Last Updated : 11 Jan, 2017 11:04 AM

 

Published : 11 Jan 2017 11:04 AM
Last Updated : 11 Jan 2017 11:04 AM

குழந்தைகளுக்கான குறும்படம்: சண்டையைத் தீர்த்த மாயாஜாலப் பரிசு

அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டால் எந்தக் குழந்தைக்கும் பிடிக்கவே பிடிக்காது. சண்டை போடும்போது சில குழந்தைகள் அழக்கூடச் செய்யும். அப்படி ஒரு வீட்டில் எப்போதும் சண்டைக் கோழிகளாக இருக்கும் அம்மா, அப்பாவை ஒன்று சேர்க்கிறது உங்களைப் போன்ற ஒரு சிறுமி கொடுக்கும் பரிசு. அதுதான் ‘தி கிப்ட்’ என்ற குறும்படத்தின் கதை.

தன் அம்மா, அப்பாவுக்குப் பரிசு ஒன்றைச் செய்துகொடுக்க விரும்புகிறாள் அவர்களது மகள். இதற்காகக் களி மண்ணில் அப்பா, அம்மா உருவத்தை வடிக்கிறாள். அதை ஒரு அழகான பரிசுப் பெட்டியில் வைத்து, அதில் ‘அம்மா, அப்பா’ என்று எழுதிப் பரிசு கொடுக்கக் காத்திருக்கிறாள்.

ஆசை ஆசையாகப் பரிசை எடுத்துக்கொண்டு கொடுக்கப் போகிறாள் அந்தச் சிறுமி. ஆனால், அம்மாவும் அப்பாவும் சமையலறையில் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்த்துச் சோகமடைகிறாள். இருந்தாலும் எப்படியும் பரிசைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.

அப்போது திடீரென அவளது வீடு மாய உலகமாக மாறிவிடுகிறது. அவளுடைய பூனை பொம்மை உயிர் பெறுகிறது. அந்தப் பொம்மை அவளை அந்த மாயாஜால உலகத்துக்குக் கூட்டிச் செல்கிறது. சிறிது தூரம் போனதும் அந்தப் பொம்மையால் நகர முடியவில்லை. என்னவென்று பார்த்தால், அதன் காலில் ஏதோ கயிறு கட்டியிருக்கிறது. அந்தக் கயிற்றின் மறு முனை ஒரு குண்டான நூல்கண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

அந்தக் குண்டு நூல்கண்டு அவர்களை நோக்கி வேகமாக வருகிறது. அவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த பரிசுப் பெட்டியுடன் வேகமாக ஓடுகிறார்கள். அந்த நூல்கண்டு தொடர்ந்து துரத்த, இருவரும் எங்கெங்கோ ஓடுகிறார்கள். கடைசியில், பரிசுப் பெட்டியுடன் அந்தப் பொம்மை மேலிருந்து கீழே விழுந்துவிடுகிறது.

அந்தச் சிறுமியோ கீழே குதித்து, அந்தப் பொம்மையிடமிருந்து அந்தப் பரிசு பெட்டியை வாங்கிக்கொண்டு ஓடுகிறாள். கடைசியில் ஒரு வழியாக அந்த மாயாஜால உலகத்திலிருந்து வெளியே வருகிறாள்.

கண் திறந்து பார்த்தால் அம்மா, அப்பாவின் காலடியில் விழுந்து கிடக்கிறாள். அவர்களோ வீட்டை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். ஏனென்றால், வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் கீழே விழுந்து உடைந்து கிடக்கின்றன. பிறகு தன் மகள் கையில் வைத்திருக்கும் பரிசுப் பெட்டியைப் பார்க்கிறார்கள். அதில் எழுதியுள்ள ‘அம்மா, அப்பா’ என்பதைப் பார்த்து பரிசுப் பெட்டியை இருவரும் திறந்து பார்க்கிறார்கள். அந்தப் பரிசு அவர்களுக்குப் பிடித்ததா, இல்லையா, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் 'தி கிப்ட்' குறும்படத்தின் கதை.

வீட்டில் அம்மா, அப்பா எவ்வளவுதான் சண்டையிட்டாலும் குழந்தைகளின் அன்புக்கு முன்னால் அனைத்தும் மறைந்துவிடும் என்பதை இந்தக் குறும்படத்தில் அழகாகச் சொல்லியுள்ளார்கள். மொத்தம் 5.10 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தைப் பார்க்க உங்களுக்கு ஆசையா? இதோ