Published : 21 Mar 2018 10:53 AM
Last Updated : 21 Mar 2018 10:53 AM
தண்ணீர் மட்டும்தான் தாராளமாகக் கிடைக்கிறது. பிறகு ஏன் அதைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், டிங்கு?
– கு. லிபிவர்ஷ்னி, 8-ம் வகுப்பு, சமயபுரம்.
ஒரு காலத்தில் தண்ணீர் தாராளமாகத்தான் கிடைத்துக்கொண்டிருந்தது. இன்று பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பொய்த்துவருகிறது. இருக்கும் நீர்நிலைகளையும் மனிதர்கள் அசுத்தப்படுத்திவிட்டனர். இதனால் பாதுகாப்பான குடிநீருக்குத் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. உலகின் தண்ணீர் இல்லாத முதல் நகரம் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனாக இருக்கலாம் என்று கடந்த மாதம் செய்திகள் வந்தன. நீங்கள் படிக்கவில்லையா, லிபிவர்ஷ்னி? ஆப்பிரிக்காவின் காம்பியா, தான்சானியா போன்ற நாடுகள் பல ஆண்டுகளாகக் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் இருக்கின்றன. ஒரு குடம் தண்ணீருக்காகப் பெண்கள் தினமும் 16 கி.மீ. தூரம் நடக்கிறார்கள்!
க்சிகோ, ஈரான், சோமாலியா போன்ற நாடுகளில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. இந்தியாவில் 21 நகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பெரும்பாலான நகரங்களில் குடிதண்ணீரைப் பணம் கொடுத்துதான் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதைத் தவிர, நமக்கு வேறு வழியில்லை. கசியும் குழாய்களைச் சரிசெய்யுங்கள்.
வாளியில் தண்ணீர்ப் பிடித்து அளவோடு குளியுங்கள். குழாயைத் திறந்துவிட்டு, பல் துலக்காதீர்கள். கழிவு நீரைத் தோட்டத்துக்குப் பயன்படுத்துங்கள். மழை நீரைச் சேமியுங்கள். முடிந்தவரைத் தண்ணீர் சிக்கனத்தைக் கடைபிடிப்போம். மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்வோம். அதுதான் உலகத் தண்ணீர் தினத்துக்கு (மார்ச் 22) நாம் செய்யும் எளிய முயற்சி.
இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் வலது கைப் பழக்கமுள்ளவர் களுக்காகவே தயாரிக்கப்படும் சூழலில், இடது கைப் பழக்கமுள்ளவர்கள் வாகனங்களை எவ்வாறு கையாள்வார்கள்?
– நு. தன்னூன், 9-ம் வகுப்பு, டவுட்டன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
உங்கள் கேள்விக்காக இடது கைப் பழக்கமுள்ளவர்களிடம் பேசினேன். சின்ன வயதிலிருந்தே இடக் கையைப் பயன்படுத்திவருவதால், வலக் கைக்காரர்களைப் போலவேவே பெரும்பாலான விஷயங்களை எளிதாகவும் இயல்பாகவும் செய்கிறார்கள். கத்திரிக்கோலால் வெட்டுவது இவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் பிரச்சினை ஏதும் இல்லை என்றே இவர்கள் சொல்கிறார்கள்.
வெளிநாடுகளில் இடது கைப் பழக்கமுள்ளவர்களுக்காகக் கத்திரிக்கோல் உட்பட சில கருவிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நம் நாட்டில் அப்படிப் பிரத்யேகமாக எதுவும் இல்லை. இங்கே இடது கையால் ஒரு செயலைச் செய்தால் அது மரியாதைக் குறைவாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரிடம் கை குலுக்கும்போது இடது கையை நீட்டுவது, பெரியவர்கள் ஏதாவது கொடுக்கும்போது இடது கையால் வாங்குவது, இடது கையால் உணவுப் பொருளைப் பங்கிட்டுக் கொடுப்பது போன்ற நேரத்தில் மற்றவர்கள் இவர்களை விமர்சிக்கும்போது மட்டுமே அசெளகரியமாக இருக்கிறது என்கிறார்கள்.
மற்றபடி வலது கைப் பழக்கமுள்ளவர்களைப்போலவே இடது கைப் பழக்கமுள்ளவர்களும் எல்லாவற்றையும் இயல்பாகச் செய்வதாகச் சொல்கிறார்கள், தன்னூன்.
எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சுவாரசியமாக உன்னால் மட்டும் எப்படிப் பதில் சொல்ல முடிகிறது, டிங்கு? மந்திரம் உன்னிடம் இருக்கிறதா?
– கே. அபிநயா, 9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
ரகசியத்தை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது. இருந்தாலும் அபிநயாவுக்காக இதைச் சொல்கிறேன். படிப்பு, அனுபவம் இந்த இரு மந்திரங்களின் மூலம்தான் நான் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இரு மந்திரங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி பதில் சொல்ல முடியும்! இவை தவிர, வேறு எந்த மந்திரமும் தந்திரமும் என்னிடம் இல்லை.
ஸ்மார்ட்போனில் விளையாடுவதிலேயே என் கவனமெல்லாம் இருக்கிறது. திட்டு வாங்காத நாளே இல்லை. திட்டு வாங்காமல் தப்பிக்க உதவி செய்வாயா, டிங்கு?
– வெ. யுவன் ஆதித்யா, 6-ம் வகுப்பு, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தருமபுரி.
உங்கள் கவனம் முழுவதும் ஸ்மார்ட் போனில் விளையாடுவதிலேயே இருப்பதாக நீங்களே சொல்கிறீர்கள். ஒரே விஷயத்தில் உங்கள் கவனம் இருப்பது, அதிலும் பொழுதுபோக்கில் இருப்பது நல்லது இல்லைதானே, யுவன் ஆதித்யா? ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு மூளையில் பாதிப்பும் மன அழுத்தமும் ஏற்படும் என்கிறார்கள்.
பொழுதுபோக்குக்காகச் சிறிது நேரம் விளையாடுவதில் தவறில்லை. ஆனால் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல், எந்தப் பயனும் இல்லாமல் கைக்கு அடக்கமான ஒரு சாதனத்துக்கு மந்திரம் போட்டதுபோல் கட்டுப்பட்டு கிடப்பது சரியா என்று யோசியுங்கள். நீங்களே அளவோடு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த ஆரம்பித்தால் உங்கள் பெற்றோர் ஏன் திட்டப் போகிறார்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT