Published : 28 Mar 2018 10:49 AM
Last Updated : 28 Mar 2018 10:49 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கோபத்தைக் குறைப்பது எப்படி?

தண்ணீரே புக முடியாத வாட்டர் ப்ரூஃப் கடிகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லேன், டிங்கு?

– ச. பாலமுருகன், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

வாட்டர் ப்ரூஃப் என்று அழைக்கப்படும் தண்ணீரே உட்புக முடியாத கடிகாரங்களே இல்லை, பாலமுருகன். ‘வாட்டர் ப்ரூஃப்’ என்ற பெயரில் இருக்கும் கடிகாரங்கள் உண்மையில் ‘வாட்டர் ரெசிஸ்டண்ட்’ கடிகாரங்களே. அதாவது தண்ணீர்த் தடுப்பு கடிகாரங்கள். நூறு சதவிகிதம் தண்ணீர் உட்புக முடியாத கடிகாரங்களை உருவாக்க இயலாது என்பதால், அமெரிக்காவில் 1960-ம் ஆண்டிலேயே ’வாட்டர் ப்ரூஃப்’ என்று அழைப்பதைத் தடை செய்துவிட்டனர்.

shutterstock_252682060 [Converted]_col

அப்படி மீறி ‘வாட்டர் ப்ரூஃப்’ கடிகாரங்கள் என்று விற்பனை செய்தால் சட்டப்படி அங்கே குற்றம். ‘வாட்டர் ரெசிஸ்டண்ட்’ கடிகாரங்களைத் தண்ணீரில் போட்டு எடுக்கலாம், கடிகாரங்களைக் கட்டிக்கொண்டே குளிக்கலாம். நீச்சல் வீரர்கள், 100 மீட்டர் ஆழம்வரை கடலுக்குள் செல்லக்கூடியவர்களுக்குச் சிறப்பான வாட்டர் ரெசிஸ்டண்ட் கடிகாரங்கள் உருவாக்கப்படுகின்றன.

பேலியோ டயட் என்றால் என்ன, டிங்கு?

– ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி. சிபிஎஸ்வி பள்ளி, கோவை.

ஆதிமனிதனின் உணவுப் பழக்கம் என்று கூறப்படுகிறது. அரிசி, கோதுமை, பருப்பு போன்ற மாவுச் சத்துள்ள (கார்போஹைட்ரேட்) தானியங்களைத் தவிர்ப்பது இந்த உணவுப் பழக்கத்தின் முக்கியமான அம்சம். இவற்றுக்குப் பதிலாக கொழுப்பு நிறைந்த இறைச்சி, கடல் உணவு, பனீர், முட்டை, வெண்ணெய், நெய், காய்கறிகள், கீரைகள், தேங்காய், பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், சில வகை பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்து, கொழுப்பை உட்கொண்டு வாழும் உணவு முறை. இந்த உணவுப் பழக்கத்தை நீங்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பேலியோ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டால், சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்வார்கள். அந்த முடிவுகளை வைத்து, உணவைப் பரிந்துரைப்பார்கள். அதன்படிதான் பேலியோவைப் பின்பற்ற வேண்டும் நேஹா.

கோபப்படாத மனிதர்கள் யாராவது இருக்க முடியுமா? உனக்குக் கோபம் வருமா? எனக்கு அதிகமாக வரும் கோபத்தை எப்படிக் குறைப்பது, டிங்கு?

–தே. சுவேதா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

அடேங்கப்பா, எத்தனை கேள்விகள்! மனிதர்களிடம் இருக்கும் பல்வேறு குணங்களில் கோபமும் ஒன்று. நியாயமான ஒரு விஷயத்துக்குக் கோபம் வருவது தவிர்க்க முடியாதது. மற்றவர்களும் அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தேவையின்றி, சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுகிறார்கள்.

shutterstock_196437737right

இது நல்லதல்ல. உடல் நலத்துக்கும் தீங்கானது. கோபமே வராத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னுடைய பல வருட நண்பர்கள் இருவர் எந்த விஷயத்துக்கும் கோபப்பட்டு பார்த்ததே இல்லை.

கோபம் வரும் சூழலிலும் ஒரு புத்தரைப்போல் அமைதி காத்துவிடுவார்கள். இந்தக் குணம் அபூர்வமானது.

இந்த நண்பர்களைபோல் இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். ஆனால் என்னால் சில நேரங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. உங்களை யார் கோபப்படுத்தினாலும் நம் பெற்றோர், நண்பர், சகோதரர், சகோதரி, உறவினர்தானே என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

அன்பு அதிகம் இருக்கும் இடத்தில் கோபம் வருவதற்குத் தயங்கும். நம் மீது யாராவது கோபப்படுவதை விரும்புவோமா? இல்லைதானே? நம்மைப்போல்தான் பிறரையும் நினைக்க வேண்டும்.

ஒருவேளை கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால், ஒரு தம்ளர் தண்ணீரைக் குடியுங்கள். அல்லது அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

அல்லது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிடுங்கள். நாளடைவில் கோபம் உங்களுக்குக் குறைந்துவிடும். தேவை இல்லாமல் கோபப்பட்டால், அந்தக் கோபத்துக்கும் மதிப்பில்லை.

நம்மைப் பற்றிய மதிப்பீடும் குறையும். அதுவே கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டால், உங்களைக் கொண்டாடுவார்கள், சுவேதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x