Published : 01 Oct 2014 12:31 PM
Last Updated : 01 Oct 2014 12:31 PM
ஒரு ஊர்ல உங்கள மாதிரி ஒரு குட்டிப் பையன் இருந்தான். அவன் பேரு சஞ்சீவ். அவனுக்கு ஒரு முக்கியமான ஃப்ரெண்டு இருந்தான். அவன் பேரு டாமி. என்னடா இது நாய்க் குட்டிப் பேரா இருக்குன்னு நினைக்கிறீங்களா? ஆனால். இது பூனைக் குட்டி.
சின்ன வயசுல இருந்து இந்தப் பூனையும் அவனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். சஞ்சீவும் டாமியும் ஜாலியா விளையாடுவாங்க. என்னதான் விளையாண்டாலும் டாமி மாதிரி தன்னால விளையாட முடியலையேன்னு சஞ்சீவுக்கு ஒரே கவலை. ஆனால், டாமி வீட்டுச் சுவர் மேலே ஏறும், குதிக்கும். எங்கே வேணாலும் போகும். வரும்.
காலை எழுந்ததும் அவுங்க அம்மாவும் அப்பாவும் சஞ்சீவை ஸ்கூலுக்குக் கொண்டு போய் விட்டிருவாங்க. ஆனால் டாமி ஜாலியா சுவர் மேல ஏறிச் சுத்திக்கிட்டு இருக்கும். சஞ்சீவ் ஸ்கூலுக்குக் போறப்ப, டாமி அவனைப் பார்த்துக் கேலி செஞ்சு சிரிக்கும்.
சஞ்சீவ் ஸ்கூல்ல இருந்து திரும்பி வந்தா, அவுங்க அம்மா விளையாட விடமாட்டங்க. ஸ்கூல் ஹோம் ஒர்க்கை செய்ய சொல்லுவாங்க. ஆனால், இந்த டாமி பாலைக் குடிச்சுட்டு ஜாலியா சுத்திட்டிருக்கும். சஞ்சீவுக்கு டாமி மாதிரி தானும் சுத்தணும்னு ஆசை. ஆனால் ஒண்ணும் பண்ணா முடியாதே?
அதுக்கு சஞ்சீவ் ஒரு ஐடியா பண்ணான். டாமிகிட்ட நைஸா பேசினான். “ நீ ஒரு வாரம் என்னை மாதிரி மாறி ஸ்கூலுக்குப் போ, நான் உன்னை மாதிரி மாறி இங்கேயே இருக்கேன்”ன்னு சொன்னான். டாமிக்கும் சஞ்சீவ் மாதிரி யூனிபார்ம், ஷூ, டை எல்லாம் கட்டணும்னு ஆசை. அதனால உடனே ‘ஓகே’ன்னு சொல்லிடுச்சு.
மறுநாள் காலை எழுந்ததும். டாமி, சஞ்சீவா மாறி ஸ்கூலுக்குப் போச்சு. சஞ்சீவ், டாமியா மாறி பக்கத்து வீட்டுச் சுவர் மேல போய் நின்னுட்டு இருந்தான். டாமி ஸ்கூலுக்குப் போன பின்னாடி சஞ்சீவ் ஒவ்வொரு வீடா குதிச்சு குதிச்சு ஜாலியா சுத்தினான்.
இப்படியே ஒரு வாரம் போனது. சஞ்சீவுக்குப் பூனை மாதிரி சுத்துறது பிடிக்கல. பக்கத்து வீட்ல இருக்கிற சேட்டைக்காரப் பூனைகள் எல்லாம் சஞ்சீவ்கிட்ட அடிக்கடி சண்டைக்கு வந்துச்சுங்க. ஆனால் டாமிக்கு ஸ்கூலுக்குப் போறது, ஹோம் ஒர்க் பண்றதெல்லாம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
ஒரு வாரம் முடிஞ்சதும் சஞ்சீவ் டாமிகிட்ட வந்து, “போதும் எனக்குப் போரடிக்கிது. நாம திரும்பவும் மாறிடலாம்”னு சொன்னான். ஆனால் டாமி, “நான் உன்ன மாதிரி ஸ்கூலுக்குப் போறேன். நீ என்ன மாதிரியே மியாவ்…மியாவ்..ன்னு கத்திக்கிட்டு சுத்து”ன்னு சொன்னுச்சு. சஞ்சீவ் முடியாதுன்னு டாமியை மிரட்டினான். ஆனால் டாமி, “முடியவே முடியாது”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள ஓடி போயிடுச்சு. சஞ்சீவுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம, “மியாவ்... மியாவ்...”ன்னு கத்திகிட்டு வீட்டைச் சுத்திச் சுத்தி வந்தான்.
கதைக்கு முடிவு சொல்லுங்கள்
சஞ்சீவ் என்ன சொன்னா, டாமி சமாதானமாகும்? அதுக்கு சஞ்சீவ் என்ன செய்யணும்? குட்டிப் பசங்களா அதைப் பத்தி நீங்க எழுதி, உங்கள் புகைப்படத்துடன் தலைமையாசிரியரிடம் கையொப்பம் வாங்கி எங்களுக்கு அனுப்புங்க. டாமி மனசு மாறுவது மாதிரி உங்க முடிவு இருந்தா, அது பேப்பர்ல வரும். என்ன, சரியா?
கரிகாலனின் ‘அபத்தங்களின் சிம்பொனி’ தொகுப்பின் கவிதையை அடிப்படையாகக் கொண்டது இக்கதை.
ஓவியம்: முத்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT