நறுமணம் வீசும் என்று தானே நினைக்கிறோம். ஆனால், ஒரு மலர் அதற்கு நேரெதிராக இருந்தால்? இருக்கின்றன, கேரியன் எனப்படும் தாவரத்தின் மலரில் இறைச்சி வாடை அல்லது பிண வாடை அடிக்கும். இதன் ஆங்கிலப் பெயர் carrion flower.
பூச்சிகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக மோசமான வாசத்தை வெளியிடும் தன்மைகொண்ட சில மலர்களில் இதுவும் ஒன்று. ரஃப்ளேசியா (Rafflesia), உலகின் மிகப் பெரிய மலர். ஆனால், இதன் வாசமோ அழுகும் இறைச்சியைப் போலிருக்கும். அதேபோல, டிராபிகல் லார்ட்ஸ் அண்டு லேடீஸ் மலர் அழுகும் மீன் வாசத்தை வெளியிடும்.
சில மலர்கள் இப்படி வித்தியாசமாகச் செயல்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பறவைகள், உயிரினங்களைப் போல தாவரங்களால் நகர முடியாது, இல்லையா. ஆனால், ஒரு தாவரத்தில் உள்ள மகரந்தம், மற்றொரு தாவரத்தில் உள்ள சூலுடன் சேர வேண்டும். அப்படிச் சேர்ந்தால்தான், விதை உண்டாகி, அந்தத் தாவரம் இனப்பெருக்கம் செய்ய முடியும்.
நகர முடியாத நிலையில் தாவரங்கள் என்ன செய்யும்? பெரும்பாலான தாவரங்கள் வண்ணங்களையும் நறுமணத்தையும் பரப்பி மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கின்றன.
உலகில் எல்லாமே ஒரே மாதிரி இருப்பதில்லையே. சில தாவரங்களும் வித்தியாசமாக இருக்கின்றன. அந்த வகையில் மேற்கண்ட தாவரங்கள் மோசமான வாசத்தைப் பரப்பி, பூச்சிகளை ஈர்க்கின்றன.
மோசமான வாசத்தைப் பின்தொடர்ந்து செல்லும் சில பூச்சிகள் ரஃப்ளேசியா போன்ற மலர்களில் உட்காரும்போது, அவற்றின் விளிம்பில் உள்ள வலுவான தூவிகள் மூடிக்கொண்டு விடுகின்றன. அந்தத் தூவி உதிரும்போது பூச்சி மீண்டும் பறக்க முடியும். ஆனால், அதற்குள் அந்தப் பூச்சியின் கால்கள், உடலில் மகரந்தம் ஒட்டியிருக்கும்.
எப்படியிருந்தாலும் அந்தப் பூச்சி மற்றொரு மலரில் அமரும். அப்போது மகரந்தம் மற்றொரு தாவரத்தின் சூலுடன் சேரும், விதை உருவாகும்.
இதுதான் நாற்றமடிக்கும் தாவரங்களின் இனப்பெருக்க ரகசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT