Published : 14 Mar 2018 11:19 AM
Last Updated : 14 Mar 2018 11:19 AM
வாய்க்குள் குகைபோல் அமைந்திருக்கிறது, தொண்டை (Pharynx). மூக்கு, வாய் இவற்றின் பின்பகுதிகள் இணையுமிடம் இது. உணவுக் குழாயின் தொடக்கமும் இதுதான்.
காண்பதற்குக் குழல் போன்றிருக்கும் தொண்டை, நாம் உண்ணும் உணவை வாயிலிருந்து உணவுக்குழாய்க்குத் தள்ளுகிறது; அதோடு, மூச்சுக்கும் பேச்சுக்கும் தேவையான காற்றுப்பாதையாகவும் செயல்படுகிறது.
மனிதத் தொண்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூக்கின் பின்பகுதி இணையும் இடம் மூக்குத் தொண்டை (Nasopharynx); வாயின் பின்பகுதி இணையும் இடம் வாய்த் தொண்டை (Oropharynx) குரல்வளை உள்ள கீழ்ப் பகுதி குரல்வளைத் தொண்டை (Laryngopharynx).
தொண்டை ஆறு தசைகளால் ஆனது. இவற்றுள் மூன்று தசைகள் நெடுக்குத் தசைகளாகவும், மூன்று தசைகள் குறுக்குத் தசைகளாகவும் அமைந்துள்ளன. வாய்த் தொண்டையும் மூக்குத் தொண்டையும் இணையும் இடத்தில் ‘தொண்டை இணையுறுப்பு’ (Pharyngeal isthmus) உள்ளது.
உ
தொண்டையும் உணவுக்குழாயும் இணையும் இடத்தில், மூச்சுக்குழாய் முன்பக்கமாகவும், உணவுக்குழாய் பின்பக்கமாகவும் தனித்தனியாக அமைந்துள்ளன. அதனால்தான் உணவானது உணவுக்குழாய்க்குள்ளும், காற்றானது மூச்சுக்குழாய்க்குள்ளும் தனித்தனியாகச் செல்கின்றன.
வாயின் பின்பகுதி தொண்டையுடன் சேருமிடத்தில், அண்ணத்தின் கீழ், வாயின் இரு ஓரங்களிலும் உள்ள பள்ளங்களில் ‘டான்சில்கள்’ இருக்கின்றன.
டான்சில் என்பது நிணத்திசு; நோய்ப் பாதுகாப்புக்குத் தேவையானது. தொண்டைப் பகுதியைச் சுற்றி நிறைய டான்சில்கள் உள்ளன. தொண்டையை ஒரு குகை எனச் சொன்னோமல்லவா? அந்தக் குகையின் வாசலில், கீழ்ப்பகுதியாக நாக்கும், மேல் பகுதியாக அண்ணமும் உள்நாக்கும் உள்ளன. இதன் பக்கவாட்டில் இருபுறமும் வாய்ச் சுவர்கள் உள்ளன. உள்நாக்கைக் கடந்து சென்றால், உள்ளே இன்னொரு பகுதி ஒரு கூரைபோல் இருக்கிறது. இது தொண்டையின் பின்பகுதி.
இந்தக் குகை வாசலின் இருபக்கச் சுவர்களில் உள்ள நிணத்திசுக்களுக்கு அண்ண டான்சில்கள் என்று பெயர். நாக்கின் மேல் பகுதியில் சிறிதளவே இருக்கும் நிணத்திசுக்கள், நாக்கு டான்சில்கள். தொண்டையின் கூரையில் இருப்பவை, தொண்டை டான்சில்கள். மேலும், மூக்கின் பின்பகுதி தொண்டையுடன் இணைகிற இடத்தில் அடினாய்டு டான்சில் உள்ளது.
டான்சில்களின் வேலை என்ன?
வாய் வழியாக வரும் உணவிலும், தண்ணீரிலும், மூக்கு வழியாக வரும் காற்றிலும் நமக்குத் தெரியாமல் எண்ணற்ற கிருமிகள் உடலுக்குள் நுழையப் பார்க்கும். அவ்வாறான நோய்க் கிருமிகளையும் உடலுக்கு ஒவ்வாத வேற்றுப் பொருள்களையும் அடையாளம் கண்டு, அவற்றுடன் போராடி, அவற்றை வெளியேற்றும் அரும்பணியை டான்சில்கள் மேற்கொள்கின்றன. இதனால்தான், டான்சில்களை ‘நோய்ப் பாதுகாப்புப் படைகள்’ என்று சொல்கிறோம்.
இது எப்படிச் சாத்தியப்படுகிறது?
டான்சில்கள் கூர்மையான சென்சார்களாகச் செயல்படுவது ஒரு முக்கியக் காரணம். அதாவது, உடலுக்கு ஒவ்வாத அந்நியப் பொருள்கள் நுழைவதாக அவற்றுக்குச் சந்தேகம் வருமானால், உடனடியாக, அவற்றிலிருந்து சிறு ‘சாம்பிள்’ எடுத்து ஆராய்ந்து, அது குறித்த தகவல்களை மூளைக்கு அனுப்பி, உடலுக்குள் அவற்றை அனுப்பலாமா, வேண்டாமா எனக் கேட்கின்றன. அனுப்பக் கூடாது என்றால், உடனடியாக அவற்றை அழித்து வெளியேற்றி விடுகின்றன.
ஒரு வாயிற்காவலர் அலுவலகத்துக்கு வரும் புதிய நபரைத் தீர விசாரித்து, அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் ‘இன்ன மாதிரியான ஆள் வந்திருக்கிறார்; உள்ளே அனுப்பலாமா?’ என அலைபேசியில் கேட்டு உள்ளே அனுப்புவதைப் போலத்தான் டான்சில்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, பலதரப்பட்ட நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உதவுவதற்குதான் இயற்கை நம் தொண்டையில் பலதரப்பட்ட டான்சில்களை அமைத்துள்ளது.
குழந்தைகளுக்கு டான்சில்கள் எளிதில் வீங்கிவிடுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் தெரியுமா? டான்சில்கள் நோய்க் கிருமிகளை ஆராயும்போது, அந்தக் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்தவைகளாக இருக்குமானால், முதலில் டான்சில்கள் அந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுவிடும். அதன் விளைவால், வாய்ச் சுவர்களில் உள்ள டான்சில்கள் வீங்கிவிடும். காய்ச்சல், தொண்டை வலி, உணவை விழுங்குவதில் சிரமம், காது வலி, கழுத்தில் நெறிக்கட்டுதல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.
முதல்முறையாக டான்சில்கள் வீங்கும்போது, சரியான சிகிச்சை பெற்றுக்கொள்பவர்களுக்கும், தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறவர்களுக்கும் டான்சில்கள் மீண்டும் வீங்குவதில்லை. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களுக்கும், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பண்டங்கள், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து உடனே சாப்பிடப்படும் பதார்த்தங்கள் போன்றவற்றால், டான்சில்களின் ரத்தக்குழாய்கள் சுருங்கிவிட, அவற்றின் நோய்ப் பாதுகாப்புத் தன்மையும் குறைந்துவிடும்.
அப்போது கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகி, அடிக்கடி டான்சில்களைப் பதம் பார்க்கும். அதன் விளைவால், டான்சில்கள் அடிக்கடி வீங்கித் தொல்லை கொடுக்கும். அப்போது, அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
இந்தப் பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்படுவதால், பெற்றோர் பயந்துபோவார்கள். குழந்தைக்கு டான்சில் அறுவைசிகிச்சை தேவையா, இல்லையா என்று குழம்பிப் போவார்கள். ஆனால் அடிக்கடி தொல்லை கொடுக்கும் டான்சில் வீக்கத்துக்கு, அறுவை சிகிச்சைதான் தீர்வு.
அப்படியானால் டான்சில் நீக்கத்துக்குப் பிறகு குழந்தைக்கு நோய்ப் பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும்? குழந்தைக்கு ஐந்து வயதுவரைக்கும்தான் நோய்ப் பாதுகாப்பில் டான்சில்கள் முக்கியமாக ஈடுபடுகின்றன. அதற்குப் பிறகு உடலிலுள்ள மற்ற நிணத்திசுக்கள் அந்தப் பாதுகாப்புப் பணியைப் பகிர்ந்துகொள்கின்றன. எனவே, டான்சில்களை அகற்றிய பிறகும், குழந்தைக்கு எப்போதும்போல் நோய்ப் பாதுகாப்பு கிடைக்கும். பயப்படத் தேவையில்லை.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT