Published : 26 Jan 2014 06:39 PM
Last Updated : 26 Jan 2014 06:39 PM
இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
1930 ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
காந்தியடிகள் அப்படி அறிவித்ததன் பின்னணி என்ன?
1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், 'பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் கனன்றுகொண்டிருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார்.
ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் வாசகம் இதுதான்:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் ஜனவரி 26. சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT