Published : 08 Feb 2017 11:28 AM
Last Updated : 08 Feb 2017 11:28 AM
உங்களுக்கு என்னென்ன நீர்நிலைகள் தெரியும்? ஆறு, குளம், ஏரி, குட்டை என்று சிலவற்றை சொல்வீர்கள். உண்மையில், 40-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. ஆனால், அந்த நீர்நிலைகள் எதுவும் இப்போது இல்லை. அந்த நீர்நிலைகளை மீட்டெடுத்து பராமரித்தால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்ப் பஞ்சமே வராது என்று 7 வயது சிறுமி வகுப்பெடுத்திருக்கிறாள். மதுரை எல்லீஸ் நகரில் தனியார் பள்ளியில் படிக்கும் சூ. பூரணிதான் அந்தச் சிறுமி.
தமிழகத்தில் அகழி, ஆழிக்கிணறு, நடைகிணறு, இலஞ்சி, சேங்கை, தடாகம், கால், குளக்கால் உள்பட 40-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்ததாகச் சொல்லும் பூரணி, இந்த நாற்பது நீர்நிலைகளையும், படங்களாக வரைந்து விழிப்புணர்வு கண்காட்சியையும் அண்மையில் நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறாள்.
இதுபற்றி சிறுமி பூரணி கூறுகையில், “மழை பெய்யாமல் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது. மழைபெய்யும்போது அதை சேர்த்து வைக்க வேண்டும். சேமித்து வைக்க வேண்டுமானால் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் அழிந்துபோன 40 நீர்நிலைகளைக் கண்டுபிடிச்சு வரைந்தேன். இதற்கு என்னுடைய அப்பா சூர்யகுமார் உதவியா இருந்தார்.
தமிழகத்தின் வறட்சி பாதிப்பு பற்றியும், தண்ணீர் பற்றாக்குறை பற்றியும் அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார். நீர்நிலைகள் மறைந்து போன விஷயம் பற்றியும் சொன்னார். இதன்பிறகு நீர்நிலைகளை வரைய ஆரம்பிச்சேன். இதை வரைய 3 மாதங்கள் ஆகின” என்று சொன்னார் பூரணி.
பூரணி ஏற்கெனவே தமிழகத்தின் 99 மலர்களை வரைந்து கண்காட்சிக்கு வைத்து பலரது பாராட்டையும் பெற்றவர்.
- மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT