Published : 05 Sep 2018 10:35 AM
Last Updated : 05 Sep 2018 10:35 AM
முன் மூளை எனும் பெருமூளையைத் தெரிந்துகொண்டோம். நடுமூளை (Mid brain) என்பது பெருமூளைக்கு அடியிலும், தண்டுவடத்துக்கு மேல்முனையிலும் அமைந்துள்ளது. பின் மூளை (Hind brain) என்பது நடு மூளைக்கு அடியில் ஒளிந்திருக்கும் சிறுமூளை (Cerebellum), மூளைப் பாலம் (Pons), முகுளம் (Medulla oblongata) ஆகிய அமைப்புகள் கொண்ட பகுதி.
நடுமூளை, மூளைப் பாலம், முகுளம் ஆகிய பகுதிகள் கொண்டது, ‘மூளைத்தண்டு’ (Brain stem). பெருமூளைக்கு உதவ, அதற்கு அடியில் மூளைத்தண்டுக்கு மேல் முனையில் தலாமஸும் ஹைப்போதலாமஸும் உள்ளன. அதோடு பிட்யூட்டரி சுரப்பியும் பைனியல் சுரப்பியும் இங்குதான் இருக்கின்றன.
நமக்கு ஒரு ஜோடி தலாமஸ் இருக்கிறது. இது, உடல் உணர்ச்சிகளைத் தொகுத்தும் பகுத்தும் உணரக்கூடிய பகுதி. இது மட்டும் இல்லையென்றால், பெருமூளை ரொம்பவே குழம்பிப் போகும். இதை மூளைக்குள் இருக்கும் ஒரு ‘தொலைபேசி நிலையம்’ என்று வர்ணிக்கலாம்.
எப்படி ஒரு தொலைபேசி நிலையத்திற்கு வந்து சேரும் அழைப்புகள் பகுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, அவை செல்ல வேண்டிய தொலைபேசி எண்களுக்குச் சரியாக அனுப்பப்படுகின்றனவோ, அதுமாதிரி நம் புலன்களிலிருந்து தலாமஸுக்கு வரும் செய்திகள் அனைத்தும் அலசப்பட்டு கண்ணுக்கு, காதுக்கு, ருசிக்கு, தொடுதலுக்கு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பெருமூளையின் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக, தோழி தொடுவதை ரசிக்கிறீர்கள்; தம்பி கிள்ளும்போது ‘ஸ்..ஆ.. வலிக்கிறது’ என்கிறீர்கள்.
இந்த இரண்டையும் வித்தியாசப்படுத்திக் காண்பிப்பது தலாமஸ்தான். நம்மை சுயநினைவுடனும் எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வைப்பது, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது எல்லாமே தலாமஸ் செய்யும் வேலைதான். தலாமஸ் மட்டும் வேலை நிறுத்தம் செய்துவிட்டது என்றால், ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கத்துக்குச் சென்று விடுவோம்.
தலாமஸுக்கும் மூளைத்தண்டுக்கும் நடுவில் ஒரு ஜோடி ‘ஹைப்போதலாமஸ்’ ஒளிந்திருக்கிறது. இது ஒரு வாதுமை அளவில்தான் இருக்கிறது. ஆனால், இதுதான் மூளையிலேயே மிகவும் துடிப்பானது. உடலின் உயிர்க்கடிகாரம் இங்குதான் உள்ளது. இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் தண்ணீரின் அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது.
உடல் வெப்பம், பசி, தாகம், உறக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதற்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நமக்குப் பசிக்காது; தாகம் எடுக்காது. அதுபோல், உடலுக்குக் காய்ச்சல் வந்தால், இந்தப் பகுதி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். இவை மட்டுமல்லாமல், பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டிவிட்டு, பலதரப்பட்ட ஹார்மோன்களையும் சுரக்கச் செய்வதும் இதுதான்.
பெருமூளைக்கு அடிப்புறத்தில் தலாமஸுக்கு அருகில் ‘அடிவார நரம்பு முடிச்சுகள்’ (Basal ganglia) உள்ளன. இவை கண் அசைவு, கற்றல் திறன், அறிவு சார்ந்த நிலை போன்ற பலவற்றைக் கவனிப்பது மட்டுமின்றி விரல்களில் ஏற்படும் நுட்பமான அசைவுகளையும் கட்டுப்படுத்துகின்றன.
உதாரணமாக, கையில் பேனா பிடிப்பது, எழுதுவது, வரைவது போன்ற அசைவுகளைக் கவனிப்பது இவைதான். இவற்றில் பாதிப்பு ஏற்படுமானால், டம்ளரைக் கூடப் பிடிக்க முடியாத அளவுக்குக் கை விரல்களில் நடுக்கம் ஏற்படும். தாத்தா, பாட்டிகளுக்கு ‘உதறுவாதம்’ (Parkinson’s disease) வருவது இப்படித்தான்.
நடுமூளை என்பது பெருமூளை, தலாமஸ், ஹைப்போதலாமஸ் மற்றும் அதனடியில் இருக்கும் மூளையின் மற்ற பகுதிகளையும் இணைக்கிற பாலமாக இருக்கிறது. மூளையின் மூன்று பகுதிகளில் மிகவும் சிறியது இதுதான். இது தன்னிச்சையாகச் சில செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்றாலும் பார்வைக்கும் செவி உணர்வுக்கும் அதிகம் உதவுகிறது.
முக்கியமாக, நாம் பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்யும்போது எதிரில் நகரும் காட்சிகளைப் பார்ப்பதற்கு ஏற்ப கண்ணில் ‘விழிப்பாவை’யின் (Pupil) அளவைக் கட்டுப்படுத்தி அந்தக் காட்சிகளை நமக்குத் தெரிவிப்பது இதுதான்.
சிறுமூளை என்பது பின்மூளையில் பெருமூளைக்கு அடிப்புறத்தில் இருக்கிறது. இது பார்ப்பதற்குக் குடுமிபோல் இருக்கிறது. இதுவும் பெருமூளைபோல் வலது, இடது என இரண்டு அரைக்கோளங்களைக் கொண்டுள்ளது. இதனுள்ளும் வலது பக்க நரம்புகள் இடது பக்கத்துக்கும் இடது பக்க நரம்புகள் வலது பக்கத்துக்கும் தடம் மாறிச் செல்கின்றன.
நாம் நிமிர்ந்து நிற்கிறோம்; நடை தள்ளாடாமல் நேர்கோட்டில் நடக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் சிறுமூளைதான். இது தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் சாத்தியப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தசைகள் இயங்கும்போது, அவற்றை ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதும் சிறுமூளைதான். உதாரணமாக, ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் ஓடும்போது கை, கால் தசைகள் மட்டுமல்லாமல், மார்புத் தசைகளும் வயிற்றுத் தசைகளும் வேகமாக இயங்க வேண்டும். அந்த இயக்கத்தைக் கவனிப்பது சிறுமூளை.
மூளைத்தண்டின் கடைசிப் பகுதி, முகுளம். ஆனாலும், நாம் உயிர் வாழத் தேவையான இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், குடலியக்கம் போன்ற அதிமுக்கியமான உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது இதுதான். உணவை மெல்லுதல், விழுங்குதல், உமிழ்நீர் சுரத்தல், இருமல், தும்மல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் சிறப்பு மையங்களும் இதில்தான் உள்ளன.
உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ, தலைசுற்றல் வந்தாலோ வாந்தி ஏற்படுகிறது அல்லவா? அது ஏன்? வாந்திக்கான சிறப்பு மையம் முகுளத்தில்தான் உள்ளது. ‘உணவோ, நஞ்சோ, குடலில் இருப்பது வெளியேறினால்தான் நல்லது’ என வயிறு மூளைக்குத் தகவல் தெரிவித்தால், அது முகுளத்தில் உள்ள வாந்தி மையத்தைத் தூண்டி வாந்தி ஏற்படச் செய்கிறது.
மூளைப் பாலம் என்பது நடுமூளையையும் முகுளத்தையும் இணைக்கிற நரம்புப் பாதை. அதோடு சிறுமூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இதுதான் இணைக்கிறது; உறக்கத்துக்கும் சுவாசத்துக்கும் துணைபுரிகிறது.
எல்லாவற்றுக்கும் உள்ளே, மூளைத்தண்டுக்குள் முகுளத்திலிருந்து நடுமூளைவரை ‘ரெட்டிகுலர் அமைப்பு’ உள்ளது. ‘நாம் உறங்கும்போதும் விழித்திருக்கிற காவலாளி’ என்று இதைச் சொல்லலாம். ஏனெனில், நம்மை உறங்க வைப்பதும், உறக்கத்தைக் கட்டுப்படுத்தி விழிக்க வைப்பதும் இதுதான்.
மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் 12 ஜோடி கபால நரம்புகளில் வாசனைக்கும் பார்வைக்குமான கபால நரம்புகள் மட்டும் பெருமூளையில் இருந்து கிளம்புகின்றன. மீதி 10 ஜோடி நரம்புகள் மூளைத் தண்டிலிருந்துதான் கிளம்புகின்றன.
லிம்பிக் சிஸ்டம், ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா… இவை எல்லாம் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.
(அடுத்த வாரம் நிறைவடையும்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT