Last Updated : 01 Oct, 2014 11:50 AM

 

Published : 01 Oct 2014 11:50 AM
Last Updated : 01 Oct 2014 11:50 AM

சித்திரக்கதை: மூன்று மீன்கள் மூன்று குணங்கள்

அந்தக் கிராமத்தின் பெயர் குளத்துப்பட்டி. ஊரின் பெயருக்கேற்ப அழகான குளம் ஒன்று அந்த ஊரில் இருந்தது. அந்தக் குளத்தில் மூன்று மீன்கள் வசித்து வந்தன. மூன்றும் நண்பர்களாக இருந்தன. நண்பர்களாக இருந்தாலும், மூன்று மீன்களும் வெவ்வேறு குணங்களைக் கொண்டிருந்தன.

எதையும் முன்கூட்டியே யோசித்துச் செய்யும் குணம் ஒரு மீனிடத்தில் இருந்தது.

இரண்டாவது மீனோ, “ஏதாவது நடந்தா, அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்…!’ என்கிற குணமுடையது.

‘நம்மால் எதுவும் செய்ய முடியாது; எது நடக்கிறதோ அதுபடி நடக்கட்டும்…’ என்ற குணத்துடன் மூன்றாவது மீனும் வாழ்ந்து வந்தது.

ஒருநாள்- குளக்கரையோரமாய் இரண்டு மீனவர்கள் வந்தார்கள்.

“இந்தக் குளத்தில் ரொம்ப நாளா மூணு பெரிய மீன்கள் இருக்கு. அதப் பிடிக்கணும்…” என்றான் ஒரு மீனவன்.

“அப்படியா…! நாளைக்கே வலை போட்டுப் பிடிச்சிடுவோம்…” என்றான் இன்னொரு மீனவன்.

இதைக் கரையோரமாய் நின்ற முதல் மீன் கேட்டுவிட்டது.

உடனே, இரு நண்பர்களையும் அழைத்து விஷயத்தைச் சொல்லி, “காலையில் நம்மைப் பிடித்து விடுவார்கள். வாருங்கள்…அருகே உள்ள வாய்க்கால் வழியாக இப்போதே வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம்…” என்று முதல் மீன் சொன்னது.

“நாளைக்குக் காலையில யாராவது வந்தா பாத்துக்கலாம்.பேசாம வேலையப் பாரு…” என்றது இரண்டாவது மீன்.

“யாரோ சும்மா பேசிக்கிட்டுப் போயிருக்காங்க. அதுக்குப் போயி பயந்துக்கிட்டு குளத்தை விட்டுப் போறதா…நா வரலே..!”என்றது மூன்றாவது மீன்.

வேறு வழியின்றி, முதல் மீன் மட்டும் வாய்க்கால் வழியாக வேறு இடத்திற்குச் சென்றுவிட்டது.

மறுநாள் விடிகாலையிலேயே மீனவர்கள் சொன்னதுபோல் வந்தார்கள். குளத்தில் வலையை வீசினார்கள்.

திடீரென்று வலையை வீசியதில், தூங்கிக் கொண்டிருந்த இரு மீன்களும் வலையில் சிக்கிக் கொண்டன.

“அய்யோ…நண்பன் சொன்னதைக் கேட்காமல் இப்படி மாட்டிக் கொண்டோமே…!”என்று வருத்தப்பட்டது இரண்டாவது மீன்.

மூன்றாவது மீனோ, “ஏன் வீணாப் புலம்புறே. என்ன பண்றாங்கன்னு பொறுமையாத் தான் பாப்போமே…!” என்றது.

இரண்டாவது மீன் வயிறு முட்ட தண்ணீரைக் குடித்தது. வயிறு பெரிதாகி விட்டது. அப்படியே செத்த மீனைப்போல கிடந்தது. மூன்றாவது மீனோ எந்தக் கவலையுமின்றி வலையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

வலையைக் கரைக்கு இழுத்துவந்த மீனவர்கள், “ஆகா…ஒரு மீன் எப்படியோ தப்பிச்சுடுச்சே…?”என்று வருத்தப்பட்டனர். வலையிலிருந்த மற்ற இரு மீன்களையும் வெளியே எடுத்தனர்.

“இந்த மீனைப் பாரு. வயிறு எவ்வளவு பெருசாயிருக்கு. ஏதோ நோய் வந்து செத்துப் போயிருக்கு…இதை சாப்பிட்ட நமக்கும் நோய் வரும்!”என்றபடி இரண்டாவது மீனைத் தூக்கிக் குளத்தில் வீசினான் ஒருவன்.

குளத்திற்குள் பாய்ந்து சென்று ஒளிந்துகொண்டது இரண்டாவது மீன்.

“அய்யய்யோ…நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டேனா” என்று மூன்றாவது மீன் புலம்புவது உங்கள் காதுகளில் கேட்கிறதா?

ஓவியங்கள்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x