Published : 01 Mar 2017 12:00 PM
Last Updated : 01 Mar 2017 12:00 PM
“இந்த ஆண்டு பறவைக் கணக்கெடுப்பில் பங்கேற்கலாமா?” என்று எங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் கேட்டேன். காகம், குயில், மைனா, மாடப்புறா போன்றவற்றுடன் வீட்டைச் சுற்றி வாழும் பறவைகளை அவர்கள் ஏற்கெனவே இனம் காணப் பழகியிருந்தார்கள். பறவைக் கணக்கெடுப்பு என்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தார்கள் வாண்டுகள்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Birds Count) ஆண்டுதோறும் பிப்ரவரி 17 முதல் 20 வரை உலகம் முழுவதும் பறவை ஆர்வலர்களின் பங்கேற்போடு நடத்தப்படுகிறது. நாளொன்றுக்குக் குறைந்தது 15 நிமிடங்கள் வீட்டுத் தோட்டம், கல்வி நிலையங்கள், ஏரி, குளம், கண்மாய்கள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழும் பறவைகளைக் கணக்கெடுத்து ‘ebird.org' இணையதளத்தில் பதிவேற்றுவதுதான் இந்த வேலை. பறவைகள் மீதும் இயற்கை மீதும் ஆர்வம் கொண்டிருப்பதே, இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பதற்கான அடிப்படைத் தகுதி.
வலசைப் பறவைகள்
ஒரு நோட்டுப் புத்தகம், பேனா, பறவைகளைப் பற்றிய களக் கையேடு, இருநோக்கி (Binocular), குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பெரும்பாக்கம் சதுப்பு நிலம் நோக்கி நாங்கள் புறப்பட்டோம்.
அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரை, வலசை வரும் பறவைகளின் வரத்து அதிகம் இருப்பதால், சென்னை, சுற்றுப்புறங்களில் உள்ள பறவை வாழிடங்கள் களை கட்டிவிடுகின்றன. நகரின் எல்லைக்குள் இருக்கும் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட சதுப்பு நிலங்களுக்கு வலசை வரும் வாத்து இனங்கள், பூநாரைகள் உள்ளிட்ட நீர்ப்பறவைகள் எளிதில் அனைவரையும் கவரக்கூடியவை. ஐரோப்பா, மங்கோலியா, இமயமலை ஆகிய பகுதிகளில் குளிர்காலத்தில் பனி மூடி விடுவதால், இப்பறவைகள் இரைதேடி நம் ஊர்களுக்கு வலசை வருகின்றன.
அற்புதக் காட்சி
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் ஒப்பிட்டால் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பறவைகளை ரொம்ப அருகிலேயே பார்க்க முடியும். ஆண்டி வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி உள்ளிட்ட வாத்து இனங்கள் கூட்டம் கூட்டமாகப் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் இரை தேடிக்கொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். குழந்தைகள் முதன்முறையாக இப்பறவைகளை நேரில் பார்த்தார்கள். களக் கையேட்டின் உதவியோடு பார்த்த பறவைகளை இனங்கண்டு, ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்தும் கொண்டார்கள்.
அப்படிப் பார்த்த பறவைகள் பட்டியல் ஒன்றை வீட்டுக்கு வந்து ‘ebird.org' இணையதளத்தில் பதிவேற்றினோம். தனித் தனி வகைகளாக 22 பறவையினங்களை குழந்தைகள் பார்த்துப் பட்டியலிட்டிருந்தார்கள். இக்கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் தகவல்கள் பறவையியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.
ஆரோக்கிய பொழுதுபோக்கு
‘இயற்கையைப் பேணுவது எப்படி என்று மனிதர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான ஒரே வழி, அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அதைச் சொல்லித் தருவதுதான்’ என்று நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் கான்ராட் லாரன்ஸ் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் எங்கள் வீட்டுக் குழந்தைகள் பறவைகளை மட்டுமல்லாமல் மனிதர்கள் வாழவும் பல்லுயிர் பெருகவும் அவசியமான சதுப்பு நிலங்களையும் ஏரிகளையும் அன்றைக்கு நேரில் பார்த்தார்கள்.
விடுமுறை நாட்களில் பெரும் செலவு செய்து தீம் பார்க், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நாம், இதுபோல இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்கைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம். இயற்கை மீதான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு மட்டுமல்லாமல், இயற்கையைப் பேணிக் காப்பதற்கும் எதிர்காலத்தில் பொறுப்புள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் குழந்தைகள் வளர்வதற்கும் இது துணைபுரியும்.
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: syedmohamedfirdous@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT