Last Updated : 17 Aug, 2016 12:34 PM

 

Published : 17 Aug 2016 12:34 PM
Last Updated : 17 Aug 2016 12:34 PM

மனிதனும் விலங்கும் சண்டை போட்ட இடம்!

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள கொலோசியம் உலக அதிசயங்களில் ஒன்று. இது ஒரு பிரம்மாண்டமான அரங்கம். போர் வீரர்களின் சண்டை, விலங்குகள் சண்டை, குற்றவாளிகளுடன் விலங்கு சண்டை, யுத்த நாடகங்கள், மரண தண்டனைகள் எல்லாம் அரங்கேறிய இடம். மேற்கூரையில்லாத இந்த வட்ட வடிவக் கட்டிடத்தின் நடுவில் உள்ள களத்தில்தான் சண்டைகள் நடைபெற்றன. களத்தைச் சுற்றி உள்ள வட்ட வடிவப் படிகளில் மக்கள் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.

இது ஃபிளேவியன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதனால் இதை ‘ஃபிளேவியன் ஆம்பி தியேட்டர்’ என்று முதலில் அழைத்தார்கள். ‘கொலோசஸ் ஆஃப்நீரோ’ என்றழைக்கப்படும் நீரோ மன்னனின் பிரம்மாண்டமான சிலையின் பக்கத்தில் இந்த அரங்கம் அமைந்ததால் இதற்கு ‘கொலோசியம்’ என்ற பெயர் பின்னர் வந்தது.

இந்த கொலோசியம் பேரரசர் வெஸ்பாசியனால் கி.பி. 72ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின் அவருடைய மகன் டைட்டஸ் கி.பி. 81ல் கட்டி முடித்தார். ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கொலோசியம், 620 அடி நீளம், 512 அடி அகலம், 158 அடி உயரம் கொண்டது. மொத்தம் ஒரு லட்சம் கன மீட்டர் அளவுள்ள மார்பிள் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.

இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டன. முதல் கேலரியில் அரசரும் அவரது குடும்பத்தினரும்; இரண்டாம் கேலரியில் பிரபுக்களும் முக்கிய விருந்தினரும்; மூன்றாம் கேலரியில் குடிமக்களும் போர் வீரர்களும்; நான்காம் கேலரியில் பெண்களும் அடிமைகளும் உட்காருவார்கள். இதோடு கீழே சுரங்கப் பாதைகளும், நிலவறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவை ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும், அடிமைகள், விலங்குகள் காத்திருக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன.

இங்கே நடத்தப்பட்ட சண்டையில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். மற்றவர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். கைதியொருவர் வென்றால், அவருக்கு விடுதலை கொடுப்பது வழக்கம். இவ்விளையாட்டுகளில், பட்டினி போடப்பட்ட சிங்கம், புலி ஆகியவற்றைக் கொண்டும் மனிதர்களோடு சண்டைபோட வைப்பார்களாம்.

இந்த ஆம்பி தியேட்டர் பயன்பாட்டில் இருந்து வந்த 390 ஆண்டுகளில் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளார்கள். சுமார் பத்து லட்சம் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. கொலோசியம் பற்றி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது ரோம் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாகக் கொலோசியம் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பயணிகள் இதைப் பார்க்க வருகிறார்கள்.

தகவல் திரட்டியவர்: எஸ். கார்த்திக், 11-ம் வகுப்பு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x