Last Updated : 21 Mar, 2018 10:53 AM

 

Published : 21 Mar 2018 10:53 AM
Last Updated : 21 Mar 2018 10:53 AM

உடல் எனும் இயந்திரம் 15: குரல் பெட்டி

பேசுவதற்கு, பாடுவதற்கு, கத்துவதற்கு, கதறுவதற்கு, இருமுவதற்கு எனக் குரல் தொடர்பான எல்லாச் செயல்களுக்கும் துணை நிற்பது, ‘குரல் பெட்டி’ (Voice box). மருத்துவத்தில் குரல்வளை (Larynx) என்று பெயர். இதன் வழியாகத்தான் நுரையீரலுக்குக் காற்று செல்கிறது.

தொண்டையின் மத்தியப் பாகத்தில், உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும் தொடங்கும் இடத்தில், தொண்டைக்கு முன்பக்கத்தில், மூச்சுக்குழாயின் ‘வாசற்கதவு’போல் குரல்வளை இருக்கிறது. இந்தக் கதவு திறக்கப்படும்போது V வடிவத் துளையை ஏற்படுத்துகிறது. இதற்குக் ‘குரல்வளைத் துளை’ (Glottis) என்று பெயர்.

இதன் இருப்பிடத்தை உடலின் வெளிப்பக்கத்தில் இருந்தும் அறியலாம். பெரியவர்களின் கழுத்தில், முன்பக்கத்தில், மையக்கோட்டில், ஒரு முக்கோண மேடு துருத்திக்கொண்டு தெரியுமே, அதுதான் குரல்வளை உள்ள பகுதி. இதை ‘ஆதாமின் ஆப்பிள்’ (Adam’s Apple) என்றும் கூறுகிறார்கள். இது ஆண்களுக்குப் பெரிதாகவும், பெண்களுக்குச் சிறிதாகவும் இருப்பதால், ஆண்களுக்கு மட்டுமே இது வெளிப்பக்கத்தில் தெரியும்; பெண்களுக்குத் தெரியாது.

shutterstock_250113988 [Converted]_colright

குரல்வளையானது குருத்தெலும்புகள் (Cartilages), பிணையங்கள் (Ligaments), தசைகள் (Muscles) ஆகியவற்றால் பின்னப்பட்டுள்ள சிறு உறுப்பு. ‘ஹையாட்’ எலும்பு ‘ (Hyoid bone) இதைத் தாங்கிக்கொள்கிறது. பார்ப்பதற்கு டிபன் பாக்ஸ் மாதிரியான வட்ட வடிவப் பெட்டி இது! இலைபோலிருக்கும் குரல்வளை மூடி (Epiglottis) இதை மூடிக்கொள்கிறது. இதற்குக் கீழ்த் தட்டு இல்லை. இதன் கீழ் முனை உள்ளீடு இல்லாமல் குழாய்போல் தொடர்கிறது. அதுதான் மூச்சுக் குழாய் (Trachea).

குரல்வளை மூடியைத் திறந்து பார்த்தால், வீணையில் நாண்கள் இருப்பதைப்போல், குரல்வளையின் பக்கவாட்டுச் சுவர்களில், வலப்பக்கம் ஒன்றும், இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு குரல் நாண்கள் (Vocal cords) இருக்கின்றன. குரல்வளைத் தசைகளால் (Vocalis) ஆன இவைதாம் நமக்குக் குரல் தரும் கொடையாளர்கள்.

குரல் நாண்கள் இரண்டு நிலைகளில் இருக்கும். இரண்டும் அருகருகே ஒட்டி இருப்பது ஒரு நிலை. இது குரல் நாண்களின் மூடிய நிலை. இரண்டும் தள்ளி இருப்பது அடுத்த நிலை. இது அவற்றின் அகன்ற நிலை. நாம் சாதாரணமாக மூச்சுவிடும்போது இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில், அதாவது, பாதித் திறந்த நிலையில் அவை இருக்கின்றன.

அவற்றின் நிலைகளைக் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் சாதாரணமாக உள்ளிழுக்கப்படும் காற்று, தொண்டை வழியாக வரும்போது, குரல்வளை மூடித் திறக்கிறது. அப்போது குரல் நாண்கள் பாதி திறந்திருப்பதால், காற்று மூச்சுக்குழாய்க்குள் செல்கிறது. இது உட்சுவாசம் (Inspiration).

அதுபோல், நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்று, குரல்வளையைக் கடந்து தொண்டை, மூக்கு, வாய் வழியாக வெளியில் செல்கிறது. இது ‘வெளி சுவாசம்’ (Expiration). இது நம்மை அறியாமலேயே ஒவ்வொரு நொடியும் இயல்பாக நடந்துகொண்டிருக்கும். நாம் இழுத்து மூச்சுவிடும்போது, குரல்நாண்கள் நன்கு அகன்று, நிறைய காற்றை உள்ளே விடுகின்றன.

குரல் எழுவதற்குக் குரல் நாண்கள் இருந்தால் மட்டும் போதாது. சுவாசக் காற்றும் தேவை. காரணம், குரல் எழுவது என்பது புல்லாங்குழல் தத்துவத்தில் நிகழ்கிறது. எப்படிப் புல்லாங்குழலில் காற்றை ஊதும்போது, அதன் துளைகளை விரல்களால் மூடித் திறந்து காற்றின் அளவை மாற்றும்போது இசை பிறக்கிறதோ, அதுபோலவே குரல்வளை வழியாக காற்று வெளியில் வரும்போது, குரல் நாண்கள் அசைந்து காற்றுக்கு வழிவிடும் விதத்தைப் பொறுத்து, ஓசை எழுகிறது. நாக்கு, அண்ணம் மற்றும் உதடுகள் அந்த ஓசையை மாற்றியமைக்கும்போது பேச்சாகவும், பாட்டாகவும், அழுகையாகவும், அலறலாகவும் நமக்குக் கேட்கிறது.

shutterstock_730210615 [Converted]_col

பொதுவாக, குரல்நாண்களின் நீளம், அவற்றின் நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்து குரலின் அடர்த்தி, தன்மை மாறும். பதின்பருவத்துக்குப் பிறகு ஆண்களுக்குக் குரல்நாண்களின் நீளம் அதிகம். எனவே, அவர்களுக்குக் குரல் கனமாக இருக்கிறது. பெண்களுக்கு இவற்றின் நீளம் சிறிது குறைவு. எனவே, அவர்களுக்குக் குரல் மென்மையாக இருக்கிறது.

அதிகமாகக் கத்திப் பேசினால், குரல் நாண்கள் அதிரும். அப்போது குரல் கரகரப்பாகும். அதுபோல், குரல் நாண்களில் கிருமி, சளி போன்ற அந்நியப்பொருள்கள் உறுத்திக்கொண்டே இருந்தால், அவற்றில் அழற்சி ஏற்பட்டால், அவை வேகமாக அசையும். அப்போது நுரையீரலிலிருந்து காற்று, சளி போன்றவை வேகமாக வெளியேறும். அதுதான் இருமல்.

சரி, தொண்டை வழியாகத்தானே உணவு, தண்ணீர் உள்ளே செல்கிறது. அது குரல்வளையைத் தாண்டி மூச்சுக்குழலுக்குள் சென்றுவிட்டால் என்ன ஆகும்? மூச்சுக்குழாய் அடைத்துக் கொள்ளும்; மூச்சு விடமுடியாது. பயப்படாதீர்கள். அப்படி ஆகாமல் குரல்வளை மூடி தடுத்துவிடுகிறது.

உணவோ தண்ணீரோ உள்ளே வரும்போது, குரல்வளை மூடி குரல்வளையை நன்றாக மூடிக்கொள்கிறது. குரல் நாண்கள் முழுவதுமாக மூடிய நிலையில் இருக்கின்றன. மூச்சுக்குழாய்க்குள் அவை நுழைய வழி இல்லை. அதனால், திறந்திருக்கும் உணவுக்குழாய்க்குள் அவை சென்றுவிடுகின்றன.

மிகவும் அவசரமாகவோ, பேசிக்கொண்டோ சாப்பிட்டால், குரல்வளை மூடி பாதி திறந்த நிலையில் இருக்கும். அப்போது உணவோ தண்ணீரோ குரல்வளைக்குள் வந்து, மூச்சுக்குழாய்க்குள் நுழைந்துவிடும். உடனே ஓர் அனிச்சைச்செயல்போல் இருமல் தொடங்கிவிடும். இதைத்தான் ‘புரை ஏறுதல்’ என்கிறோம். இதைத் தவிர்க்கவே ‘சாப்பிடும்போது பேசக்கூடாது; அவசரமாகச் சாப்பிடக்கூடாது’ என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான பாலூட்டிகளுக்குக் குரல்வளை ஒன்றுபோலவே இருக்கிறது; அளவு மட்டும் மாறுகிறது. பறவைகளுக்குக் குரல்வளையில் குரல் எழுப்புவதில்லை. ‘சிரின்ஸ்’ (Syrinx) எனும் உறுப்புதான் குரல் எழுப்புகிறது.

(இன்னும் அறிவோம்)
 கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x