Published : 02 Apr 2014 02:40 PM
Last Updated : 02 Apr 2014 02:40 PM
இரண்டு பயணிகள் மாலை நேரத்தில் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கிராமத் தலைவரிடம் சென்றார்கள். “நாங்கள் இன்று இரவு இந்த கிராமத்தில் தங்கலாமா?” என்று கேட்டார்கள்.
“தாராளமாகத் தங்கலாம். அந்நியர்கள் தங்குவதற்கு இங்கே ஒரு வீடு இருக்கிறது. அங்கே நீங்கள் சாப்பிடலாம், தூங்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊரில் ஒரு பழைய பழக்கம் இருக்கிறது. அந்நியர்கள் தங்கும் வீட்டில் தூங்குபவர்கள் குறட்டைவிடக் கூடாது. குறட்டை விடும் ஆளை நாங்கள் கொன்றுவிடுவோம்!” என்று தலைவர் சொன்னார்.
பயணிகள் இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே அவர்களுக்கு சிறப்பான இரவு உணவு அளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் படுத்தார்கள். மிகுதியான களைப்பால் படுத்த உடனே தூக்கம் வந்துவிட்டது.
சற்று நேரத்திற்குப் பிறகு பயணிகளில் ஒருவர் குறட்டை விடத் தொடங்கினார்:
“கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...”
மற்றொருவர் இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். அவர், “மக்கள் இந்த குறட்டை ஒலியைக் கேட்டால் இவரைக் கொன்றுவிடுவார்களே! எப்படி இவரைக் காப்பாற்றுவது?” என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றியது. அதன்படி அவர் பாடத் தொடங்கினார்.
கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...
ஒன்றாய் வந்தோம் பயணியர் இருவர்
சென்றே கிராமத் தலைவரைப் பார்த்தோம்
அருமை உணவை அன்புடன் அளித்தார்
இங்கே தங்க இடமும் கொடுத்தார்!
கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...
இந்த கிராமம் இனிய கிராமம்
இந்த மக்கள் நல்ல மக்கள்
ஆடும் மாடும் நாயும் பூனையும்
அன்பு காட்டி மகிழுது பாரீர்!
கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...
என்று குறட்டை ஒலியின் லயத்திற்கேற்ப அவர் பாடினார். விட்டு விட்டுக் குறட்டை ஒலிக்கும்போது, அவரும் இடைவிட்டுப் பாடினார்.
பாட்டைக் கேட்டு கிராமத்தினர் விழித்தார்கள்.
அந்தப் பாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாட்டின் ஓசையில் குறட்டை ஒலி கேட்கவில்லை.
இவ்வளவு அற்புதமான பாட்டை அவர்கள் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை. மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள், பாட்டுக்கு ஏற்றபடி நடனமாடத் தொடங்கினார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள எல்லோரும் நடனமாடினார்கள், சேர்ந்து பாடினார்கள். கிராமத் தலைவரும் நடனமாடினார்!
பொழுது விடியும்வரை பயணி களில் ஒருவர் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். இன்னொருவர் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார். கிராமத்தினரும் இரவு முழுக்க இடைவிடாமல் ஆடினார்கள், பாடினார்கள்.
மறு நாள் காலையில் இரண்டு பயணிகளும் சென்று கிராமத் தலைவரைப் பார்த்து விடைபெற்றார்கள். தங்களுக்கு உதவி செய்ததற்காக நன்றி சொன்னார்கள். கிராமத் தலைவர் அவர்களை வாழ்த்தினார். அத்துடன் அவர்களுக்கு அன்பளிப்பாக நிறையப் பணம் கொடுத்தார்.
“இதில் உள்ள பணத்தை நீங்கள் இருவரும் எடுத்துக்கொள்ளுங்கள். நேற்றிரவு நீங்கள் எங்களைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியதற்காக எங்கள் பரிசு இது! நாங்கள் எல்லாம் நேற்று நன்றாகப் பாடினோம், ஆடினோம்! உங்களுக்கு மிகவும் நன்றி!” என்று சொன்னார்.
பணத்தை வாங்கிக்கொண்டு பயணிகள் இருவரும் கிராமத்தை விட்டுச் சென்றார்கள். போகும் வழியில் இருவருக்கும், பணத்தைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக சச்சரவு ஏற்பட்டது.
குறட்டைவிட்டுத் தூங்கிய நண்பர், “எனக்குத்தான் அதிகப் பணம் வேண்டும். நேற்று நீங்கள் நன்றாகப் பாடுவதற்குக் காரணம் என் குறட்டை ஒலிதானே? நான் குறட்டை விடாமல் இருந்திருந்தால் நீங்கள் பாடியிருக்க முடியுமா” என்று கேட்டார்.
இன்னொருவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்கள் குறட்டையின் காரணமாக நேற்றிரவே உங்கள் கதை முடிந்திருக்கும். என் பாட்டுதான் உங்கள் உயிரைக் காப்பாற்றியது. இதற்காக நீங்கள் எனக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். எனக்குத்தான் அதிகப் பணம் வேண்டும்!”
அவர்கள் இது குறித்து வாக்குவாதம் செய்துகொண்டே சென்றார்கள். குழந்தைகளே, நீங்கள் இந்தப் பிரச்சினையைக் கொஞ்சம் தீர்த்து வைக்கிறீர்களா?
ஓவியம்: ராஜே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT