Published : 14 Sep 2016 11:29 AM
Last Updated : 14 Sep 2016 11:29 AM
வாண்டு: ஹலோ பாண்டு, எப்படி இருக்க?
பாண்டு: தினமும்தான் பார்த்துக்குறோம். இதுல நலம் விசாரிப்பு வேறையா?
வாண்டு: உன்னைப் பார்த்து ரெண்டு நாள் ஆச்சு. அதான் கேட்டேன். சரி விடு, உன்னோட பிறந்த நாள் இந்த வருஷம் எந்தக் கிழமையில வருது?
பாண்டு: வெள்ளிக்கிழமையா? சனிக்கிழமையா? சரியா தெரியலையே. காலண்டரைப் பார்க்கணும்?
வாண்டு: பிறந்த நாள் எந்தக் கிழமையில வருதுன்னுகூட தெரியலையா? மும்பையில இருக்குற ஆர்யன் பராப்கிட்டே கேட்டிருந்தா டக்குன்னு சொல்லியிருப்பான்.
பாண்டு: அது யாரு? என்னோட பிறந்த நாள் எப்ப வரும்னு அவனுக்கு எப்படித் தெரியும்?
வாண்டு: இந்த வருஷப் பிறந்த நாள் கிழமை மட்டும் இல்லை. இன்னும் 50 வருஷம் கழிச்சு உன்னோட பிறந்த நாள் எந்தக் கிழமையில வரும்னு சொல்லிடுவான்.
பாண்டு: பெரிய ஆளா இருப்பான் போல. அவனைப் பத்தி சொல்லேன்.
வாண்டு: ஆர்யான் பராப்புக்கு 10 வயசு ஆகுது. இந்தப் பையன்கிட்டே 2068-ம் வருஷம் வரைக்கும் எந்தத் தேதியைச் சொன்னாலும், அதோட கிழமையைச் சொல்லிடுறான். 3 வருஷத்துக்கு முன்னால ஒவ்வொரு வருஷமும் தன்னோட பிறந்த நாள் எந்தக் கிழமையில வருதுன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்கான். இப்படிக் கிழமையைச் சொல்றதுல அவனுக்கு ஆர்வம் வந்ததால, எப்போ பார்த்தாலும் காலண்டரைக் கையில வைச்சுக்கிட்டு ஆராயத் தொடங்கிட்டானாம். இப்போ இவனே புதுசா காலண்டரை எழுத ஆரம்பிசுட்டானாம். இதுவரைக்கும் 2068-ம் வருஷம் வரைக்கு காலண்டரைத் தயார் செய்துட்டானாம். காலண்டர் சம்பந்தமா எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சட்டுன்னு பதில் சொல்லிடுறான்.
பாண்டு: நமக்கெல்லாம் அடுத்த வருஷம் எந்தத் தேதி எந்தக் கிழமையில வருதுன்னே தெரியறதில்லை. இந்தப் பையன் இன்னும் 50 வருஷம் கழிச்சு வர்ற கிழமையைக்கூடச் சொல்றானா பெரிய ஜீனியஸா இருப்பான் போல. இந்த ஆர்யான் மாதிரியே நம்ம ஊரு ஒரு குட்டிப் பொண்ணு வித்தியாசமான பூக்கள வரைஞ்ச விஷயம் உனக்குத் தெரியுமா?
வாண்டு: பூக்கள் வரையறது வித்தியாசமான ஒண்ணாப்பா? வழக்கமா எல்லோரும் வரையறதுதானே?
பாண்டு: நீ நினைக்குற மாதிரி, வழக்கமா நாம பார்க்குற பூக்கள் கிடையது. சங்க இலக்கியத்துல வர்ற பூக்கள். குறிஞ்சுப் பாட்டுல 99 மலர்களைப் பத்தி சொல்லியிருக்காங்க. அந்த 99 பூக்களைத்தான் இந்தக் குட்டிப் பொண்ணு வரைஞ்சிருக்கா.
வாண்டு: அந்தப் பொண்ணு யாரு? எங்க இருக்கா?
பாண்டு: அந்தப் பொண்ணோட பேரு பூரணி. மதுரையில இருக்கா. 5 வயசுதான் ஆகுது. தமிழக முதல்வருக்கு அனுப்புறதுக்காக இந்தப் பூக்களை வரைய ஆரம்பிச்சுருக்கா. அவுங்க அப்பா உதவியோட ஒவ்வொரு பூவும் எப்படி இருக்கும்ங்கிறதைப் பார்த்து வரைய ஆரம்பிச்சுருக்கா. மொத்தமா 99 சங்கத் தமிழ் பூக்களையும் வரைய 3 மாசம் ஆனதாம். பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட பூக்களை வரையறது ரொம்ப ஈஸிதான். ஆனா, பார்க்கவே முடியாத பூக்களை வரையறது எவ்ளோ கஷ்டம்.
வாண்டு: ஆமா, நீ சொல்றதுதான் சரி. இதுக்கெல்லாம் தனித் திறமை வேண்டும் போல.
பாண்டு: திறமையில்லைப்பா. முதல்ல ஆர்வமும், விடா முயற்சியும் வேணும். அது இருந்தா நமக்குள்ளேயே திறமை வளர ஆரம்பிச்சுடும்.
வாண்டு: நீ சொல்வதும் வாஸ்தம்தான்.
பாண்டு: திறமைக்கு எடுத்துக்காட்டா ரியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்துற பாராலிம்பிக்கில உயரம் தாண்டுதல் போட்டியில ஜெயிச்ச மாரியப்பன் தங்கவேலைச் சொல்லலாம்.
வாண்டு: நம்ம தமிழ்நாட்டுக்காரு தங்கம் வாங்கியது எவ்ளோ பெருமை.
பாண்டு: ரொம்ப பெருமையான விஷயம்தான். ஆனா, அதுக்காக அவரு எவ்ளோ உழைச்சிருப்பாரு. அவருக்கு இப்போ 21 வயசு ஆகுது. அவரு நம்மள மாதிரிக் குட்டிப் பையனா இருந்தப்பத்தான் கால் பாதிக்கப்பட்டுச்சாம். வீட்டுப் பக்கத்துல விளையாடிக்கிட்டு இருந்தப்ப, பஸ் அவரு மேலே மோதியிருக்கு. அதுல அவரோட வலது கால் கட்டை விரலைத் தவிர மற்ற கால் விரல் பகுதிகள் சிதைஞ்சு போயிடுச்சாம். அப்படித்தான் அவரு மாற்றுத் திறனாளியா ஆயிருக்காரு. மாற்றுத்திறனாளியா இருந்தாலும், உயரம் தாண்டுதல் போட்டின்னா ரொம்ப ஆர்வமா கலந்துக்குவாராம். படிப்படியா பயிற்சி எடுத்து, திறமையை வளர்த்துக்கிட்டு, இப்போ உலக அளவுல பெரிய சாதனையைப் படைச்சிருக்காரு.
வாண்டு: உண்மையிலேயே இது பெரிய சாதனைத்தான்பா. அவருக்கு நாமும் வாழ்த்து சொல்லிடுவோம். சரிப்பா, வீட்டுல எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புட்டுமா?
பாண்டு: சரி. டாட்டா... பை...பை...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT