Published : 22 Feb 2017 10:33 AM
Last Updated : 22 Feb 2017 10:33 AM
அறிவியல் மாநாடு என்றாலே விதவிதமான அறிவியல் படைப்புகள் இருக்கும். சிறந்த அறிவியல் படைப்புகளுக்குப் பரிசுகள் கிடைக்கும். ஆனால், புதுச்சேரியில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கீரை கமர்கட்டு மிட்டாயை தங்கள் படைப்பாக வைத்த மாணவிகளுக்குப் பரிசும் பாராட்டும் குவிந்து வருகிறது. கீரையையும் கமர்கட்டையும் கலந்து மாணவிகள் செய்த அறிவியல் படைப்பு என்ன?
தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டைப் புதுச்சேரியில் பள்ளிக்கல்வித் துறை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இந்த மாநாட்டில் ஏராளமான சிறார்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள். அப்படிச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரைதான் கீரையும் கமர்கட்டும் கலந்த மிட்டாய் ஆய்வுக் கட்டுரை. இந்த ஆய்வுக் கட்டுரை தற்போது தேர்வாகிப் பரிசையும் பெற்றுள்ளது. இந்தக் கட்டுரையைச் சமர்ப்பித்த மாணவிகள் காயத்ரி, கவுசிகா, கீதைபிரியா, சவுதன்யா, மோவினா ஆகியோர் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்கள். இந்த ஆய்வுக் கட்டுரையின் சாரம்சம் சமச்சீர் உணவு பற்றியதாகும்.
இந்த மாநாட்டின் இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில், ‘கமர்கட்டு மிட்டாயை வைத்து விருது வாங்கிட்டீங்களே’ எனப் புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் தொடங்கி அதிகாரிகள் பலரும் மாணவிகளைப் பாராட்டினர். விருதும் பரிசும் பெற்ற இந்த மாணவிகள் இந்த ஆய்வு பற்றிய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
“பள்ளிக்கூடத்தில் சின்னக் குழந்தைகளுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். அதை எல்லாக் குழந்தைகளும் சரியாக எடுத்துக்கொள்வதில்லை. இதுக்கு என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தோம். இரும்புச் சத்தைக் குழந்தைகள் விரும்பும் பொருளுடன் கலந்து கொடுத்தால் என்னவெனத் தோன்றியது. குழந்தைகளுக்குப் பிடித்த கமர்கட்டு மிட்டாயில் இரும்புச் சத்தைப் புகுத்தலாம் என முடிவு எடுத்தோம். பல இடங்களில் கேட்டுப் பார்த்தோம். கடைசியில், ஒதியம்பட்டு கிராமத்தில் எங்கள் யோசனையில் கமர்கட்டு செய்து தர முன்வந்தார்கள்.
எங்கள் யோசனைப்படி கறிவேப்பிலை, பாலக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவற்றைக் கொண்டு தனித்தனியாக இரும்புச் சத்து கமர்கட்டு செய்ய முடிவானது. கீரைகளைக் காயவைத்து அரைத்துப் பொடியாக்கி கமர்கட்டுடன் கலந்து மிட்டாயைத் தயாரித்தோம். ஒவ்வொரு வகை கீரையிலும் தனித்தனியாகக் கமர்கட்டைத் தயாரித்தோம். அதைப் பரிசோதிக்க முடிவு எடுத்தோம். இதற்காக 15 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து ஐந்து குழுவாக்கினோம். 3 குழுக்களுக்கு 3 கீரை கமர்கட்டும், 4வது குழுவுக்கு இரும்பு மாத்திரையும், 5-ம் குழுவுக்கு எதுவும் தரவில்லை. தொடக்கத்தில் ஹீமோகுளோபின் அளவைக் குறித்துக் கொண்டோம்.
ஒரு மாதத்துக்குப் பிறகு பரிசோதனை நடத்தியபோது கீரை கமர்கட்டு சாப்பிட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது. 2 மாதங்களுக்குப் பிறகு இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டவர்களைவிட கீரை கமர்கட்டு சாப்பிட்டோரின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு ஒன்றரை சதவீதம் வரை அதிகரித்திருந்தது” என்று பெருமையாகச் சொன்னார்கள்.
“கீரை கமர்கட் மிட்டாய் தயாரிக்க 1.50 ரூபாய் செலவானது என்று கூறிய மாணவிகள், “அதிக அளவில் தயாரித்தால் ஒரு ரூபாய்க்குள் தயாரிக்க முடியும். ரத்தச் சோகை பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த மிட்டாயால் நிச்சயம் முடியும். சத்துணவில் இந்தக் கமர்கட்டுக்கும் இடம் கிடைத்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என்று உற்சாகமாகச் சொன்னார்கள்.
பாரம்பரிய, இயற்கை உணவின் மகிமையைப் பார்த்தீர்களா குழந்தைகளே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT