Last Updated : 03 May, 2017 11:22 AM

 

Published : 03 May 2017 11:22 AM
Last Updated : 03 May 2017 11:22 AM

காரணம் ஆயிரம்: சொரசொரப்பான பொருட்கள் வழுக்குமா?

சொரசொரப் பான பொருட் கள் வழுக்குமா? நிச்சயமாக வழுக்காது! வழுவழுப்பான பொருட்கள் தானே வழுக்கும்? சொரசொரப்பான தரையில் நடக்கும்போது அவை வழுக்குவதில்லையே! கழுவி விடப்பட்ட மொசைக் தரையில் நடப்பதுதானே கஷ்டமாக இருக்கிறது. கட்டாந்தரையில் சிரமமே இல்லாமல் நடந்துவிடுகிறோமே!.

இதுபோன்ற உங்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில் ஒரு கேள்விதான்.

பனிமலையில் சறுக்கி விளையாடும்போது, பனிச்சறுக்கு மலை வழுவழுப்பாக இருப்பதில்லையே! சொரசொரப்பாகத்தானே இருக்கிறது. மலையில் படிந்திருக்கும் உறைபனித் துகள்கள், பிரிட்ஜிலிருந்து வெளியில் எடுக்கும் பனிக்கட்டிகள் போல வழுவழுப்பாகவா இருக்கின்றன; மணலைத் தூவி வைத்தது போல பொலபொலவென்றுதானே இருக்கின்றன? ஆனாலும் நன்றாக வழுக்குகிறதே!

இப்போது உங்களுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்திருக்கும். ஒன்று, சொரசொரப்பான பகுதிகளும் வழுக்குகின்றன. இன்னொன்று பனிக்கட்டிகள் வழுக்குவதற்குக் காரணம் வழுவழுப்பு அல்ல. வேறு என்ன காரணம்…?

பனிக்கட்டிகளில் நாம் ஏறி நடக்கும்போதும், பனிச்சறுக்குப் பலகைகளை வைத்து நாம் சறுக்கி விளையாடும்போதும் பனிக்கட்டியின் மீது தரப்படும் நம்முடைய அழுத்தம் அதிகரித்து, உறைபனிப் படிவின் வெப்பநிலை அதிகரிக்கிறது. எனவே, பனிக்கட்டிகள் விரைவாக உருகுகின்றன. வழக்கமாக ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகும் பனிக்கட்டி, மைனஸ் ஒன்று அல்லது மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் அளவில் உருக ஆரம்பித்துவிடுகிறது.

பனிச்சறுக்கு வண்டிகளையோ, பனிச்சறுக்குப் பலகைகளையோ வைத்துப் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும்போது, பனிக்கட்டிகளின் மீது அழுத்தம் அதிகரிப்பதால் அவை விரைவாக உருகத் தொடங்குகின்றன. பனிக்கட்டிகளுக்கும் பனிச்சறுக்குப் பலகைகளுக்கும் இடையே நீர் அடுக்கு உருவாகி உராய்வு குறைந்துவிடுகிறது. இதனால் பனிக்கட்டி மீது நம்மால் விரைவாக வழுக்க முடிகிறது.

இப்போது தெரிகிறதா? பனிக்கட்டிகள் வழுக்குவதற்கு அதன் வழுவழுப்பான தன்மை காரணம் அல்ல. மாறாக இந்த அழுத்தப் பிரச்சினைதான் காரணம்.

சொரசொரப்பான பனிக்கட்டிகள், வழுவழுப்பாக இருக்கும் பனிக்கட்டிகளை விட இன்னும் வேகமாக வழுக்குகின்றனவே! அதற்கு என்ன காரணம்?

மணல் போன்று காணப்படும் சொரசொரப்பான பனித்துகள்களின் முனைகள் கூர்மையாக இருக்கின்றன. எனவே, பனிச்சறுக்கு வண்டிகள் குறுகிய பரப்பில் அதிக அழுத்தத்தைச் செலுத்துகின்றன. கூறான, குறுகிய பனிப்பரப்பின் மீது அழுத்தம் செலுத்தப்படும்போது வெப்பநிலை விரைவாக அதிகரித்து, பனிக்கட்டிகள் விரைவாக உருகத் தொடங்குகின்றன. பனிச்சறுக்கு வண்டிகளுக்கும் பனிமலைக்கும் இடையே விரைவாக நீர்ப்பரப்பு உருவாகிறது. அதனால், சொரசொரப்பான பகுதிகள் வழுவழுப்பான பகுதிகளைவிட விரைவாக வழுக்குகின்றன.

பனிமலைகள் வழுக்குவதற்கு அதன் வழுவழுப்பான தன்மை காரணம் இல்லை, அழுத்தம் அதிகரிப்பதும், பனிக்கட்டிகள் உருகுவதும்தான் காரணம் என்பதும், மேலும் வழுவழுப்பான பனிக்கட்டிகளை விட, சொரசொரப்பான பனிக்கட்டிகள் விரைவாக வழுக்குவதற்கான காரணம் என்னவென்றும் இப்போது தெரிந்துவிட்டதல்லவா? அப்படியென்றால் இமயமலை முழுவதிலும் செயற்கைக் காரணிகள் மூலமாக அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, பனிக்கட்டியை உருகச் செய்தால், நீர் வளத்தைப் பெருக்கி வறட்சியைத் தடுத்துவிடலாமே! உங்கள் ஆர்வம் புரிகிறது.

அது அவ்வளவு எளிதான செயல் இல்லை.

ஒட்டுமொத்தமாகப் பனிப்பரப்பின் உருகுநிலையை அவ்வளவு எளிமையாகக் குறைத்துவிட முடியாது. ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவு கொண்ட பனிக்கட்டி மீது 100 கிலோ அளவுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் போதுதான் அதன் உருகு நிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து -1 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைக்க முடியும்.

ஒரு பெரிய பரப்பில் இவ்வளவு அதிக அழுத்தத்தை ஒரே நேரத்தில் செலுத்தக்கூடிய எந்தத் தொழில்நுட்பமும் இன்று நம்மிடம் இல்லை. கூடவே, இயற்கையின் போக்கில் குறுக்கிடுவது பேராபத்தையே ஏற்படுத்தும்.

அப்புறம், இந்த அழுத்தம் அதிகரிப்பதால் வழுக்குவது என்பது பனிக்கட்டிக்கு மட்டுமே பொருந்தும். கழுவி விட்ட மொசைக் தரையில் வழுக்கி விழுவதற்கும், குளியலறையில் வழுக்கி விழுவதற்கும் காரணம் தரைக்கும், நம் பாதத்துக்கும் இடையே நேரடியான உராய்வு குறைவாக இருப்பதுதான்.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x