Published : 02 Apr 2014 03:07 PM
Last Updated : 02 Apr 2014 03:07 PM
வயிற்றில் பையுடைய இந்தப் பாலூட்டிகள், ஆஸ்திரேலியா கண்டத்திலும் நியூ கினியா பிரதேசத்திலும் அதிகம் காணப்படுகின்றன.
கங்காருவில் நான்கு வகைகள் உண்டு. ரெட் கங்காரு, ஈஸ்டர் க்ரே கங்காரு, வெஸ்டர்ன் க்ரே கங்காரு மற்றும் ஆண்டிலோப் கங்காரு.
கங்காரு இரண்டு கால்களை காற்றில் உயர்த்திக் குதிக்கும்போது வேகமாக ஓடும். நான்கு கால்களையும் தரையில் வைத்து நடக்கும்போது மெதுவாகவே நடக்கும்.
கங்காருவின் கால்கள் மிக சக்தி வாய்ந்தவை. அந்த கால்களால் தாக்கவும் முடியும்.
கங்காரு தனது உயரத்தை விட மூன்று மடங்கு உயரம் தாவிக் குதிக்கும் வல்லமை படைத்தது. கங்காருவுக்கு நீந்தும் திறன் உண்டு.
கங்காரு புல்லை விரும்பி உண்ணும்.
குட்டிக் கங்காருகள் ‘ஜோய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
ரெட் கங்காரு வகைதான் வயிற்றில் பையுடைய உயிரினங்களில் பெரியது.
காட்டில் வாழக்கூடிய கங்காரு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வாழும்.
ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவையான கன்டாஸ், கங்காருவை தன் சின்னமாக வைத்துள்ளது.
கங்காரு, தாவரங்களில் ஈரத்தன்மை அதிகம் உள்ள தாவரங்களைச் சாப்பிடும். அப்போதுதான் நீண்டநேரம் அதனால் நீர் இல்லாமல் இருக்க முடியும்.
ஆடு, மாடுகளைப் போல கங்காருவும் உணவை அசைபோடும் பண்பு கொண்டது. முதலில் வேகவேகமாக உணவை விழுங்கிவிடும். பின்னர் மீண்டும் அந்த உணவை ஆசுவாசமாக வயிற்றிலிருந்து வரவழைத்து மெதுவாக மென்று விழுங்கும்.
கங்காருவின் பற்கள் விசேஷமானவை. பழுதுபட்ட கடைவாய்ப் பற்கள் முழுமையாக உதிர்ந்து, மீண்டும் மீண்டும் வளரும் தகவமைப்பை பெற்றுள்ளன.
கங்காருவின் வால் தசை வலு கொண்டது, நீளமானது. கங்காரு வேகமாக ஓடிக்கொண்டே திரும்பும்போது விழாமல் சமன்படுத்தும் வேலையை இந்த வால்தான் செய்கிறது.
கங்காருகள் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 கங்காருகள் வரை இருக்கும். ஆண் விலங்குகளுக்குள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சண்டையும் நடக்கும்.
ஏதாவது அபாயச் சூழலை உணர்ந்தால், ஒரு கங்காரு தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து மற்ற விலங்குகளை எச்சரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT