Last Updated : 17 Sep, 2014 01:13 PM

 

Published : 17 Sep 2014 01:13 PM
Last Updated : 17 Sep 2014 01:13 PM

பின்னோக்கிப் பறக்குமா தட்டான்கள்?

# உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள். தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள்.

# ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள்.

# தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

# தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள், ஆறு கால்கள், தலை, வயிறு, மார்பு உண்டு.

# தட்டான் பூச்சியின் உறுப்புகளிலேயே அதன் வயிறுதான் நீளமானது. அது அறை, அறையாகப் பிரிக்கப்பட்டது.

# ஆறு கால்கள் இருந்தாலும் தட்டானால் நன்றாக நடக்க முடியாது.

# தட்டான்களால் வேகமாகப் பறக்க முடியும். பின்னோக்கியும் 50 கி.மீ. மைல் வேகத்தில் பறக்கும்.

# நீரில் வாழும் சிறு உயிரினங்களைத் தட்டான்கள் உணவாக உட்கொள்கின்றன. பெரிய உடல் கொண்ட தட்டான்கள் தலைப்பிரட்டைகள், மீன் குஞ்சுகளையும் சாப்பிடும். காற்றில் பறந்துகொண்டே கொசு, ஈ, பறக்கும் சிறு பூச்சிகளையும் தட்டான்கள் சாப்பிடும்.

# தட்டான்கள் நீர்ப் பகுதிகளுக்கு அருகில் வாழ்பவை. பெண் தட்டான்கள் முட்டைகளை நீரின் மேற்பரப்பிலேயே இடும். நூறு முதல் சில ஆயிரம் வரையிலான முட்டைகளை நீரிலோ, நீருக்கு அருகில் உள்ள பகுதிகளிலோ இடும். முட்டைகள் பொரிய ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளும்.

# தட்டானின் இளம்புழுப் பருவம் நீரிலேயே கழியும். அதற்கு இறக்கைகள் இருக்காது. நீரில் மீன்களைப் போல் செவுள்களால் சுவாசிக்கும்.

# இளம்புழுவாக இருக்கும்போது ஒன்பது முதல் 17 முறை தோலுரித்த பிறகு தட்டான் தண்ணீரிலிருந்து வெளியே வரும். பின்னர் சிறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கிவிடும்.

# இளம்புழுப் பருவத்திலிருந்து நிலத்துக்கு வரும் பருவத்தில் சிறகுகள் முளைக்காமல் இருக்கும் தட்டான்களில் 90 சதவீதத்தை பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் சாப்பிட்டுவிடும்.

# மற்ற பூச்சியினங்களுடன் ஒப்பிடும்போது, தட்டான்களின் பார்வை மிகக் கூர்மையானது. எல்லாக் கோணங்களிலும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது அவற்றின் கூட்டுக் கண்கள். ஒவ்வொரு கூட்டுக் கண்ணிலும் சுமார் 30 ஆயிரம் லென்சுகள் உள்ளன. இந்தப் பார்வைத் திறன்தான் பிற பூச்சிகளின் இயக்கத்தைக் கண்காணித்து மோதாமல் இருக்க உதவுகின்றன.

# பெண் தட்டான்களைக் கவர்வதற்காக ஆண் தட்டான்கள் கடுமையாக மோதிக்கொள்ளும். ஒரு இடத்தில் வசிக்கும் ஆண் தட்டான் பூச்சி வேறு இடத்திலிருந்து வரும் ஆண் தட்டானை தனது எல்லைக்குள் வர அனுமதிக்காது.

# தட்டான்களில் சில இனங்கள் இடம்பெயரும் வழக்கம் உள்ளவை. பருவ நிலைகளுக்கு ஏற்ப இடம் மாறும்.

# சராசரியாக தட்டான் பூச்சிகளின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான். அதிலும் சிறகுகள் முளைத்த பருவத்தில் நாம் பார்க்கும் தட்டான்பூச்சி அதன் பிறகு சில மாதங்களே உயிருடன் இருக்கும். பருவ நிலை வெதுவெதுப்பாகவும் உலர்வாகவும் இருக்கும் காலத்தில் கூடுதல் நாட்கள் உயிர் வாழும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x