Last Updated : 15 Oct, 2014 12:30 PM

 

Published : 15 Oct 2014 12:30 PM
Last Updated : 15 Oct 2014 12:30 PM

முதலையின் பல் டாக்டர்

நாம் யாருடைய உதவியும் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியுமா? முடியாது இல்லையா? அப்படித்தான் சில உயிரினங்களும்கூட ஒன்றையொன்றைச் சார்ந்து, உதவி செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றன. அவை எந்த உயிரினங்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? வெவ்வேறு இன உயிரினங்கள் உதவி செய்துகொள்வதை mutualism என்கிறார்கள். சுவாரசியமாக வாழ்க்கை நடத்தும் சில உயிரினங்களைச் சந்திப்போமா?

முதலையின் வாய்க்குள்...

முதலையைக் கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், ‘புளோவர்’ என்ற சின்னஞ்சிறு பறவைக்கு மட்டும் முதலையைக் கண்டால் துளி பயம்கூடக் கிடையாது. காரணம், முதலையின் பல் டாக்டரே இந்தப் புளோவர்தான். எந்த உயிரினத்தைக் கண்டாலும் இரையாக்கக் காத்திருக்கும் முதலை, புளோவரைக் கண்டால் மகிழ்ச்சியாக வாயைத் திறக்கும். தன்னைச் சாப்பிட்டு விடுமோ என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் புளோவர் முதலையின் பற்களில் அமரும். பற்களின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் மாமிசத்தைக் கொத்திக் கொத்தி தின்னும். முதலையின் பற்கள் முழுவதும் இப்படிச் சுத்தம் செய்து முடிக்கும்போது புளோவரின் வயிறும் நிரம்பிவிடும். பற்கள் சுத்தமாகி நோய்த் தொற்று இல்லாமல் முதலை ஆரோக்கியமாக இருக்கும்.

புழுவும் பாதுகாப்பும்

எருது, வரிக்குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் எருதுகொத்தி (oxpecker) பறவையைப் பார்த்திருக்கிறீர்களா? எருதின் முதுகில் உள்ள புண்களில் இருந்து வரும் புழுக்களைத் தின்பதற்காகவே இப்பறவை அமர்ந்திருக்கிறது. எருதும் தன் புண்ணிலிருந்து புழு வெளியேறினால் நல்லதுதானே என்று நினைக்கும்! அது மட்டுமல்ல, காடுகளில் ஏதாவது ஆபத்து என்றால் பறவைகள் சீக்கிரமாகவே உணர்ந்துகொண்டு, சத்தமிட்டபடி பறந்துவிடும். ஆபத்தை உணர்ந்து எருதும் சுதாரித்து, தப்பி ஓடிவிடும். அதனால், உயிர் காக்கும் தோழனுக்கு உணவளிக்கிறது எருது!

மகரந்தச் சேர்க்கை

இடம் விட்டு நகர முடியாத தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை நடைபெற்று, இனப்பெருக்கம் செய்வதற்குச் சில பூச்சிகளும் தேன்சிட்டு போன்ற பறவைகளும் உதவுகின்றன. பூக்களில் இருந்து பூந்தேனைக் குடித்துவிட்டு பூச்சிகளோ, பறவைகளோ செல்லும்போது அவற்றின் மீது மகரந்தம் ஒட்டிக்கொள்ளும். அடுத்த தாவரத்தில் அவை அமர்ந்து பூந்தேனை உறியும்போது மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படித் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்குப் பெரிதும் உதவுபவை பூச்சிகளும் பறவைகளும்தான்! இந்த உதவிக்குப் பிரதிபலனாகத்தான் பூச்சிகளும் பறவைகளும் தாவரங்களில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்கின்றன.

கோமாளி மீன்

உங்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்தது நீமோ மீன்தான் இல்லையா? இதைக் கோமாளி மீன் (clown fish) என்று சொல்லுவார்கள். கடல் சாமந்தியும் (sea anemone) கோமாளி மீனும் நெருங்கிய நண்பர்கள். கோமாளி மீனால் வேட்டையாடி உணவைச் சாப்பிட முடியாது. கடல் சாமந்திக்கோ இடத்தை விட்டு நகரவே முடியாது. அதனால், கோமாளி மீன் கடல் சாமந்திக்குச் சற்றுத் தொலைவில் நீந்தும். அழகான இந்த மீனைப் பார்த்து அருகில் சில மீன்கள் வரும். உடனே கோமாளி மீன் அவற்றைக் கடல் சாமந்திக்கு அருகில் அழைத்துச் செல்லும். கடல் சாமந்தி தன்னுடைய கொடுக்குகளால் மீனைக் கொல்லும். அது சாப்பிட்ட எஞ்சிய உணவைக் கோமாளி மீன் சாப்பிடும். கடல் சாமந்தியின் ஆண்டெனாக்களுக்குள் சென்று எந்த உயிரினமும் உயிரோடு திரும்பி வரவே முடியாது. ஆனால், கோமாளி மீன் மட்டும் ஆண்டெனாக்களுக்குள் சென்று ஹாயாக விளையாடும்!

கடலுக்குள் கிளீனிங் ஸ்டேஷன்

கடலுக்குள் கிளீனிங் ஸ்டேஷன் என்று சுத்தம் செய்யும் இடமே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? முரே ஈல், மன்டா திருக்கை, கிளி மீன் போன்ற பல மீன்கள் தங்கள் உடலையோ, பற்களையோ சுத்தம் செய்வதற்காக இங்கு வருகின்றன. உடலில் உள்ள இறந்த செல்கள், பற்களில் உள்ள உணவுத் துணுக்குகளைச் சுத்தம் செய்துவிடுகிறது கிளீனர் ஃபிஷ். இந்தச் சின்னஞ்சிறு மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கவோ, காயப்படுத்தவோ செய்வதில்லை.

விநோதமாக இருக்கிறது இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x