Published : 23 Oct 2013 04:25 PM
Last Updated : 23 Oct 2013 04:25 PM
பிலிப்பைன்ஸ் பழங்குடிக் கதை
உங்களுக்கு யாரெல்லாம் நண்பர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுச் சிறுமி, எதிர் வீட்டுச் சிறுவன், பள்ளி நண்பர்கள், சொந்த ஊரிலுள்ள உறவினர்கள்... இப்படித்தானே. சின்னப்பையன் தாவோவுக்கு இரண்டு வித்தியாசமான நண்பர்கள்.
சப்பை மூக்கும் மஞ்சள் தோலும் கொண்ட தாவோ பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவன். தாவோவின் முதல் நண்பர் வானம். இரண்டாவது நண்பர் பூமி. சின்னப்பையனா இருந்தாலும் யாரையெல்லாம் நண்பர்களாக்கிக் கொண்டிருக்கிறான் இந்த தாவோ!
தாவோவுக்கு வானம் ரொம்ப நெருக்கமான நண்பர். எவ்வளவு நெருக்கம்னா, தாவோவின் தலையில் முட்டும் அளவுக்கு நெருக்கம். வானமே தலையில முட்டும் அளவுன்னா, பூமியைப் பத்தி சொல்லணுமா? தாவோவின் கால்களை எப்பொழுதும் வருடுற மாதிரி பூமி தொட்டுக்கிட்டே இருக்கும்.
பஞ்சுப் பொதி போன்ற வானமும், குளிர்ச்சியான பூமியும் தாவோவின் தலையையும் காலையும் எப்பவுமே தொட்டுக் கொண்டிருந்தன. இதனால தாவோவுக்கு எல்லாமே ஜில்லுனு இருந்துச்சு. அந்த ரெண்டு பெரிய நண்பர்களோட, தாவோ ரொம்ப சந்தோஷமா இருந்தான்.
என்னதான் பெரிய நண்பர்களைப் பெற்றிருந்தாலும், தாவோ கொஞ்சம் சோம்பேறி. தட்பவெப்பநிலை வேற ஜில்லுனு இருக்கா, அதனால எப்ப பார்த்தாலும் அவன் தூங்கிக்கிட்டே இருந்தான்.
இதைப் பார்த்த வானத்துக்கு கோபம் வந்திருச்சு. ''தாவோ, நீ சரியான சோம்பேறி. எழுந்திருச்சு ஏதாவது வேலை செய். இப்படியே சோம்பேறியா இருந்தீன்னா, உன் உடம்பு கெட்டுப் போகும்னு'' வானம் கடுமையா திட்டுச்சு.
தாவோ பார்த்தான், வானத்தோட அறிவுரை கூடிக்கிட்டே வந்துச்சு. இதுக்கு அப்புறமும் சும்மா இருந்தால் வானம் விடாது, வேலை செய்யத் தொடங்குவோம் என்று தாவோ தயாரானான்.
சமையல் பொருள்களை சேமிச்சு வைக்கிற இடத்திலிருந்து உரலையும் உலக்கையையும் எடுத்தான். தாவோவிடம் கொஞ்சம் நெல் இருந்துச்சு. அதை குத்தி உமியை நீக்கிட்டா, சாப்பாட்டுக்கு வச்சுக்கலாமே.
உரல், உலக்கையை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தான். அங்கே அவனது நண்பனான வானம் தலையில் முட்டுற மாதிரி நின்னுக்கிட்டிருந்துச்சு. உரலில் நெல்லை போட்டு உலக்கையால் குத்த ஆரம்பிச்சான் தாவோ.
டிம்... டக், டிம்.... டக், டிம்... டக்...
நெல்லில் இருந்து உமி உரிய ஆரம்பித்தது. ஆனா, மேலே என்ன நடந்துச்சு தெரியுமா?
உரலில் குத்திய பின் மேலே உயர்ந்த உலக்கை, தாவோ தலைய தொடுற அளவுக்கு நெருக்கமா அந்தரத்துல நின்னுக்கிட்டிருந்த வானத்து மேல மோத ஆரம்பிச்சது. வானத்துக்கு உடம்பு வலிச்சுது.
“தாவோ, என் மீது இடிக்காதேன்னு” சொன்னுச்சு வானம்.
தாவோ சொன்னான், “வானமே, நான் பேசாம தூங்கிக்கிட்டுதான் இருந்தேன். நீ தானே வேலை செய், வேலை செய்னு சொன்ன”.
“உன்னை வேலைதான் செய்யச் சொன்னேன். எப்ப பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருந்தேன்னா, உன் உடம்பு கெட்டுப்போகும். அதனாலதான் அப்படிச் சொன்னேன். ஆனா, நீ என்னடான்னா எனக்கு வலிக்கிற மாதிரி உலக்கையால குத்துறே. இது சரியில்லைன்னு” சொன்னுச்சு.
தாவோ கேக்கலை. டக் டக்... டக் டக்... டக் டக்... டக் டக்.... உலக்கையால் கீழே வேகமாகக் குத்தி, வானத்து மேலேயும் வேகமாக இடிக்க ஆரம்பிச்சான்.
“தாவோ, இது நல்லதில்ல. வேண்டாம். போதும்...” வானம் சொல்லிக்கிட்டே இருந்துச்சு. இப்படியே சொல்லிச்சொல்லி, வானம் சலிச்சுப் போச்சு.
சின்னப்பயல் தாவோ கேக்கவேயில்ல.
வானம் பார்த்தது. இது சரிப்படாது, போதும் போங்கப்பான்னு மேலே மேலே மேலே... இன்னும் மேலே போனது.
அதுவரைக்கும் நம்ம தலையில முட்டுற மாதிரி இருந்த வானம், அன்னைக்கு மேலே போனதுதான். வானம் கீழே இறங்கவும் இல்லை. தாவோ வேலை செய்றத நிறுத்தவும் இல்ல. இன்று வரை மனிதர்கள் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்துல நிக்க ஆரம்பிச்சுடுச்சு வானம். இப்படித்தான் வானம் மேலே போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT