Published : 17 May 2017 10:51 AM
Last Updated : 17 May 2017 10:51 AM
கோடை விடுமுறையை ஜாலியாக அனுபவிக்கி றீர்களா? மற்ற ஊர்களைவிட சென்னையில் குழந்தைகள் குதூகலமாக விடுமுறையைக் கழிக்க நிறைய இடங்கள் இருக்கின்றன. அதனால், வெளியூரில் உள்ள குழந்தைகள் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வர ரொம்பவே ஆசைப்படுவார்கள். அப்படி சென்னை வருகிறபோது வண்டலூர் விலங்குகள் காட்சிச் சாலை, கிண்டி பூங்காவுக்கு மறக்காமல் போய்விடுவார்கள். சென்னை நகருக்குள்ளே குழந்தைகள் சுற்றிப் பார்க்க இன்னும் சில இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு ரவுண்டு விடுவோமா?
நகருக்குள்ளே படகு சவாரி
சென்னையில் படகு சவாரி போக வேண்டும் என்றால், நகரிலிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள பழவேற்காடு, முட்டுக்காடுக்குத்தான் போக வேண்டும் என்றில்லை. சேத்துப்பட்டு பசுமைப் பூங்காவுக்கும் போகலாம். 16 ஏக்கர் பரப்பளவில் ஏரியும் பூங்காவும் பசுமையாகக் காட்சியளிக்கிறது. சென்னை நகருக்குள்ளேயே பூங்காவுடன் படகு சவாரி உள்ள இடம் இது. அது மட்டுமல்ல, இங்கே ஜாலியாக உட்கார்ந்துகொண்டு குழந்தைகள், பெரியவர்கள் மீன் பிடிக்கலாம். பூங்காவைச் சுற்றி வந்து ஏரியை ரசிக்கலாம்.
ஆனால், இங்கே வரும் குழந்தைகள் படகு சவாரியை அதிகம் விரும்புகிறார்கள். படகு சவாரிக்கு 20 நிமிடங்கள் கொடுக்கப்படுகின்றன. படகு சவாரிக்கு 50 ரூபாய். தூண்டிலில் மீன் பிடிக்க 300 ரூபாய். பூங்காவுக்குள் செல்லப் பெரியவர்களுக்கு 25 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பசுமைப் பூங்கா திறந்திருக்கும். குழந்தைகளைக் கவர 15 நிமிட முப்பரிமாணக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரயில் அருங்காட்சியகம்
ரயில் பயணம் என்றாலே குழந்தைகளுக்குக் குஷிதான். ஜன்னலோர இருக்கையை விரும்பாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். நாமெல்லாம் விரும்பும் ரயிலின் பெட்டிகளை எங்கு தயாரிக்கிறார்கள்? சென்னை ஐ.சி.எஃப்-ல் உற்பத்தி செய்யப்படுகின்றன. சராசரி ரயில் பெட்டி முதல் ஆடம்பர ரயில் பெட்டி வரை இங்கே தயாரிக்கப்படுகின்றன. அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது ஐ.சி.எஃப்.-ல் உள்ள ரயில் அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெட்டிகள் தயாரிக்கப்படும் விதம், எலிசபெத் ராணியின் வருகை, குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பார்வையிடல் எனப் பல ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்குப் புரியும்படி எளிமையாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கால ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் மாதிரிகளையும் இங்கே பார்க்கலாம்.
அருங்காட்சியகத்துக்கு வெளியே ரயில் பெட்டிகள், 1956 முதல் 2000 வரை பயன்படுத்தப்பட்ட ரயில் என்ஜின்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் மிகப் பழமையான 1909 ல் பயன்படுத்தப்பட்ட என்ஜினும் ஒன்று. இங்கே வரும் குழந்தைகள் ஜாலியாக ரயிலில் பயணம் செய்யச் சிறுவர்கள் ரயிலும் அருங்காட்சியகத்தைச் சுற்றி வருகின்றன.
ஆங்கிலேயர் காட்சியகம்
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை உங்களுக்குத் தெரியுமல்லவா? சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. அந்தக் கோட்டையே வரலாற்று நினைவுச் சின்னம்தான். அந்த வளாகத்துக்குள் நினைவுச் சின்னங்களைக் கொண்ட அருங்காட்சியகம் உள்ளது. அதைக் கோட்டை அருங்காட்சியகம் என்று அழைப்பார்கள்.
இந்தக் கட்டிடம் 1795 ம் ஆண்டு முதல் சிறிது காலம் மதராஸ் வங்கியாகச் செயல்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு 1948 ம் ஆண்டில் மக்கள் பார்வைக்காகக் கோட்டை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ஆங்கிலேயர் பயன்படுத்திய பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள், கேடயங்கள் எனப் பல பொருட்களை இங்கே பார்க்கலாம். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிறு பீரங்கிகள் பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
மதராஸ் மாகாணத்தில் பயன்படுத்தப்பட்ட சீருடைகள், பதக்கங்கள், மதராஸ்-ஐரோப்பியர்களின் கொடிகளும்கூட இங்கே உள்ளன. இந்தியா சுதந்திரமடைந்தபோது கோட்டையில் ஏற்றப்பட்ட நம் நாட்டின் தேசியக் கொடியும் இங்கே பார்வைக்கு உள்ளது. மேலும் நவாபுகள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீங்கான் பாத்திரங்கள், கோட்டை தேவாலயத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், நாணயங்கள், ஆங்கிலேய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓவியங்களும் இந்தக் காட்சியகத்தில் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்துக்கு வந்தால் மதராஸ் மாகாணத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி சுருக்கமாக அறிந்துகொள்ளலாம். அந்த வாய்ப்பைக் கோட்டை அருங்காட்சியகம் வழங்குகிறது.
- பாரதி. வி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT